பிரதமரின் ‘‘பிரமாதமான மூடநம்பிக்கை ஒழிப்பு’’ – பாரீர்!

3 Min Read

வாராவாரம், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘மனதின் குரல்’ (‘மங்கிபாத்’) நிகழ்வில் நாட்டு மக்களுக்குப் பல அறிவுரைகளை இலவசமாகவே வழங்கி வருகிறார்!

இதுவரை இத்தனை ஆண்டுகளில் அவர் பேசாத ஒரு புதுமையான கருத்து என்று ஒரு மாலை நாளேடு தலைப்பிலேயே பகுத்தறிவுவாதிகளுக்கே படு அதிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக அச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இதோ அச்செய்தி!

‘‘மூடநம்பிக்கைகளை பின்பற்றக்கூடாது!’’

விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்கள் Plaster of Paris–இல் செய்த சிலைகளை வாங்கக்கூடாது; களிமண்ணால் செய்யப்படும் சிலைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது; விஞ்ஞானத்தின் அடிப்படையில்  செயல்பட வேண்டும்; மூடநம்பிக்கைகளைப் பின்பற்றக்கூடாது!

– ‘மனதில் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

– ‘மாலைமுரசு, 28.6.2026

என்ன, அற்புதமான அறிவுரை!

அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு – ‘‘அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் – மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்தினை வளர்த்தெ டுப்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை’’ என்பதில் என்ன அவருக்கு ‘திடீர் நினைப்பு – அக்கறை’ என்பது முதலில் அதைப் படித்த பலருக்கும் மிகப்பெரிய அதிசயக் கேள்வியாக எழுவது இயற்கைதான்!

தலைப்பிற்கேற்ப உள்ளே அவர் கூறிய கருத்து – எவ்வளவு தூரம் மூடநம்பிக்கை ஒழிப்புக்கு ஒத்துப் போகும் கருத்து? அல்லது ‘எது மூடநம்பிக்கை’ என்பதற்குப் புதிய ‘‘அறிவியல்’’ சார்ந்த  விளக்கமா?

பலரின் ‘சிற்றறிவு’க்கு எட்டவே இல்லை! எளிதில் விளங்கவில்லை!

‘‘பிள்ளையார் சதுர்த்திக்குச் சிலை வைப்பவர்கள், ‘‘Plaster of Paris’’ இல்  செய்த சிலைகளை வைத்தால், சுற்றுச்சூழலை அது மாசுபடுத்துவதால், அதற்குப் பதில் களிமண்ணில் செய்த பிள்ளையார் சிலைகளை வைக்கவேண்டும். காரணம், அது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது’’ என்றார்.

நம்ம ஆபீஸ் பையனுக்கு இதைப் படித்தவுடன், பிரதமர் மோடி ஜியிடமே கேட்டுத் தெளிவு அடைய எழுந்த சந்தேகங்கள்:

விஞ்ஞானிகள்,  பிள்ளையார் சிலைகளைக் களி மண்ணால் செய்து, பிறகு பலப் பல வண்ணங்கள் பூசி, ஆறுகால பூஜை செய்து, ஆற்றில் கரைக்கும்போது, அது தண்ணீரோடு கலந்து, வெகுவாகச் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்துவதால், அதற்குத் தடை விதிக்கின்ற அரசின் பசுமைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் எடுக்கும் முயற்சியை, ‘மத விஷயங்களில், மத நம்பிக்கையையொட்டிய பண்டிகை விழாக்களில் தலையிடுவது சரியா?’ என்று ஒப்பாரி வைக்கும் காவிகள்தானே அதைக் கேட்கிறார்கள்!

மூட நம்பிக்கை என்பது ‘‘Plaster of Paris’’  சிலையில்தானா?

பார்வதியை, சிவன் திருப்திப்படுத்த காட்டு யானை யைத் தேடி, கழுத்தை வெட்டி, செத்த பிள்ளையார் உடலில் வைத்தவுடன், யானை முகத்துடன் பிள்ளையார் எழுந்தார் என்று, பிள்ளையார் பிறப்புபற்றிய பல கதைகளில் ஒன்றின்படி செய்த புராணக் கதையை அகில உலக விஞ்ஞானிகள் மாநாடு, மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதில், அதில் பிரதமர் என்ற நிலையில் அழைக்கப்பட்டுப் பேசிய மோடி ஜி அவர்கள் ‘‘‘பிளாஸ்டிக் சர்ஜரி’யை இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரமசிவன் கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்திக் காட்டினார்’’ என்று பேசினார்.

தனது தொடக்க உரையில் பேசியவுடன், நமது தமிழ்நாட்டில் படித்துப் பெரிய விஞ்ஞானியாகி, நோபல் பரிசு பெற்றவரான விஞ்ஞானி வெங்கட்ராமன் அவர்கள்! அவரும் பிறப்பால் உயர்ஜாதிக்காரரே! ஆனால், சிந்தனை மாறுபட்டது. இந்தப் பெரு உண்மை – கண்டுபிடிப்பு நமக்குத் தெரியவில்லையே என்று கருதியோ, என்னவோ, உடனே தலையில் அடித்துக்கொண்டு, மாநாட்டை விட்டு வெளியேறினார்!

இப்போது மூடநம்பிக்கைக்கு, முற்றிலும் புது வியாக்கியானம்; புதுமை, புர்–ர–ரட்சிகர விளக்கம்!!

‘எல்லாம் வல்ல கடவுளை’, ‘விக்கினம் இல்லா விக்னேஸ்வரனைக்’ களிமண்ணால் செய்து, பத்து நாள்கள் கழித்து, ஆற்றிலோ, கடலிலோ கரைத்து விடுவதுதான் விஞ்ஞானத்தின் அடிப்படையா? நாமே செய்தவன் எப்படி கடவுள் ஆவான்? என்று கேட்பதுதான் விஞ்ஞானம்!

‘அந்தோ, ஞானத்தங்கமே, தங்கம்!’

அடுத்த ‘மனதின் குரலில்’ (‘மங்கிபாத்’தில்) விளக்கம் தந்தால் நல்லது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *