சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழாவில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.,

இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மட்டுமல்ல; இந்தியாவினுடைய மதச்சார்பின்மைக்கு பெரிய ஆபத்து வந்திருக்கின்ற இன்றைய சூழலில், அரசியலில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டு இருக்கின்ற இன்றைய சூழலில்,
பெரியார் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு,
இப்போது தேவைப்படுகிறார்! 

சேலம், ஜூன் 15 ‘‘இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மட்டுமல்ல; இந்தியாவினுடைய மதச்சார்பின்மைக்கு பெரிய ஆபத்து வந்திருக்கின்ற இன்றைய சூழலில், அரசியலில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டு இருக்கின்ற இன்றைய சூழலில், பெரியார் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது தேவைப்படுகிறார்’’ என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

13.6.2026 அன்று காலை சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற  சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை (அ.இ.தமிழர் தலைவர் எம்.பி.ஏ., – ரா.பிரியா பி.ஏ., ஆகியோரின்) இணையேற்பு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.  இம்மணவிழாவில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா வாழ்த்துரை வழங்கினார்.

அவரது வாழ்த்துரை  வருமாறு:

இவ்வாழ்க்கை இணையேற்பு விழாவினுடைய தலைவர் வணக்கத்திற்குரிய அய்யா மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களே, எனக்கு முன்னால் வாழ்த்துரை வழங்கியிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதன்மைச் செயலாளர், மேனாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் கே.என்.நேரு அவர்களே,

உரையாற்றவிருக்கின்ற சேலம் மாவட்டக் கழகச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பி னருமான அன்பிற்குரிய எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களே,

வணக்கத்திற்குரிய ஆசிரியர் அய்யா!

சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன் அவர்களே, பாண்டித்துரை அவர்களே, திராவிடர் கழகத்தினுடைய நிர்வாகிகள் ஊ.ஜெயராமன், ஜெயக்குமார், குணசேகரன் உள்ளிட்டத் தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளே, தோழர்களே, நிறைவாக, இம்மணவிழாவினை நடத்தி, நிறைவுப் பேருரை ஆற்றவிருக்கின்ற எங்களுடைய வணக்கத்திற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களே,

வருகைப் புரிந்திருக்கின்ற தாய்மார்களே, பெரி யோர்களே, கொள்கைக் குடும்பத்து வீரர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இணையேற்பு விழாவில், கலந்துகொள்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கிய, வழக்குரைஞர் தோழர் அருள்மொழி அவர்களுக்கும், அண்ணன்
அண்ணாமலை மகிழ்நன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்ணாமலை இல்லத்துத் திருமணம்; மணமகனின் பெயர் தமிழர் தலைவர்!

வரவேற்புரை முடிந்த பிறகு, மீண்டும் மீண்டும் இந்தத் திருமண அழைப்பிதழைப் படித்தபோது, இங்கே வைத்திருக்கின்ற அந்தப் பலகையைப் (பிளக்ஸ்) பார்க்கின்றபோது, இந்தத் திருமணம், அண்ணாமலை இல்லத்துத் திருமணம். ஆனால், மணமகனின் பெயர் தமிழர் தலைவர்.

தாத்தா அண்ணாமலை,

‘‘உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,

பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,

மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே’’

என்று அவருக்கு அண்ணாமலை என்று பெயர் வைத்த காலம் அந்தக் காலம்.

என்ன மாற்றம் வேண்டும், இன்னும்?

அந்த அண்ணாமலையினுடைய பெயரன், இன்றைக்குத் தமிழர் தலைவர் என்கின்ற பெயரோடு, நம்மிடையே மணமகனாக வீற்றிருக்கின்றார் என்றால், அய்யா அண்ணாமலை அவர்கள் ஓர் இளவழகனை உருவாக்கியிருக்கிறார். இளவழகனுக்குத் தமிழர் தலை வர் என்றொரு பிள்ளை பிறந்து, அவருக்குத் தமிழர் தலைவரே தலைமை தாங்கி, இந்தத் திருமணத்தை நடத்துகிறார் என்றால், என்ன மாற்றம் வேண்டும், இன்னும்?

