புதுடில்லி, ஜூன் 29- ஆப்கா னிஸ்தானில் நேற்று (27.6.2026) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தியாவின் தலைநகர் டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர்.
நிலநடுக்கம்
தேசிய நில அதிர்வு மய்யத்தின் (NCS) அதிகாரப்பூர்வ தகவலின்படி, நேற்று (27.6.2026) மாலை 7:04 மணி அளவில் ஆப்கானிஸ்தானின் ஜூர்ம் பகுதிக்கு தெற்கே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 215 கி.மீ ஆழத்தில் மய்யம் கொண்டிருந்ததாகவும், இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வடஇந்தியாவில்
எதிரொலித்த அதிர்வுகள்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த வலுவான நிலநடுக்கத்தின் எதிரொலியாக, இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.
மாலை நேரத்தில் திடீரென வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
டில்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நில அதிர்வால் மக்கள் மத்தியில் தற்காலிகமாகப் பயமும் பதற்றமும் நிலவிய போதிலும், நல்ல வாய்ப்பாக இந்த நில அதிர்வுகளால் எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
