குற்றாலம், ஜுன் 30– குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தவிர்க்க முடியாத காரணத்தால், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் காணொலி வாயிலாக பாடம் நடத்தினார். அப்போது, ”நம்முடைய தாய்மொழி தமிழ், இருந்தும் நம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்கள் வைக்கின்றோமா?” என்றும், தமிழர் என்ற உணர்வோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? என்று கேள்வியை எழுப்பி, சிந்திக்கச் செய்தார்.

தென்காசி மாவட்ட சார்பில் 47 ஆம் ஆண்டாக நடைபெற்ற, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குற்றாலம் இராமவர்மபுரம் பகுதியில் உள்ள வீகேயென் மாளிகை இரண்டாம் கட்டடத்தில் இரண்டாம் நாளாக 26.06.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எட்டு வகுப்புகள் நடைபெற்றன. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தென்காசி மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், செயலாளர் வை.சண்முகம், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால்.இராசேந்திரம், குடந்தை மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன், தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட இளைஞரணித் தலைவர் கோபால், பெருவளப்பூர் சித்தார்த்தன், தமிழ்ச் சுடர், தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
முதல் வகுப்பாக, பேராசிரியர் ப.காளிமுத்து, ”திராவிடரா? ஆரியரா?” எனும் தலைப்பிலும், இரண்டாம் வகுப்பாக திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ”என்றும் தேவை பெரியார்” எனும் தலைப்பிலும், மூன்றாம் வகுப்பாக படக்காட்சிகள் வாயிலாக பாடம் நடத்திய கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், “கல்வி வளர்ச்சியும் தடுக்கும் முயற்சிகளும்” எனும் தலைப்பிலும், நான்காம் வகுப்பாக மருத்துவர் இரா.கவுதமன், “மூடநம்பிக்கைகளும் மருத்துவமும்” எனும் தலைப்பிலும், அய்ந்தாம் வகுப்பாக, உளவியலாளர் ஜெ.வெண்ணிலா, “பெரியாரே பெருந்தீர்வு” எனும் தலைப்பிலும், கடந்த 46 ஆண்டுகளாக பங்கேற்று பாடம் நடத்திய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னையிலிருந்து பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எனும் தலைப்பில் பதிவு செய்து அனுப்பிய காணொலி ஆறாம் வகுப்பாகவும், ஏழாம் வகுப்பாக துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “ஜோதிடம், ஜாதகம், வாஸ்து சாஸ்திரம் மூடநம்பிக்கைகள்” எனும் தலைப்பிலும், முழுமையான ‘பெரியார்’ திரைப்படம் எட்டாம் வகுப்பாகவும் நடைபெற்றன. இதில், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஜெ.வெண்ணிலா ஆகியோர் படக்காட்சிகள் துணைகொண்டு பாடம் கற்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு”
எனும் தலைப்பில் காணொலியில்
துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு எனும் தலைப்பில் காணொலி வாயிலாக உரையாற்றிய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஒரு நாட்டு மன்னர் இன்னொரு நாட்டின் மீது எடுப்பது மட்டும் படையெடுப்பு அல்ல, நமது பண்பாட்டின் மீது ஊடுருவி தாக்குவதும் படையெடுப்புதான். அதுதான் பண்பாட்டுப்படையெடுப்பு; பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு” என்று தலைப்புக்கான விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, அதற்கான எடுத்துக்காட்டுகளை முன்பே கேட்டுப் பெற்றிருந்த, பயிற்சிப் பட்டறை மாணவர்கள் சிலரின் பெயர்களைப் படித்தார். அவை சமஸ்கிருதத்தில் இருந்தன. பொருள் புரியாமல் இருக்கும் பெயர்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டினார். அதாவது, “கபிஸ்தலம்” என்ற பெயரின் தமிழ்ப் பெயர், ”குரங்காடுதுறை” என்றார். ”மாயூரம்” என்ற பெயர், “மயிலாடுதுறை” என்றார். இதையெல்லாம் சுட்டிக்காட்டி, ”தமிழன் என்றால் அந்த உணர்வு இருக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்” என்று விளக்கிவிட்டு, தமிழ்ச்சமூகத்தில் எந்தெந்த துறைகளிலெல்லாம் இந்தப் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது என்பதை விவரித்து தமது உரையை நிறைவு செய்தார். இந்த காணொலி உரை சுமார் 40 நிமிடங்கள் இருந்தது. இறுதி வகுப்பாக முழுமையான ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இத்துடன் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலை கதிரவன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிறைவு நாளில் இறுதி வகுப்பாக கேட்டலும், கிளத்தலும் வகுப்பு நடைபெற்றது. இவ்வகுப்பில் மாணவர்கள் எழுத்து மூலம் கேட்கும் கேள்விகளுக்கு, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரிய பதில்களை வழங்கினார். அவ்வகுப்பில் இருபால் மாணாக்கர்களும் சிறந்த கேள்விகளை எழுதிக்கேட்டிருந்தனர். அதற்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகச்சிறப்பான பதில்களை வழங்கிச் சிறப்பித்தார்.
தென்காசி மாவட்டம் சார்பாக, 47 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிறைவு நாள் வகுப்புகள், 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 9:30 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வு, தென்காசி மாவட்டம் குற்றாலம் இராமாலயம் பகுதியில் உள்ள இராமவர்மபுரம் வடக்குத் தெருவில் உள்ள, வீகேயென் இல்லம் இரண்டாம் கட்டடத்தில் நடைபெற்றது.

கேப்டன் ‘வீகேயென்’ ராஜாவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
நான்காம் நாளில் மொத்தம் 4 வகுப்புகளும், குழு ஒளிப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்; ஒத்துழைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றன. நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தென்காசி மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால்.இராசேந்திரம், குடந்தை மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன், தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட இளைஞரணித் தலைவர் கோபால், பெருவளப்பூர் சித்தார்த்தன், தமிழ்ச் சுடர், தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
மணியோசை கேட்டதும் கழகத் தலைவர்!

குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வகுப்புகளின் நேரத்தை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக்கூடாது என்றும், 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே வகுப்பாசியர்களுக்கு எச்சரிக்கை மணி கொடுத்து அவர்களை உரிய நேரத்திற்குள் முடிப்பதற்கு ஏதுவாக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சிப்பட்டறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். ஒவ்வொரு வகுப்பிற்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 40 நிமிடம் தலைப்புகளுக்குரிய பாடமும், 5 நிமிடம் அந்த வகுப்புக்கான கேள்வி நேரமாக வும் ஒட்டுமொத்த பயிற்சிப் பட்டறையும் வடிவமைக் கப்பட்டிருந்தது.
அதன்படி பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். கழகத் தலைவரின் கட்டளையை எந்த அளவுக்கு அவர் கடைபிடித்தார் என்றால், பயிற்சிப்பட்டறையின் நான்காம் நாளில் ”திராவிடம் வெல்லும்” எனும் தலைப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்தார். மணியோசை கேட்ட கழகத் தலைவர் அடுத்த 5 நிமிடங்களில் வகுப்பை நிறைவு செய்தார். அந்த அளவுக்கு 47 ஆம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிகவும் கட்டுப்பாடாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முதல் வகுப்பாக, பேராசிரியர் முனைவர் திருநீலகண்டன், ஜாதி ஒழிய வேண்டும், ஏன்? எனும் தலைப்பிலும், இரண்டாம் வகுப்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “திராவிடம் வெல்லும்” எனும் தலைப்பிலும், மூன்றாம் வகுப்பாக, பொதுச்செலயாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், “புராண இதிகாச புரட்டுகள்” எனும் தலைப்பிலும், நான்காம் வகுப்பாக, கேட்டலும் கிளத்தலும் எனும் மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதிலளிக்கும் வகுப்பாகவும் நடைபெற்றது. தொடர்ந்து, பயிற்சியாளர்களில் ஆண்கள், பெண்கள், பார்வையாளர்கள், பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர்கள் என தனித்தனியாக கழகத் தலைவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். நான்காம் நாளைப் பொறுத்தவரை இருபால் மாணவர்கள் 167 பேரும், பார்வையாளர்கள் மற்றும் பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் அரங்கில் 250 க்கும் மேற்பட்டோர் அமைதியாகவும், ஆர்வத்துடன் பாடங்களை கேட்பவர்களாகவும் அமர்ந்திருந்தனர். இது வகுப்பாசிரியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பதும், இதனால் பாடங்களும் அவர்களிடமிருந்து மிகச்சிறப்பாக வெளிப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக குற்றாலம் நகர செயலாளர் குட்டி. தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா (செங்கோட்டை ரஹமத் உணவக உரிமையாளர்). தென்காசி மாவட்டம் சுரண்டை முத்துக்குமார், இரா.மாரியப்பன், திவான் ஒலி (திமுக) ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன் கேப்டன் வீகேயென் ராஜா, மருத்துவர் கவுதமன், சிவகிரி குருசாமி உள்ளனர்.

