‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

புனே, மே 17 நீட் தேர்வுக்கான வினாத் தாள் கசிய காரணமாக இருந்த முக்கியக் குற்றவாளி புனேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது.

இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு அடுத்த மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சி.பி.அய் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வினாத்தாள் ஆரம்பத்தில் நாசிக்கில் இருந்து கசிந்ததாகத் தெரிய வந்தது. நாசிக்கைச் சேர்ந்த ஒரு மாணவர் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர் புனேயைச் சேர்ந்த ஒருவரிடம் தனக்கு கிடைத்த வினாத்தாளைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த நபர் குறித்து சி.பி.அய் விசாரணை நடத்தி வந்தது. இதில் புனேயைச் சேர்ந்த பேராசிரியர் பி.வி.குல்கர்னி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். லாத்தூரைச் சேர்ந்த அவர், புனேயில் ‘ராஜ் கோச்சிங் கிளாசஸ்’ என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கான பயிற்சியும் கொடுத்து வருகிறார்.

அவர் தனது கோச்சிங் கிளாசில் படித்த மாணவர்களுக்குக் கடந்த மாதம் கடைசி வாரத்தில் சில கேள்விகளையும், அதற்கான விடைகளையும் கொடுத்து எழுதிக்கொள்ளும்படி சொல்லி இருந்தார். தேர்வு முடிந்த பிறகு அந்தக் கேள்விகளையும், தேர்வுக்கு வந்த கேள்விகளையும் ஒப்பிட்டு பார்த்ததில் பெரும்பாலான கேள்விகள் பேராசிரியர் குல்கர்னி கொடுத்திருந்த கேள்விகளோடு ஒத்துப்போனது.

குல்கர்னியுடன் தொடர்புடைய மனிஷா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவர் மாணவர் களிடம் நீட் வினாத்தாள் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை குல்கர்னியிடம் அழைத்து சென்றுள்ளார்.

இதற்காக மாணவர்களிடம் மனீஷா லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார். குல்கர்னி தனியார் பள்ளியில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குல்கர்னி தனக்கு கிடைத்த வினாத்தாளைப் பின்னர் குருகிராமை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதோடு அவர் நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாக இருந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் சி.பி.அய் நாடு முழுவதும் ரெய்டு நடத்தி நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள், கைப்பேசி, மின்னணு  சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. அதோடு இம்மோசடி தொடர்பாக இதுவரை ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே மற்றும் அஹில்யநகர் ஆகிய இடங்களிலிருந்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் அய்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *