சென்னை, ஜூன் 18- தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி இந்த ஆண்டு மொத்தம் வேலை நாட்கள் 210 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும் இந்த ஆண்டில் பெரும்பாலான சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டு உள்ளது.
தேர்வுகள்
இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கி 25ஆம தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை ஆகும். புத்தாண்டிற்கு பின்னர் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தொடர் விடுமுறைகள்
செப்டம்பர் 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி ஆதலால், அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களாக அமைகிறது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. தொடர்ந்து, செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி ஆதலால், அதற்கு முன்னர் இருக்கும் வார விடுமுறையுடன் சேர்ந்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
விதிமுறை
அக்டோபர் மாதத்தில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னர் இருக்கும் வார விடுமுறையுடன் சேர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
நவம்பர் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், வார விடுமுறையாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. மேலும், தமிழர் திருநாளான பொங்கல் விழா 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கோடை விடுமுறை
அதன் தொடர்ச்சியாக, 2027 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
2026-2027ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 365 நாட்களில் வேலை நாட்கள் 210 நாட்களாகவும், விடுமுறை நாட்கள் 155 ஆகவும் உள்ளன. இதில், ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
