சென்னை, ஜூன் 26 செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியரின் 13 வயது மகள், அண்டை வீட்டு சிறுவன் உள்ளிட்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு தொடர்பாக 6 சிறார்கள் உட்பட 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
போக்சோ சிறப்பு நீதிமன்றம்
இதில் 6 சிறார்கள் மீதான வழக்கு செங்கல்பட்டில் உள்ள சிறார் நீதிமன்றத்திலும், மற்ற 9 பேர் மீதான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்திலும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வந்தன.
மகளின் படிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக தந்தை மனு: பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
தனது மகள் தற்போது சென்னையில் படித்து வருவதால், இந்த வழக்குகளை சென்னைக்கு மாற்றினால் அவளது படிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. சிறுமி எவ்வித சிரமமும் இன்றி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இது வசதியாக இருக்கும்.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியம் அளிப்பதற்கான சாதகமான மற்றும் பாதுகாப்பான சூழல் குறைவாக உள்ளது. எனவே, இந்த வழக்குகளை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு:
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் உள்ள 6 சிறார்களுக்கு எதிரான வழக்கு,செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள 9 பேருக்கு எதிரான வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் சென்னைக்கு முழுமையாக மாற்றம் செய்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமி இனி எவ்வித அச்சமும், அலைச்சலும் இன்றி சென்னையில் உள்ள நீதிமன்றங்களிலேயே சாட்சியம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
