சத்ரபதி சம்பாஜிநகர், ஆக.6 கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இப்போதைக்கு அரசியலில் ஈடுபடாது என்றும் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஓர் அழுத்தக் குழுவாக மட்டுமே செயல்படும் என்றும் அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
மகாராட்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் நேற்று (5.8.2026) நடைபெற்ற கட்சியின் முக்கியத் தலைவர்களின் கூட்டத்திற்கு முன்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “இந்தியாவிற்கு இப்போது ஒரு புதிய அரசியல் கட்சியைவிட வலுவாக அழுத்தம் தரும் குழுவே தேவைப்படுகிறது. எனவே, சிஜேபி தற்போதைக்கு மக்கள் பிரச்சினைகளில் அழுத்தம் தரும் குழுவாக மட்டுமே இயங்கும்,” என்று அவர் உறுதிபடக் கூறினார்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்ந்து தங்களது அமைப்பின் வழிகாட்டியாகச் செயல்படுவார் என்றும் முக்கிய விவகாரங்களில் அவரது ஆலோசனைகள் பெறப்படும் என்றும் கட்சியின் முதன்மைச் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்தார்.
அண்மையில் ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக சிஜேபி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள்மீது காவல்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்தது. அவற்றை மீட்டுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சவுரவ் தாஸ் கூறினார்.
மேலும், நாடு தழுவிய போராட்டங்களின்போது காயமடைந்த மாணவர்களுக்குத் தேவையான சட்ட, மருத்துவ உதவிகளையும் சிஜேபி வழங்கி வருகிறது.
அரசாங்க அமைப்புகள் மீதான பொதுநம்பிக்கை குறைந்துவருதல், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாடு, அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து கடந்த ஜூன் மாதம் இந்தியா திரும்பிய திப்கே, ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்தார். டில்லியில் திரண்ட இளைஞர்கள் தேர்வுமுறைச் சீர்திருத்தத்தையும் ஒன்றிய கல்வி அமைச்சரின் பதவி விலகலையும் வலியுறுத்தினர்.
‘ஜென் ஸி’ தலைமுறையினரிடையே தீவிரமடைந்த இப்போராட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறி யதை அடுத்து, டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பீகாரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்தது.
விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை,ஆக.6- விபத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் மூலமாக ரூ.2 லட்சம் வரை நிவாரணம் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் தெரிவிப்பதாவது: பத்திரிகையாளர் நல வாரியக் குழுவின் 8, 9-ஆவது கூட்டங்களில் பத்திரிகையாளர்களின் விபத்து மரண நிவாரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பத்திரிகையாளர் நலவாரிய நிதியில் இருந்து விபத்தால் மரணமடையும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், இந்தத் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இல்லாமல், நலவாரிய நிதியில் இருந்தே அளிக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, அதையேற்று தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19, 20-இல் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு
கோவளம், ஆக.6- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு ஆகஸ்ட் 19, 20-ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறவுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும்விதமாக ஒன்றிய அரசால் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 31-ஆவது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு. செங்கல் பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் உணவகத்தில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிப்பார். இதில் தமிழ்நாடு, கேரளம், கருநாடகா, ஆந்திரா, தெலங் கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதலமைச் சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொள்ள இருக் கின்றனர்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கருநாடகா மற்றும் தமிழ்நாடு இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில், இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மாநாட்டை முன்னிட்டு கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநாடு நடைபெறும் பிஷர்மேன் கோவ் உணவக வளாகம், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. விருந்தினர்கள் தங்குமிடங்கள், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படலாம்.
