மீண்டும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

2 Min Read

புதுடில்லி ஜூன் 30- நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் கருநாடகாவில் இருந்து மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நேற்று (29.6.2026) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (84), கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தார். அவருடைய பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கருநாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று (29.6.2026) நாடாளுமன்றத்தில் அவர் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து, ‘மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார்’ என்று காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ் வாதி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை வலுவாக ஒலிப்பதிலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவதிலும் கார்கேவின் அனுபவம் மிக முக்கியமானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மருத்துவமனையில்

 இருமல் மருந்தை கண்ணில் விட்டதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு!

ஊழியர்களின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபரீதம்

போபால், ஜூன் 30 மத்திய பிரதேச மாநிலம், பூசா கமல்பூர் கிராமத்தை சேர்ந்த இந்திரராஜ், தனது 19 மாத ஆண் குழந்தைக்கு லேசான சளி, இருமலுடன் கண்கள் சிவந்ததால் குழந்தையை பண்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு குழந்தை நல மருத்துவர் ஹிமான்ஷு வர்மா குழந்தையை பரிசோதித்து விட்டு, கண்சொட்டு மருந்து, பாராசிட்டமால் மற்றும் பிற மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். ஆனால் ஊழியர்கள் தவறுதலாக, கண் சொட்டு மருந்துக்கு பதிலாக, இருமல் மருந்தை குழந்தையின் கண்களில் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் நிலைமை மோசமடைந்ததால் போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை தனது கண் பார்வையை நிரந்தரமாக இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பண்டா காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *