சேலத்தில் தந்தை பெரியார் சிலையில், முகத்தைப் பிளாஸ்டிக் தாளால் மூடி அவமதிக்க முயன்றுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். ‘‘காவிகள், காலிகளின்’’ இந்தச் செயலுக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடரக் கூடாது.
தந்தை பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பிடிபட்டால், அவர்களை ‘‘மனநிலை குன்றியவர்கள்’’ என்று அடையாளப்படுத்துவதைக் காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. தந்தை பெரியாரை அவதூறு செய்வோரின் மனநிலை அத்தகையது தான் என்றாலும், அதைச் சாக்காகச் சொல்லி சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்களைத் தப்பவிடக் கூடாது. தமிழ்நாட்டின் அமைதிக்கும், சட்டஒழுங்குக்கும் கேடாக இது அமைந்துவிடும். கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை நடந்தது – திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சியில் மீண்டும் தொடங்கிப் பார்க்கிறார்கள். தொடக்கத்திலேயே கெல்லி எறியவேண்டியது அரசின், முதலமைச்சரின் கடமையாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
16.6.2026
