மும்பை, ஜூன் 29- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராட்டிராவில், 6 லட்சம் மாண வர்கள் எழுதவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வினாத்தாள் கசிவு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தி ஓய்வதற்குள், அடுத்தடுத்து நடக்கும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளன.
தானேவில் நள்ளிரவு ரெய்டு:
3 பேர் கைது
மகாராட்டிரா முழுவதும் நேற்று (28.6.2026) 1,728 மய்யங்களில் 6 லட்சம் பேர் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவிருந்தனர். இந்நிலையில், தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் சிலர் வினாத்தாளை சட்டவிரோதமாக வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, 27.6.2026 அன்று அதிகாலை காவல் துறையினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் மற்றும் வினாத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. மாநில தேர்வுக் கவுன்சில் அதிகாரிகள் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது, உண்மையான வினாத்தாளில் இருந்த பல கேள்விகள் அதனுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த ராஜீவ் ஷா, ஆகாஷ் குமார் மற்றும் அரியா னாவைச் சேர்ந்த தீரஜ் குமார் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டவரைப் பிடிக்க சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடு உறுதியானதால், தேர்வை ரத்து செய்வதாக மகாராட்டிரா மாநில தேர்வுக் கவுன்சில் அறிவித் துள்ளது.
மாணவர்கள் கொந்தளிப்பு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டில்லியில் ஆயிரக்கணக்கான மாண வர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்த மறுநாளே மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு சம்பவம் அரங்கேறியுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர் போராட்டங்களை பெரும்பாலான முக்கிய ஊடகங்கள் மறைப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பிரபல கல்வியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் டில்லி ஜந்தர் மந்தரில் 28.6.2026 அன்று முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளார்.
ராகுல் காந்தி சாடல்
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில்,
“மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு, மீண்டும் ஒரு தேர்வு ரத்து. இம்முறை மகாராட்டிராவின் ஆசிரியர் தகுதித் தேர்வு. நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையானது ஒரு கொள்ளையடிக்கும் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்ல, நமது இளைஞர்களின் எதிர்காலத்தைத் திருடும் செயலாகும்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், போட்டித் தேர்வு களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் அரசு மீண்டும் தோல்வி யடைந்துள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
