குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பணி மற்றும் பெரியார் புரா திட்ட கிராமங்களில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக களப் பணி
தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, பூதலூர் மற்றும் வளம்பகுடி கிராமங்கள் பெரியார் புரா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களாகும். பன்னாட்டு குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு குழந்தைகள் நீதியியல் துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுவுடன் இணைந்து இந்த நாளில் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வும் களப்பணியும் இவ்விரு கிராமங்களில் 16.06.2026 அன்று நடத்தப்பட்டது.
பெரியார் புரா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெ.சுகுமாரன் தனது தலைமை உரையில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்களும் செங்கல் சூலை, கால்நடை மேய்ப்பு, சுரங்கப்பணி, உணவு விடுதி பணி உள்ளிட்ட பல பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு உயர்கல்விக்கு செல்லும் மாண வர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதோடு, பள்ளிக் கல்வியிலேயே இடைநிற்றல் அதிகமாகி வருகிறது என்கிற அதிர்ச்சி தரும் தகவல்களையும் அவர் தனது உரையில் தெரி வித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கருத்தாளராக பங்கேற்ற மகளிர் மற்றும் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் சொர்னா சூரியமூர்த்தி வீடுகளில் பெற்றோருக்கு உதவுவது குழந்தை தொழிலாளர் முறை எனக் கொள்ள முடியாது மாறாக ஊதியத்திற்கு பெரியவர்கள் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதே குழந்தை தொழிலாளர்கள் என அழைக்கப்படுகிறது. மாணவர்கள் பெற்றோரைப் போற்றி ஆசிரியர்களை நன்கு பயன்படுத்தி உயரிய நிலையை அடையவேண்டும் அனைவரையும் படிக்கச் செய்ய வேண்டுமென்று அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் நலச்சங்கத்தின் அலுவலர் டென்னிஸ்மேரி நமது ஊரில் இடைநிற்றல் அதிகம் இருப்பதோடு வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகள் கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்பட்டு பெரியவர்கள் செய்யும் பணியைச் செய்யச் சொல்லி சித்ரவதை செய்யப்படுவதையும் அவர்களை மீட்டு உரிய வகையில் கல்வி வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது நம் அனைவரின் கடமை என்றார். குழந்தைத் திருமணம், குழந்தை வயதில் பிரசவம் குறித்து என ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள், குழந்தைகளை குற்றச் செயலில் ஈடுபடுத்தும் கொடுமை குறித்தெல்லாம் எளிமையாக விளக்கினார்.
களப்பணியின்போது வளம்பகுடி கிராமத்தில் 13 வயதுடைய தினேஷ் என்னும் 6ஆம் வகுப்பு சிறுவன் பள்ளி செல்லாதது குறித்து ஆய்வு செய்து அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆலோசனை வழங்கி அந்த சிறுவன் பள்ளியில் கொண்டு வந்து மீண்டும் சேர்க்கப்பட்டான் பெற்றோரின் அதீத பாசம் குழந்தையை பள்ளி செல்லாமல் செய்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆச்சாம்பட்டி, புதுக்குடி போன்ற கிராமங்களில் நிலவும் இடைநிற்றல் அதிகம் உள்ள பள்ளிகளை கண்டறிந்து பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட பெரியார் புரா திட்டம் உறுதியேற்றது.
இந்த நிகழ்வுகளில் வளம்பகுடி ஊராட்சி ஒன்றியபள்ளி மற்றும் பூதலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலை முற்றிலும் ஒழிக்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடர்களப்பணிகளை பள்ளி நிர்வாகத்துடனும் அரசுத் துறை களுடன் இணைந்து மேற்கொள்ள பெரியார் புரா திட்டத்தினர் உறுதி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்று மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரி யர்களுடனும் வட்டார கல்வி அலுவலர் சங்கீதா கலந்துரை யாடலுடன் உரை நிகழ்த்தினார். இரு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு மூச்சோடு இந்த பணிகளையும், ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
