பாரதிராஜா ‘வேதம் புதிது’ – சில தகவல்கள்!

9 Min Read

‘‘இயக்குநர் இமயம்’’  என்றும், ‘‘புரட்சிக் கலைவேந்தர்’’ என்றும் (திராவிடர் கழகம் புரட்சிக் கவிஞர் விழாவில் அளித்த விருதும் – பட்டமும்) போன்ற பட்டங்களைப் பெற்ற பாரதிராஜா தமது 84ஆம் வயதில் (10.6.2026) மறைவுற்றார்.

சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பிறந்த ஊர் தேனியையடுத்த அல்லி நகரமாகும்.

கிராமத்து மண் வாசனையைத் திரையுலகில் உலா வரச் செய்தவர்!

அவர் இயக்கிய ‘‘வேதம் புதிது’’ என்ற திரைப்படம் ஆரியத்தை அலற அடித்தது.

ஜாதி – ஸநாதனம் – மூடநம்பிக்கைகளைச் சக்கை சக்கையாகக் கிழித்துத் தொங்க விட்டது இந்த திரைப்படம். படத்தின் நாயகராக ‘இனமுரசு’ சத்யராஜ்  – கேட்கவும் வேண்டுமோ! இதோ சில காட்சிகள்!

தமிழ்நாடு

பாலுத்தேவர் (சத்யராஜ்), சாஸ்திரி (சாருஹாசன்) உரையாடல்

சாஸ்திரி: என் பொண்ணு வைதேகிக்கு வரன் பார்த்திருக்கேன். இது ஆடி மாசமில்லையா? அடுத்த மாசம் நிச்சயம் பண்ணி அய்ப்பசியில் கல்யாணம் வச்சுக்கலாமுன்னு இருக்கேன். அவாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுட்டு உங்க கிட்ட வரலாம்னு இருந்தேன்.

பாலுத்தேவர்: என்னடா ஒரு நாத்திகன் ஆத்திகன்கிட்ட கேட்கறான்னு தப்பா நினைக்காதீங்க. புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு அஹ்ரகாரத்திலிருந்து போனாலும் சரி, இல்ல எங்கிட்டு இருந்து போனாலும் சரி.. இங்கிட்டு இருந்து போற பொண்ணு என் வீட்டு சீதனத்தோட போகணும். அம்புடுதான். சரி பையன் எந்த இடம்?

சாஸ்திரி: கொக்கரகுளம்

பாலுத்தேவர்: கொக்கரக்குளமா? அங்கிருக்கிற அய்யமாருங்கள்ளாம் நமக்குத் தெரிஞ்சவங்கதான். நான் சொன்னா யாரும் தட்ட மாட்டாங்க. பையன் யாருன்னு சொல்லுங்க. வேலையை சுலுவா முடிச்சுருவோம்.

சாஸ்திரி: இதோ (கைப்பையில் கடிதத்தைத் தேடுகிறார்) பையிலதான வச்சேன். அடடா… கடுதாசியை ஆத்துல வச்சுட்டு வந்துட்டேன்.

பாலுத்தேவர்: அப்போ முக்கியமான சமாச்சாரத்தை வீட்டுல வச்சுட்டு வந்திட்டீங்க. ம்… சகுனமெல்லாம் பார்த்திருப்பீங்களே?

சாஸ்திரி: ஆங்… திவ்யமா இருந்ததே.

பாலுத்தேவர்: எது தேவையோ அதை விட்டுடுங்க. எது தேவையில்லையோ அந்த சகுனத்தையெல்லாம் பார்த்துட்டு வந்துடுங்க.

சாஸ்திரி: இந்தக் குத்தல்தானே வேண்டாங்கறது.

பாலுத்தேவர்: (சிரித்துக்கொண்டே) சரி, பஸ் வந்துரும். வீட்டுக்கு ஒரு நடை நடந்து அந்தக் கடுதாசியை எடுத்துட்டு வந்துடுங்க.

குருக்களின் மகள் (அமலா) ‘சூத்திர’ ஜாதியினர் வணங்கும் கடவுள் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வருகிறாள். உடன் அமலாவின் தம்பி வருகிறான். இருவருக்கும் இடையில் உரையாடல்.

தம்பி: இதையெல்லாம் சாப்பிடலாமாக்கா?

அக்கா: இது சாமி பிரசாதம். சாப்பிட்டா தப்பில்லே.

தம்பி: ஆனா, இது அவா பண்ணதாச்சே?

அக்கா: அதனாலென்ன? இத சாப்பிடாட்டி சாமி கோச்சுண்டுவார்.

தம்பி: சாப்பிட்டா அப்பா கோச்சுக்குவாரே

(அக்கா அந்தப் பிரசாதத்தை வேறொரு கோயில் படியில் வைத்துவிட்டு செல்கிறாள்)

பாலுத்தேவரும், சங்கரனும் ஆற்றைக் கடக்கின்றனர்.

(இருவருக்குமிடையில் உரையாடல்)

பாலுத்தேவர்: சங்கரா. ஏண்டா உம்முன்னு வர்றே?

சங்கரன்: ஆத்தப் பார்த் தவுடனே நான் எங்கப்பாவ நினைச்சுண்டேன்!

பாலுத்தேவர்: நான் எம் புள்ளைய நினைச்சுட்டேன்.

சங்கரன்: எங்கப்பா இருக்கும் போது இப்படி போறச்சே சாமி கதையெல்லாம் சொல்லித் தருவா! எங்கப்பா போனதுக்கப்புறம் அதெல்லாம் யாருமே சொல்லித் தர்றதில்லே.

பாலுத்தேவர்: நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன். தெரிஞ்சா சொல்லிக் குடுத்திருவனேப்பா. சரி, யாரோ… எப்பவோ என் காதுல சொன்னதை அவுத்து விடறேன். ஆத்தத் தாண்டற வரைக்கும் பொழுது போகணுமே.

இந்த மாதிரி ஆத்தக் கடக்குறதுக்கு உங்கப்பாரு மாதிரி வேதம் தெரிஞ்சவரு படகுல ஏறியிருக்காரு. அந்தத் தோணிக்காரன் கைநாட்டுக்காரன் – என்னய மாதிரி. படகுல போகையில தோணிக்காரன்கிட்ட கேட்டி ருக்காரு. ‘‘ஏம்பா உனக்கு இராமாயணம் தெரியுமான்னு?’’

அவன் சொல்லியிருக்கான், ‘‘எனக்குத் தெரியாது சாமி’’ன்னு. ‘‘அடடா வாழ்க்கையில ஒரு பத்து வருசத்த வீணாக்கிட்டியே’’ அப்படின்னாரு.

‘‘மகாபாரதம் தெரியுமா?’’ன்னு கேட்டி ருக்காரு. அதுக்கும் ‘‘தெரியாது சாமி’’ன்னு சொல்லியிருக்காரு.

‘‘என்னப்பா இது. 20 வருசத்தை வீணாக் கிட்டியே’’ அப்பிடின்னு சொல்லியிருக்காரு.

‘‘கிருஷ்ணு உபதேசமாவது தெரியுமா?’’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு அந்தத் தோணிக்காரன் ‘‘தெரியாது சாமி’’ன்னு  சொல்லியிருக்கான். ‘‘போச்சேப்பா 30 வரு சத்தை வீணாக்கியிட்டியே’’ அப்பிடின்னாரு.

பேசிகிட்டே இருக்கையில… படகு ஓட்டை விழுந்து தண்ணி உள்ள வந்திருச்சு. இப்போ தோணிக்காரன் திருப்பி அடிச்சிருக்கான். ‘‘ஏஞ்சாமி உனக்கு நீச்சல் தெரியுமான்னு?’’ சாஸ்திரி சொல்லியிருக்காரு. ‘‘தெரியாதுப்பான்னு’’. ஓட்டுமொத்தமா உங்க வாழ்க்கையே போச்சேன்னு தோணிக்காரன் சொல்லியிருக்கான். இருவரும் சிரிக்கின்றனர்.

பாலுத்தேவர்: அதனால பொழப்புக்கு எது தேவையோ அதத்தான் கத்துக்கணும். நீ என்னடான்னா வேதம்தான் கத்துக்கு வேன்ங்கறே? ஆனா, உங்க ஆளுங்க கத்துக் கொடுக்க மாட்டேங்கறாங்க. உன்னை எப்படி கரை சேர்க்கப்போறேன்னு தெரியலயே?

(ஆற்றைக் கடந்ததும் சங்கரனை கழுத்திலிருந்து தரையில் இறக்கி விடுகிறார். பாலுத் தேவர் ஆற்றின் கரையில் இருந்து கொண்டே கால்களை கழுவிக் கொண்டே சங்கரனிடம் பேச்சுக் கொடுக்கிறார்).

பாலுத்தேவர்: அது… வேற ஒன்னு மில்லப்பா.. இந்த சுடுகாட்டுல துருப்புடிச்ச ஆணியில அடிக்கிற மாதிரி, நம்ம ஆளுங்க மனுசுல ஜாதிங்கற ஆணிய ஆழமா அடிச் சுட்டாங்க. அதுதான் இடஞ்சலே.

சங்கரன்: இடஞ்சல்னா?

பாலுத்தேவர்: புரியலயா? ஜாதிதான்.

சங்கரன்: உங்க பேரு என்ன?

பாலுத்தேவர்: இந்தக் கொழுப்புதானே வேண்டாங்கறது. என் வீட்டுச் சோத்த தின்னு புட்டு, என் தோளிலேயே சவாரி செஞ்சுபுட்டு,  என் பேர என்னன்னா கேட்கற? இந்த ஊருல கை சூப்புற ஒரு குழந்தைகிட்ட என் பேர என்னன்னு கேட்டாக்கூட வாயில இருக்கிற கட்ட விரலை எடுத்துட்டு, பாலுத்தேவர்னு என் பேர சொல்லிட்டு, கட்டவிரலை மறுபடியும் கை சூப்பும்.

சங்கரன்: பாலுங்கறது உங்க பேரு, பின்னாடி இருக்கிற தேவருங்கறது நீங்க படிச்சு வாங்குனா பட்டமா?

(அதிர்ந்து போய் நிற்கிறார் பாலுத் தேவர்)

சங்கரன்: ஜாதி இல்ல,  ஜாதி இல்லன்னு சொல்ற நீங்களே, மூச்சுக்கு முந்நூறு தடவை பாலுத்தேவர் பரம்பரை, பாலுத்தேவர் பரம்பரைன்னு சொல்லிட்டு இருக்கேளே (கன்னத்தில் அறைந்தது போல பாலுத்தேவர் கரையேராமல் அதிர்ந்து நிற்கிறார்)

அப்போது சங்கரன்: நான் கரை யேறிட்டேன். நீங்க இன்னும் கரையேறாம இருக்கேளே?

(பாலுத்தேவர் அப்படியே பின்னால் சென்று ஆற்றில் மூழ்கி எழுந்திருப்பது போல காட்சி)

இறுதிக்காட்சி

ஊர்மக்களில் ஒருவர்: இப்போ எதுக்குப்பா தயக்கம். சாமி இல்லை, ஜாதி இல்லேன்னு சகட்டுமேனிக்கு பேசினீங்க. இப்போ சாமி குத்தத்தால ஊரே சபிக்கப்பட்டு இருக்கு.

பாலுத்தேவர்: நீங்க எல்லாரும் தோசமுன்னு நினைக்கிற என் மக வைதேகி (சாஸ்திரியின் மகள்) என் வீட்டில்தான் இருக்கா.

அய்யர்: தேவர்வாள் என்னால் நம்பவே முடியலே. செத்துப்போயிட்டதா நினைச்சிருந்தவ உயிரோட வந்திருக்கா. எனக்கென்னவோ பயமா இருக்கு தேவரே. சாதாரணமா ஒரு கன்னிப்பொண்ணு செத்துப் போயிட்டாலே அவளுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களையெல்லாம் சர்வம் கிருஷ்ணார்ப்பனமுன்னு செஞ்சு முடிச்சுடறோம்.

இன்னொருவர்: இந்தப்பொண்ண பொறுத்த வரைக்கும் நாங்க எல்லாம் செஞ்சு முடிச்சுட்டோம்.

அதே அய்யர்: அப்படியிருக்கச்சே அந்தப் பொண்ணு உயிரோட வந்து நாம அதை ஏத்துண்டா இந்த ஊருக்கே அச்சானிய மில்லையா தேவரே?

மக்களில் ஒருவர்: அதனால்தான் சாமிக் குத்தமாகி ஊரே அங்கங்கே பத்திக்கிட்டு எரியுது.

இன்னொருவர்: ஊருல சாமி சாத்து கட்டியிருக்கு. ஊர்ல இருந்து யாரும் வெளிய போகக்கூடாது. வெளியில இருந்தும் யாரும் உள்ள வரக் கூடாதுங்கறதும் உங்களுக்கு தெரியாத விசயம் இல்லே.

மற்றொருவர்: பங்காளி… உங்களுக்கு வேணும்னா சாமி நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா, நாங்க ஊருக்குள்ள பொண்டாட்டி புள்ளையோட வாழனுமில்லே. இவ்வளவு நாளும் நீங்க சொல்றத நாங்க கேட்டுகிட்டு இருந்தோம். இப்போ நாங்க சொல்றத நீங்க கேட்டுதான் ஆகணும்.

இன்னொருவர்: அந்தப் பொண்ணும், புள்ளையும் ஊர விட்டு போகணுங்க. அதாங்க எங்களுக்கு வேணும்.

(கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுகிறார்).

பாலுத் தேவர்: நான் மட்டும் பழைய ஆளா இருந்திருந்தா வெட்டரிவா, வேல் கம்போடுதான் நின்னிருப்பேன். ஆனா, இப்போ பாலுங்கற மனுசனா நிற்கறேன்யா. வீட்டுல இருக்கிற வெட்டரிவா, வேல், கம்பு, குத்தீட்டி  எல்லாத்தையும் தாமிரபரணிக்குத் தாரை வார்த்துட்டேன். சொல்ற நிலைமையில இன்னிக்கு நானும் இல்ல. கேட்கற நிலை மையில் நீங்களும் இல்ல.

அதே அய்யர்: தேவர்வாள் ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்னு சொல்லுவா. இப்போ இந்த ஊரே திரண்டு வந்து நிக்கறது. இனிமேலும் அவாள பகைச்சுகிறதுல அர்த்தம் இல்லே. அவா என்ன சொல்றாளோ அதைக் கேட்டுட்டுப் போங்கோளேன்.

பாலுத்தேவர்: வைதேகிங்கற ஒரு பொண்ணையும், சங்கரன்ற ஒரு பையனையும். பாலுங்கற ஒருத்தர் வளர்க்க பிரியப்படறார். அதுக்கு புரையோடிப்போன புற்று நோய் மாதிரி ஜாதியும், மூடநம்பிக்கையும் இவ்வளவு முட்டுக்கட்டையா இருக்குமுன்னு நான் நினைக்கல. அடைக்கலமா வந்து சேர்ந்திருக்கிற இந்த பொண்ணும், புள்ளையும் என்னோட குழந்தைங்க. அதுங்க இந்த ஊர விட்டுப் போகணுமுன்னா அது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது.

ஜாதியோட பேர அழிக்கிறதுக்கு இந்த பாலுவோட ரத்தம்தான் தேவையின்னா. தேவையான ரத்ததை எடுத்துக்குங்க. (பாலுத் தேவர் ஊர் மக்களால் கொல்லப்படுகிறார்.)

எடுத்துக்காட்டுக்கு இவை; இன்னும் ஏராளம் உண்டு!

இந்தத் திரைப்படத்தைத் துணிவோடு, வெகு நேர்த்தியாக இயக்கியமைக்காக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் புரட்சிக் கவிஞர் விழாவில் (தமிழர் கலைபண்பாட்டுப் புரட்சி விழா) சென்னை கலைவாணர் அரங்கத்தில் 30.4.1998 அன்று பாரதிராஜா அவர்களுக்குப்‘புரட்சிக் கலைவேந்தர்’என்ற பட்டமும் விருதும் அளித்துப் பாராட்டப்பட்டது.

‘‘வேதம் புதிது’ திரைப்படம் 1987 டிசம்பர் 27 அன்று வெளிவந்தாலும் – அதை வெளி வருவதற்கு அவ்வளவு சுலபத்தில் தணிக்கைக் குழு அனுமதியளித்திடுமா?

காஞ்சி சங்கர மடம் வரை அதன் செல்வாக்கு வால் நீண்டது. ‘டில்லி லாபி’ என்று ஒன்று இருக்கிறது; அதைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள் என்று இயக்குநர் பாரதிராஜாவிடம் கை காட்டப்பட்டது.

‘அப்படியெல்லாம் முடியாது அதற்கெல் லாம் இந்தப் பாரதிராஜா அடிபணிய மாட்டான்!’ என்று துணிவாக நின்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

பிரச்சினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் வந்தது. இயக்குநர் பாரதிராஜாவே நேரில் சந்தித்து விவரங்களை எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர்
எம்.ஜி.ஆரை சந்தித்து விவரங்களை எடுத்துக் கூறினார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனைச் சந்தித்த ஒரு தருணத்தில் ‘வேதம் புதிது’ திரைப்படம் தொடர்பான தணிக்கைப் பிரச்சினைப்பற்றியும் இந்தப் பிரச்சினையை  (அன்றைய) திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி கையில் எடுத்துக் கொள்ள இருப்பது குறித்தும் எடுத்துக் கூறிய நிலையில், ‘வேதம் புதிது’ திரைப் படத்திற்கு தணிக்கைச் சான்று கிடைத்தது என்பது ஒரு முக்கியமான தகவலாகும்.

இயக்குநர் பாரதிராஜா திராவிடர் கழகப் பொதுச் செயலாளரைச் சந்தித்து – நடைபெற்றவற்றை எடுத்துக் கூறி, நன்றியும் கூறினார். இதற்கிடையில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24 அன்று மறைவுற்றார்.

‘வேதம் புதிது’ திரைப்படம் திரையிடப்பட்ட தேதி 1987 டிசம்பர் 27. இயக்குநர் பாரதிராஜா, சென்னை உதயம் திரையரங்கில் ‘வேதம் புதிது’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சிறப்பு அழைப்பினை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அளித்தார். ஆசிரியருடன் நானும் சென்று பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆசிரியர் அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி!

மறுநாள் இயக்குநர் பாரதிராஜாவின் இல்லம் தேடிச் சென்று ஆரத் தழுவி பொன்னாடை போர்த்திப் பாராட்டினார் என்பது சுவையான வரலாறாகும்.

இந்தப் பின்னணியில் தான் திராவிடர் கழகம் நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் (30.4.1988) இயக்குநர் பாரதிராஜாவை அழைத்து ‘புரட்சிக் கலைவேந்தர்’ என்ற விருதினையும், பட்டத்தையும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பெ. வேணுகோபால் தலைமையில், (அன்றைய) திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முன்னெடுப்பில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர், இயக்குநர் பாண்டிய ராஜனும் அவ்விழாவில் பங்கேற்றுப் பாராட்டினார்.

அவ்விழாவில் ஏற்புரை வழங்கிய இயக்குநர் பாரதிராஜா தன் உள்ளத்தில் ஊற்றெடுத்த இனநல உணர்வை, மடை திறந்த வெள்ளமெனக் கொட்டினார்.

‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்!’’ என்பதை இந்த விழா நிரூபித்து விட்டது. எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை மரியாதையை ஆசிரியர் வழங்கியுள்ளார்’’ என்று நெஞ்சமுருகி நன்றி யைத் தெரிவித்தார். (விரிவான தகவல்கள் ‘விடுதலை’  4.5.1988 மற்றும் 5.5.1988).

அந்த விழாவில் மற்றொரு பெண் ணடிமைத்தனத்தை நொறுக்கும் நிகழ்ச்சி அரங் கேற்றப்பட்டது.

‘விதவையருக்குப் பூ சூட்டும் விழா’ நிகழ்ச்சிதான் அது. அதனைக் கண்டு வியந்த இயக்குநர் புரட்சிக் கலைவேந்தர் பாரதிராஜா ‘‘இவ்வளவுப் பெரிய புரட்சியை இவ்வளவு எளிமையாக நடத்திக் காட்டியது சாதாரணமானது அல்ல! தந்தை பெரியார் விதைத்த விதையின் புரட்சிக்கு ஈடு இணை இல்லை’’ என்று அவர் கூறியபோது அரங்கமே மக்கள் கர ஒலியால் அதிர்ந்தது.

வெளிவராத  சில முக்கிய தகவல்கள், ‘புரட்சிக் கலைவேந்தர்’ பாரதிராஜாவின் மறைவை யொட்டி வெளி வர வேண்டியது காலத்தின் பொறுத்தமான கட்டாயம் அல்லவா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *