இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் இது!

5 Min Read

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் ரத்து:
அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கரங்களில் மட்டுமே குவிக்கப்பட்டு,
மாநில அரசுகள் வெறும் ஏவலாளிகளாக மாற்றப்பட்டுள்ளன!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்
பிருந்தா காரத் குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஜூலை 1 – மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் ரத்து– அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கரங்களில் மட்டுமே குவிக்கப்பட்டு, மாநில அரசுகள் வெறும் ஏவலாளிகளாக மாற்றப்பட்டுள்ளன! இந்திய அரசிய லமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாகவும், புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ (VB-GRAMG) சட்டத்தின் வரைவு விதிகளில் உள்ள ஆபத்துகள் குறித்தும், ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் ‘பரபாலா’ என்ற பழங்குடியின கிராமத்தில் வேலை உறுதித் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்றிருந்ததாகக் கடிதத்தில் பிருந்தா காரத் குறிப்பிட்டுள்ளார். அங்கு கடும் வெயிலின் காரணமாகக் காலை 6.30 மணிக்கே பெண்கள் வேலைக்கு வந்து விடுகின்றனர். ஆனால், இணைய தள வருகைப்பதிவுத் தளம் (App) இயங்காததால், சுமார் மூன்றரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, அன்றைய வேலை நாட்களை இழந்து பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவல நிலை அடிக்கடி நிகழ்கிறது.

‘பயோமெட்ரிக் முக அங்கீகார தொழில்நுட்பக் கோளாறு!’

கடந்த டிசம்பரில் இச்சட்டம் கைவிடப்பட்டபோது, புதிய சட்டம் வரும் வரை பணிகள் தடையின்றித் தொடரும் என நாடாளுமன்றத்தில் உறுதி யளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் பெண் தொழிலாளர்களுக்கு வெறும் 18 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ‘பயோமெட்ரிக் முக அங்கீகார தொழில்நுட்பக் கோளாறு’ காரணமாக ஏராளமான ஏழைப் பெண்கள் திட்டத்திலிருந்தே விடுபட்டுப் போயுள்ளனர். தொழிலாளர் சங்கங்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் மே 22 அன்று அமைச்சகம் வெளியிட்ட புதிய வரைவு விதிகள்தான் இந்த அவல நிலைக்குக் காரணம் என்று அவர் சாடியுள்ளார்.

புதிய விதிகள், மாநிலங்களுக்குக் கடமைகளைச் சுமத்துவது குறித்துப் பேசும் அரசமைப்புச் சட்டத்தின் 258 ஆவது பிரிவை அப்பட்டமாக மீறுகின்றன. மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், நிதிச் சுமைகளையும் கடமைகளையும் ஒன்றிய அரசு அவர்கள் மீது பலவந்தமாகச் சுமத்துகிறது. ஆனால், முடிவெடுக்கும் செயல்பாட்டில் மாநிலங்களுக்கு எவ்விதப் பங்கும் அளிக்கப்படவில்லை. அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கரங்களில் மட்டுமே குவிக்கப்பட்டு, மாநில அரசுகள் வெறும் ஏவலாளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

5 முக்கிய ஆபத்துகள்!

புதிய சட்டத்தின் விதிகளை ஆய்வு செய்யும்போது பின்வரும் மிக மோசமான குறைபாடுகள் வெளிப்படுவதாக பிருந்தா காரத் சுட்டிக்காட்டியுள்ளார்:

பாகுபாடான நிதி ஒதுக்கீடு (விதி 396 E):

தேவைக்கேற்ப நிதியளிக்கும் முறை மாற்றப்பட்டு, 16 ஆவது நிதிக் குழுவின் ‘கிடை மட்டப் பகிர்வு’ அளவு கோலின்படி இனி நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் மாநில உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) 42.5% முக்கியத்துவமும், மக்கள் தொகைக்கு 17.5% முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. வேலை கோரும் தொழிலாளர்களின் தேவைக்கும், இதற்கும் என்ன தொடர்பு? மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், சராசரியாக அதிக வேலைநாட்களை வழங்கும் கேரளா போன்ற தென் மாநிலங்களும், தொழிலாளர்கள் அதிகம் உள்ள தமிழ்நாடும் (உயர்ந்த GSDP காரணமாக) இதனால் கடுமையாக நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்கும்.

மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு (விதி 403 E):

வேலை வாய்ப்பை அதிகரிக்க ஒரு மாநில அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கீடு செய்வதை “கூடுதல் செலவு” என இவ்விதிகள் இழிவாகக் குறிப்பிடு கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு அளிப்பதில் “கூடுதல் செலவு” செய்யும் ஒன்றிய அரசு, ஏழைகளுக்கான மாநிலங்களின் செலவினங்களை ஒன்றிய நிதி கண்காணிப்பு அமைப்புடன் கட்டாயமாக இணைப்பது மாநில சுயாட்சியின் மீதான தாக்குதலாகும்.

ஆதார் – e-KYC கட்டாயம் (விதி 397 E):

ஏற்கனவே உள்ள மற்றும் இ- கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்யப்பட்டு ஆதார் எண் இணைக்கப்பட்ட வேலை அட்டைகள் மட்டுமே செல்லும் என்ற சிந்தனையற்ற விதியால், 44% ஏழைத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை மறுக்கப்படும் அபா யம் எழுந்துள்ளது. ஏனெனில், வெறும் 56% தொழிலாளர்கள் மட்டுமே தற்போது e-KYC செய்துள்ளதாக அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ளது. கிராமப்புற உழைப்பாளிகளிடம் ஸ்மார்ட்போன் போன்ற வசதிகள் இல்லாதபோது இதனை எப்படிக் கட்டாயமாக்கலாம்?

ஊதிய முறைகேடு (விதி 402 E):

ஊதிய விகிதங்களை நிர்ணயிப்பது, விலைவாசிப் புள்ளியோடு ஊதியத்தை இணைப்பது குறித்து இந்த விதிகள் மவுனம் காக்கின்றன. இணையதள பதிவிற்காகத் தொழிலாளர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நேரத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் (piece-rated) என்ற பெயரில் உற்பத்தித் திறன் அளவுகோல் மிக அதிகமாகவும், தன்னிச்சையாகவும் நிர்ண யிக்கப்படுவதால் ஏழைகளால் குறைந்த பட்ச ஊதியத்தைக் கூடப் பெற முடிவதில்லை

உணர்வற்ற அதிகாரக் குழுக்கள்:

தேசிய அளவிலான வழிகாட்டு தல் குழு வில் (NLSC) மாநிலங்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 18% பழங்குடியினரும், 17% பட்டியல் ஜாதியினரும், 50%-க்கும் அதிகமான பெண்களும் உள்ள நிலையில், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினர் விவகார அமைச்சகம், சமூக நீதி அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் ஆகிய மூன்றும் இக்குழுவிலிருந்து திட்ட மிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும், பஞ்சாயத்துகளின் அதிகாரங்களும் முழு மையாகப் பறிக்கப்பட்டு, வெளிப்படை யான சமூகத் தணிக்கைக்கான (Social Audit) எந்தவொரு சுயேச்சையான அமைப்பும் இதில் உருவாக்கப்படவில்லை.

விதிகளைத் திரும்பப் பெறவலியுறுத்தல் கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகைகளை அள்ளி வீசும் ஒன்றிய அரசு, ஏழை மக்க ளின் வயிற்றிலடிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள இந்த கார்ப்பரேட் மற்றும் அதி காரத்துவ ஆதரவு விதிகளை உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ரத்து செய்யும் ஆபத்தான முடிவைக் கைவிட்டு, இத்திட்டத்தைத் தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பிருந்தா காரத் தனது கடிதத்தில் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *