ஆர்.எஸ்.எஸ்.–சுக்குக் கொட்டப்படும் பண மழை ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்கு பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதி உதவியாம்!

திடுக்கிடும் தகவல்

புதுடில்லி, ஜூலை 20  ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்குப் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதியுதவி வழங்கியிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

குருதட்சணை

‘‘ஆர்.எஸ்.எஸ். என்பது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல; அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை அண்மையில்கூட அதன் தலைவர் மோகன் பாகவத் நிராகரித்தார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது தனி நபர்களின் அமைப்பு மட்டுமே. அது உருவான நாளிலிருந்து பலமுறை தடை செய்யப்பட்டதால், அதன் இருப்பை அரசு ஏற்கெனவே அறிந்திருக்கிறது. இந்து தர்மமே பதிவு செய்யப்படவில்லை. எனவே, ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் பதிவு தேவையில்லை’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறினார். மேலும் ‘‘அரசிடமிருந்து நிதி பெறும் அமைப்புகளுக்கே பதிவு அவசியம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தன்னார்வலர்கள் வழங்கும் குருதட்சணை எனப்படும் காணிக்கைகளே அதன் முக்கிய வருவாய் என்றும், அவை வரி விலக்கு பெற்ற நன்கொடைகள் என்றும் நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சின் நிதி ஆதாரங்கள் வெளிப்படையாக இல்லை. குருதட்சணை மூலம் எவ்வளவு நிதி கிடைக்கிறது என்பது பொதுமக்களுக்குத் தெரியாது.

இதற்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பல அமைப்புகள் பல்வேறு வழிகளில்  நிதி திரட்டுகின்றன. வெளிநாட்டு நிதிகளையும் ஏராளமாய் பெறுகின்றன. அந்த நிதி, இந்தப் பரந்த வலையமைப்பில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பெரும்பாலும் வெளிப்படையாக இல்லை.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய சில பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் அரசின் நிதியையும் பெற்றுள்ளன என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதி உதவி

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.), கடந்த 2013 முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்குப் பெரு நிறுவனச் சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) நிதியாகக் கிட்டத்தட்ட ரூ.671 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்று சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 12 ஆண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்புகளுக்கு ஓ.என்.ஜி.சி. மொத்தம் ரூ.670.97 கோடி நன்கொடையாக வழங்கியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய
20 நிறுவனங்களுக்கு….

இந்த நிறுவனம், இந்தியா முழுவதும் 2,000 நிறுவனங்களுக்கும், திட்டங்களுக்கும் சி.எஸ்.ஆர். மூலம் ரூ.4,531 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த மொத்தத் தொகையில் ஏறத்தாழ 14.7 சதவீத தொகை ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவை ஆர்.எஸ்.எஸ். உடன் நேரடியாக தொடர்புடைய 9 அமைப்புகள், தொடர்புடைய நபர்களால் நிறுவப்பட்ட அல்லது தலைமை தாங்கப்படும் 9 அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைத்த 2 அமைப்புகள்  என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்ச்சை

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள 300 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை, ஆர்.எஸ்.எஸ். மேனாள் தலைவர் ஒருவரின் நெருங்கிய உதவியாளரின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையைச் சேர்ந்த ஓர் அமைப்பு, பெண்களுக்கு சேவை தளமாகக் கொண்ட யோகா அமைப்பு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. இந்தத் தகவல்கள் வெளியாகி இருப்பது, ‘பொதுத்துறை பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி’யின் பயன்பாடு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இது பெரிய சர்ச்சையாகவும் ஆகி இருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *