*தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்;
* பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும்!
* ஜாதி வாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசின் சென்சசுடன் விரைந்து சேர்த்து நடத்த வற்புறுத்தப்படும்!
சென்னை, ஜூன் 18 தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என்றும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (18.6.2026) தொடங்கிய நிலையில், சட்டமன்றத்திற்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார். சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் 5 ஆவது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17 ஆவது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தொடர்ந்து அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது. முடிவிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. இது முந்தைய மரபுக்கு மாறானது!
இன்று (18.6.2026) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடிய நிலையில், ஆளுநர் அர்லேகர் 9.50 மணிக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோட்டைப் பிரதான கட்டடத்தின் 2 ஆவது நுழைவு வாயில் அருகே காவல்துறையினரின் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநரை சட்டப்பேரவைக்குப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் சாந்தி அழைத்து வந்தனர். அவைக்கு வந்ததும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ‘வணக்கம்’ எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். தமிழ்நாடு புதிய அரசு தயாரித்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார். கடந்த சில ஆண்டுகளாக அரசின் உரை வாசிக்கப்படாதது பேசுபொருளான நிலையில் புதிய ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் அர்லேகர் நிறைவு செய்தார். சட்டப்பேர வையின் 17 ஆவது கூட்டத்தொடரில் 39 நிமிடங்கள் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையை வாசித்து முடித்ததும் அந்த உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது.
ஆளுநர் உரையில் குறிப்பிட்ட முக்கிய சாராம்சம் வருமாறு:
இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி அளிக்கப்படும். கனிம வள கொள்ளையை தடுக்க அரசு இரும்புக்கர நடவடிக்கை எடுக்கும். 18,274 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டு உள்ளது. இடைத்தரகர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த பின் மாநில அரசு சமூக நீதி கணக்கெடுப்பை மேற்கெள்ளும். தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்குப் பின் இருமொழி கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது.இருமொழிக் கொள்கையே இந்த அரசும் தொடர்ந்து பின்பற்றும். ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பொது பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். மும்மொழி கொள்கையை வலியுறுத்தி மாநிலத்திற்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு மறுக்கக்கூடாது.
மாநில உரிமை, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூகநீதி, சம வாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் நலன், கல்வி,மருத்துவம் மற்றும் சுகாதாரம், உரிய பிரதிநிதித்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்த அரசு சட்டங்களை இயற்றும்.
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
23.6.2026 ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தலைமை யில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
