பள்ளி மாணவர்களுக்குக் குறிப்பாக, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழை எளிதாக்க அவர்களது பெயர், ஆதார் எண், முகவரி, குருதிப் பிரிவு, தொலைப்பேசி எண் ஆகியவற்றுடன் ஜாதியையும் இணைத்து ‘அடையாள அட்டை’ (Identity Card) வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருப்பது குழப்பத்தை உண்டாக்கும் அறிவிப்பாகும்.
வரவேற்கத்தக்கதல்ல – கண்டிக்கத்தக்கது!
மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வாங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட வேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோள் தான். ஆனால், அதை அடையாள அட்டை ஆக்கித் தருகிறோம் என்பது வரவேற்கத்தக்கதல்ல – கண்டிக்கத்தக்கது!
ஜாதி அடையாளங்களைப் பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டிலோ, மாணவர்களுக்குத் தெரியும் வகையிலோ வெளிப்படுத்தக் கூடாது என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் கல்வித் துறையில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது, ஜாதி அடையாளத்தைக் காட்டும் கயிறுகளைக் கட்டிக் கொண்டு வரக் கூடாது என்று கடந்த ஆட்சியைப் போலவே, இன்றைய கல்வித் துறை அமைச்சரும் அறிவிப்பு விடுத்துள்ளார். ஆனால், அதற்கு நேர்மாறாக ‘ஜாதி அடையாள அட்டை’ என்று வருவாய்த் துறை அமைச்சர் சொல்லியிருப்பது, கேட்கச் சகிக்காத அறிவிப்பாகும்.
நேற்றே (26.6.2026) இது குறித்துக் கண்டனங்கள் எழுந்துவிட்ட நிலையில், இது வரை எந்த மறுப்பும், விளக்கமும் அரசுத் தரப்பில் இருந்து வராதது அதிர்ச்சிக்குரியது. அப்படியொரு திட்டம் இருந்தால் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்; ஆபத்தான விளையாட்டை ஆடக் கூடாது.
அன்றாடம் இப்படி குழப்பமான அறிவிப்புகளை வெளியிடுவதும், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள், விவாதங்களுக்குப் பதிலாக ‘அக்கப்போர்’களையே அரசியலாகப் பேசுவதும் இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் அவலம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
27.6.2026
