காசா, ஆக. 8- இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் 300 நாள்களில், காசாவில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யூனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது.
காசாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், காஸாவில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து காசாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு குழந்தையாவது கொல்லப்பட்டு வருவதாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான யூனிசெஃப் இயக்குநர் எட்வர்ட் பெய்க்பெடர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “2025 அக்டோபரில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிந்தைய 300 நாள்களில், காசாவில் குறைந்தது 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, நாளொன்றுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சுமார் 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