வள்ளல் வீகேயென் அவர்களின் மகன் வீகேயென் கேப்டன் ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன் திருமங்கலம் பாலு. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலை கதிரவனுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பேராசிரியர் முனைவர் திருநீலகண்டன் எடுத்த ஜாதி ஒழிய வேண்டும், ஏன்? எனும் வகுப்புக்குப் பிறகு, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு, சிலம்பாட்டக் கலையில் திறமை பெற்றுள்ள, ஆதவன், செழியன் ஆகிய இருவரும் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேடையில் தீவிரமான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தினர். அவ் விருவரையும் பாராட்டிப் பேசி அவர்களுக்கு மரி யாதை செய்துவிட்டு, “சிலம்பாட்டத்தில் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்தினர். மகளிரும் இக்கலையில் தேர்ச்சி பெறவேண்டும். ஆண்களைவிட பெண்கள் தான் இக்கலையை அதிகம் கற்றுக்கொள்ள வேண் டும். அப்போதுதான் மற்றவர்கள் மகளிருக்கு உத விக்கு வரவேண்டியதில்லை. மகளிரே தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம். அதுதான் மிக முக்கியம்” என்று மகளிர் சிலம்பாட்டம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, இரண்டாம் வகுப்பு கழகத் தலைவர் அவர்கள், ”திராவிடம் வெல்லும்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார். அதில் அவர், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததைக் குறிப்பிட்டார். அதற்கு ஆதாரமாக, அக்னி ஹோத்ரம் ராமானுஜத் தாத்தாச்சாரியர் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற புத்தகத்திலிருந்து, தரவுகளை வாசித்துக்காட்டி, இதை நாங்கள் வெளியிட்டதன்று, அவாள்களே வெளியிட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி தரவுகளின் உண்மைத்தன்மையை நிலைநிறுத்தினார். அடுத்து, வர்ண பேதம்தாம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட, மனுதர்மத்தில் 415 ஆம் சுலோகத்தையும் வாசித்துக்காட்டினார். அதில் சூத்திரன் என்பவன் யார்? எனும் தலைப்பின் கீழ் தொழிலாளர்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டிருந்ததையும்,, அதிலொரு வகை, ’பார்ப்பனரின் வைப்பாட்டி மகன்” என்று இருந்ததையும் வாசித்துக்காட்டினார். அதையொட்டியே தந்தை பெரியார் தன்னுடைய இறுதி உரையில், “உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே” என்று தன்னிரக்கப்பட்டதையும் கூறி, மாணவர்களின் இதயங்களை கனக்கச் செய்தார்.
திராவிடம் என்பதை மனுதர்மத்தில் இருக்கும் அவுண்டரம், பவுண்டறம், சீனம், பால்கீகம் உள்ளிட்ட பல்வேறு தனி நாடுகளின் பட்டியிலில் திராவிடம் என்ற சொல்லும் இருப்பதை, ’அசல் மனுதர்மம்’ நூலிலிருந்தே வாசித்துக்காட்டினார். இன்றைக்கும் அரசியல் ரீதியாக தென்னிந்தியா பிரிந்து இருந்தாலும் இனரீதியாக ஒன்றுதான்; அது திராவிடம்தான் என்பதை, ”வாழ்கவே வாழ்க எமது வளமார் திராவிட நாடு வாழ்கவே வாழ்க! பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பன்னிகர் தெலுங்கு, துளு, மலையாளம், கண்டைநிகர் கன்னடமெனும் மொழிகள் கமழ மொழிகள் சிறந்த நாடு” என்ற புரட்சிக்கவிஞர் பாடலை மிகச்சரியாக நினைவூட்டி, ’அனைவருக்கும் மூலமொழி தமிழ், இனம் திராவிடம். அதுதான் தென்னிந்தியா உள்பட பல்வேறு மாநிலங்களில் தனித்தனி மொழிகளாக பரவியுள்ளது என்றும் மெய்பித்தார். அதற்கு மேலும் ஆதாரம் சேர்க்க, இந்திய நாட்டுப்பண்ணில் இருக்கும், ”திராவிட உத்கல பங்கா” விலிருக்கும், திராவிடத்தை சுட்டிக்காட்டினார். இறுதியாக, திராவிடம் என்பதை சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும், ஆரியம் என்பதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ’பிறப்பொக்கும் பிறவி பேதம்’ என்றும் சொல்லலாம்” என்று கூறி தனது வகுப்பை முடித்துக்கொண்டார்.
