‘நீட்’ வினாத்தாளை விலைக்கு விற்றது என்.டி.ஏ. பேராசிரியர்களே சிபிஅய் குற்றப் பத்திரிக்கையில் தகவல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.8-  தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) சேர்ந்த பேராசிரியர்களே பணத்துக்காக நீட் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர் என்று சிபிஅய் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ இளநிலைப் படிப்புகளுக் கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற்றது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஅய் வழக்கு பதிவு செய்து உள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த 72 மூத்த அதிகாரிகள், 8 தடயவியல் வல்லுநர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னி, இயற்பியல் பேராசிரியை மணிஷா சஞ்சய் ஹவல்தார், தனியார் நீட் பயிற்சி மய்ய இயக்குநர் சிவராஜ் ரகுநாத், அழகுகலை வல்லுநர் மணிஷா வாக்மரே, இடைத்தரகர்கள் தனஞ்செய் லோகண்டே, சுபம் கைர்னார், யாஷ்,  மங்கிலால், தினேஷ்,  விகாஷ், மருத்துவர் மனோஜ் ஷிரூரே, தனியார் நீட் பயிற்சி மய்ய ஆசிரியர் ஹர்ஷத் குமார் ஷா ஆகி யோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டில்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஅய் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 28-ஆம் தேதி சிபிஅய் தரப்பில் நீதிமன்றத்தில் 94 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சிபிஅய் குற்றப் பத்திரிகையில் கூறியிருப்பதாவது:

தேசிய தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னி, இயற்பியல் பேராசிரியை மணிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகியோர் பணத்துக்காக நீட் வினாத்தாளை விற்பனை செய் துள்ளனர்.

நீட் வினாத்தாள் தயாரிப்பின்போது இவர்கள் 3 பேரும் வினாக்களை மனப்பாடம் செய்துள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்கு திரும்பி வினாக்களை கைப்பட எழுதி உள்ளனர். மூன்று பேரும் கைப்பிரதியாக தயாரித்த வினாக்கள் மகாராட்டிராவை சேர்ந்த இடைத்தரகர் தனஞ்செய் லோகண்டேவுக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து அரியானாவை சேர்ந்த சுபம் கைர்னார், நீட் வினாத்தாளை வாங்கி உள்ளார். பின்னர் யாஷ், மங்கிலால், தினேஷ் பிவால், விகாஷ் ஆகியோருக்கு நீட் வினாத்தாள் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த இடைத்தரகர்கள் மூலம் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக ஏராளமா னோருக்கு நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இறுதிக் கட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவ, மாணவியருக்கு ஒரு வினாத் தாள் ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இடைத்தரகர்களிடம் இருந்து வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி, அரியானா, ராஜஸ்தான், மகாராட்டிரா மாநிலங்களில் இதுவரை 92 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

360 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. 20,000 பக்க ஆவணங்கள் குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்டு உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய கைப்பேசி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *