சென்னை, ஆக. 7– சட்டமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்புவோம், திறமை இருந்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் சொல்லட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவை மரபுகள் மீறல்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (6.8.2026) வேளாண்மை ‘பட்ஜெட்’ நிகழ்வு முடிந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இதை வேளாண்மை ‘பட்ஜெட்’ என்று சொல்வதை விட, முழுக்க ஜால்ரா அடித்து, ஒரு முக்கிய புகழ்பெற்ற அமைச்சர் அவை மரபுகளை மீறி, இந்தச் செயலைச் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமில்லை.
மேகதாது அணை விவகாரம் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய நீரை, கருநாடக அரசு திறக்கவில்லை. ‘திறக்க முடியாது, கொடுக்க முடியாது’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள்.
முதலமைச்சர் ‘நான் போய் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன்’ என்றார். ஆனால், தயவுசெய்து கருநாடகாவுக்கு வராதீர்கள் தண்ணீர் எல்லாம் கொடுக்க முடியாது’ என்று அங்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் சொல்லிவிட்டார்.
ஒத்தி வைப்பு தீர்மானம்
காவிரி மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம் என்று தொடர்ந்து முதலமைச் சருக்கும், இந்த அரசுக்கும் தி.மு.க. சார்பாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறோம். அதற்கு வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்.
விவசாயிகளுக்கான பல வேறு பிரச்சினை களைப் பற்றிப் பேச வேண்டும் என்று நாளைக்கு (7.8.2026) சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும், காவிரிப் பிரச்சினைப் பற்றிப் பேச வேண்டும், விவசாயிகளின் பாதிப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் எங்களுடைய கடிதத்தை கொடுத்திருக்கிறோம்.
அப்போது, இது தொடர்பாக இன்னும் விரிவாகப்பல்வேறு கேள்விகளை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்வார் என்று தமிழ்நாட்டு மக்கள்போல, விவசாய பெருங்குடி மக்கள்போல நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம். தி.மு.க. என்றைக்குமே விவசாயிகளுக்கு துணையாக நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு சவால்
பேட்டியின்போது உதயநிதி ஸ்டாலினிடம், ‘நீங்களும் (தி.மு.க.) வேளாண்மை பட்ஜெட் என்று ஒரு நாடகத்தைப் போட்டீர்கள், அவரும் (த.வெ.க.) அதே நாடகத்தைப் போடுகிறார்’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறாரே?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நாங்கள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் போகிறோம்’ என்று வாக்குறுதி கொடுத்தோமா? நாளைக்கு, இவை அனைத்தையும் சட்டமன்றத்தில் பேச இருக்கிறோம். தைரியம் இருந்தால் முதலமைச்சர் எழுந்து இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். நாங்கள் அவையில் பதில் சொல்கிறோம்.’ என்று கூறினார்.
சட்டமன்றத்திற்கு
கருப்பு உடையில் வந்திருந்த
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றத்தில் வேளாண்மை ‘பட்ஜெட்’ தாக்கல் நிகழ்வில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 3 மாதங்களாக, ‘மேகதாது அணைப் பிரச்சினை’, பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். குருவை சாகுபடி செய்ய முடியாத நிலை இருக்கிறது.
இந்த ஆட்சி அமைந்த கடந்த 3 மாதங்களாக அதிகளவில் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான். எனவே, அவர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் விதமாக, அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எங்கள் தலைவரின் (தி.மு.க.) உத்தரவின் பேரில், தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்புச் சட்டை அணிந்து, எங்கள் எதிர்ப்பை இந்த அரசுக்கு தெரிவித்துள்ளோம்.” என்றார்.