அடுத்து, கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கற்றுக்கொண்டதிலிருந்தே கேள்விகள் கேட்கும்படி ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அவர்களும் ஆர்வத் துடன் ஏராளமான கேள்விகளை எழுதிக்கொடுத்திருந்தனர். அவற்றில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த கேள்விகளைத் தவிர்த்து, 10 கேள்விகளாக வடிகட்டி, ஒன்றன் பின் ஒன்றாக கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாசித்தார். அதற்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிதானமாக விடையிறுத்தார். மாணவர்கள் ஒவ்வொரு விடையிறுத்தலின் போதும், மனநிறைவுடன் கைகளைத் தட்டி தங்களின் ஏற்பை பதிவு செய்தனர். கேட்டலும் கிளத்தலும் வகுப்பு நிறைவு பெற்றவுடன், மகளிர் சார்பில் இலக்கியா, ஜெயலட்சுமி ஆகிய இருவரும், ஆண்கள் சார்பில் ஆதவன் ஆகியோர் பயிற்சிப்பட்டறையின் பயன் பற்றி நெழ்ச்சியுடன் உரையாற்றினர். அடுத்து குழு ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அடுத்து, சிறப்பாக பாடங்களை குறிப்புகள் எடுத்த தற்காக, அன்புச்செழியன், சாருக்கான், விஜயலட்சுமி, சுசித்ரா, உதய்சங்கர் ஆகியோருக்கு முறையே முதல் அய்ந்து பரிசுகளாக வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் பாடம் பற்றிய குறிப்புகளை எழுதியிருந்த அபிநயா ராமனுக்கு சிறப்புப் பரிசாக புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். பட்டிமன்றத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் புத்தகங்கள் பரிசுகளாக வழங்கபட்டன. இப்பரிசுகளை பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் புத்தகத் தொகுப்புகளை கழகத் தலைவர் மூலம் வழங்கினார். இவர் ஒவ்வொரு ஆண்டும் இப்படி வழங்குவதை வழமையாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுசமயம், தென்காசி தி.மு.க. எம்.எல்.ஏ., கலைக்கதிரவனுக்கு, கழகத் தலைவர் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். மகிழ்ச்சியுடன் கலைக்கதிரவன் அவர்களும் கழகத் தலைவருக்கு மரியாதை செய்தார். தொடர்ந்து குற்றாலம் நகரச் செயலாளர் ஆசிரியருக்கு மரியாதை செய்தார். மேலமெய்ஞானபுரம் கழகத் தோழர் முருகன் ரூ.10,000/-வழங்கினார். அதைத்தொடர்ந்து, கழகப்பொறுப்பாளர்கள் பயிற்சிப்பட்டறைக்கான நன்கொடைகள் கழகத் தலைவரிடம் அடுத்தடுத்து வழங்கினர். தொடர்ந்து வீகேயென் மகன் கேப்டன், வீகேயென் ராஜா, திருப்பரங்குன்றம் மேனாள் நகர் மன்றத் தலைவர், வீகேயென் மாளிகைத் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. மாணவர் கழகத் தோழர்கள் தனியாக கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். நான்கு நாட்களில் 1,43,920 ரூபாய் மதிப்புள்ள இயக்கப் புத்தகங்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் ரூபாய் 71,960 க்கு, மாணவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின் படி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்காசி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பயிற்சியாளர்கள், தோழர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என வருகை தந்திருந்தனர். வகுப்பாசிரியகளும் மிகுந்த பாரட்டுக் குரியவர்கள். மொத்தத்தில் இந்த 47 ஆம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிகச்சிறப்பான நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