‘‘நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்’’ என்று இப்போது ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.

உண்மையான மாற்றம் எந்த மாற்றம்? என்பதை, இந்த மேடையும், இந்த மணமகனும், இம்மணவிழாவிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவரும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு, இந்த அரங்கம் சாட்சி!

திராவிடர் கழகத்தில் நான் மாணவனாக இருந்து பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றபோது, கையில் பேனா, நோட்டுடன் இருந்தேன். அன்றைக்கெல்லாம் செல்போன் கிடையாது. குற்றாலத்தில் நடைபெறும் பயிற்சிப் பட்டறையில் வகுப்பெடுப்பார்கள். மார்க்சியம் என்றால் என்ன? அம்பேத்கரியம் என்றால் என்ன? பெரியாரியம் என்றால் என்ன? திராவிட இயக்கம் என்றால் என்ன? என்றெல்லாம் நாங்கள் பயிற்சி எடுக்கின்றபோது, எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்தான் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள். இன்னும் சொல்லப்போனால், அவருடைய பேச்சைக் கேட்டுத்தான், என்னுடைய பேச்சை நான் உருவாக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு காலத்தில் இருந்தேன்.

ஒன்றிய அமைச்சராக ஆகியிருப்பார்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவரை அழைத்தார் கலைஞர்; ஆனால், அருள்மொழி அவர்கள் வரவில்லை. அப்படி அவர் வந்திருந்தால், ஒருவேளை எனக்கு முன்பே அவர் ஒன்றிய அமைச்சராக ஆகியிருப்பார்.

உரையாற்றும்போது அண்ணன் நேரு அவர்கள் சொன்னார், ‘‘தி.க. – தி.மு.க. இரண்டு கொடிகள்தான் பறக்கின்றன என்று ஆசிரியர் சொன்னார்’’ என்று.

‘திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்’ என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

இரட்டைக் குழல் துப்பாக்கி அல்ல;
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!

அய்யா சிலை திறப்பு விழா மேடையில், அனேகமாக அருள்மொழி அவர்களும் அந்த மேடையில் இருந்தி ருப்பார் என்று நினைக்கிறேன். ஆசிரியரை அருகில் வைத்துக்கொண்டு கலைஞர் சொன்னார், ‘‘அண்ணா அன்றைக்குச் சொன்னார், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று; நான் அண்ணாவின் பேச்சை மாறாதவன். ஆனால், அண்ணாவின்பேச்சை செழுமைப்படுத்துகிறேன் என்று, ‘‘இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகமும் – திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி அல்ல. இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’’ என்று சொன்னார்.

ஏனென்றால், ஒரு குழல், ஒருவேளை வெடித்து, குண்டு பாய்ந்து, இன்னொரு குழலில், ரவை வராமல் போய்விட்டால்கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், ஒரு நாணயத்தில், இரண்டு பக்கங்கள் இருந்தால்தான், அந்த நாணயம் செல்லும். எனவே, திராவிட முன்னேற்றக் கழகம் ‘செல்ல’ வேண்டும் என்று சொன்னால், அது திராவிடர் கழகம் இருந்தால்தான் செல்லும் என்ற அந்த உணர்வோடு அன்றைக்குக் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அதைத்தான், அண்ணன் நேரு அவர்கள் இங்கே சொன்னார்கள்.

75 ஆண்டுகாலத்திற்கு மேலாக, ஒரே சிந்தனை, ஒரே போக்கு உள்ள இயக்கம்!

எங்களுக்கெல்லாம் இருக்கின்ற பெருமை, நாடாளு மன்றத்தில் 25 ஆண்டுகாலம் பணியாற்றியவன் என்கின்ற முறையில், எல்லா மாநிலங்களுக்கும் சென்று வந்தவன் அல்லது எல்லா மாநிலங்களுடைய முதலமைச்சர்களும், ஒன்றிய அமைச்சர் என்கின்ற முறையில், என்னை வந்து பார்த்திருக்கிறார்கள் என்கிற முறையில், இந்தியாவில், ஒரே ஒரு கட்சி, ஒரே ஓர் இயக்கம் 75 ஆண்டுகாலத்திற்கு மேலாக, ஒரே சிந்தனை, ஒரே போக்கு என்று இருக்கின்ற இயக்கம் ஒன்று உண்டு என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதற்குக் காரணம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா.

இந்த அடையாளம்தான், இன்றைக்கும் நாடாளு மன்றத்தில் எங்களை வேறுபடுத்தி மட்டுமல்ல, எங்களைச் சிறப்பாக உறுதிப்படுத்துவதற்கும் அந்த அடையாளம்தான் காரணமாக இருக்கிறது.

அண்ணாமலை மகிழ்நன் ஆஸ்திரேலியாவில்
ஒரு சாம்ராஜ்ஜியத்தை வைத்திருக்கிறார்!

இந்த மணவிழாவில், அண்ணன் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றி ருந்தபோது, இங்கே எப்படி நம்முடைய ஆசிரியர் ஒரு சாம்ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருக்கிறாரோ, அதைப்போல அண்ணாமலை அவர்கள், ஆஸ்திரே லியாவில் அவர் ஒரு சாம்ராஜ்ஜியத்தை வைத்திருக்கிறார்.

அங்கே இருக்கும் எல்லா தமிழர்களுமாக சேர்ந்து, இந்த இயக்கத்தை வளர்க்கவேண்டும் என்கின்ற உணர்வோடு, அங்கே இருக்கும் நண்பர்களை இங்கே அழைத்து வருவது, இங்கே இருக்கின்ற கொள்கை யாளர்களை அழைத்து, அங்கே பேச வைப்பது என்ற ஓர் இயக்கப் பணியிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு குடும்பம்தான், இந்தக் குடும்பம்.

முன்பைக் காட்டிலும் நம் இயக்கத்திற்கு
இன்னும் வீரியம் தேவைப்படுகிறது!

இந்தக் குடும்பத்தில் நடைபெறுகின்ற இந்த இணையேற்பு விழாவில் கலந்துகொள்வதில் நாங்கள் மட்டமற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்த இயக்கம் இன்றைக்கு முன்பைக் காட்டிலும், இன்னும் வீரியம் தேவைப்படுகிறது.

ஏனென்றால், களத்தில் உள்ள எதிரிகள் யார் என்று, நமக்குத் தெரியும். அவர்களுடைய கொள்கை, கோட்பாடு நமக்கு எதிராக இருந்தது.

ஆனால், இப்போது ஓர் அரசியல் சக்தி கிளம்பி யிருக்கிறது. கொள்கைத் தலைவர்கள் என்று ஒரு அய்ந்து பேரை வைத்திருக்கிறார்கள். அந்தக் கொள்கைத் தலைவர்கள் யார் என்று, முகம் தெரி கிறதே தவிர, அந்தக் கொள்கைகளைப்பற்றி அவ ருக்கும் தெரியவில்லை; அந்தக் கொள்கையின் பெயரால், நம்மை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக ஓர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அந்த இயக்கம் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற ஓர் ஆபத்தான சூழலில், அண்ணாமலை மகிழ்நன் அவர்களாக இருந்தாலும், அருள்மொழி அவர்களாக இருந்தாலும், குயில்மொழியாக இருந்தாலும், இன்றைக்கு மூன்று பெயராக அல்ல; தமிழ்நாட்டிற்கு மூன்று லட்சமாக, முப்பது லட்சமாக, இப்படிப்பட்ட அருள்மொழிகளும், அண்ணாமலை மகிழ்நன்களும், குயில்மொழிகளும் நிலைக்கவேண்டும், வளரவேண்டும் என்று விரும்பு கின்ற உணர்வோடுதான் இன்றைக்கு நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்திருக்கின்றோம்.

பெரியார் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது தேவைப்படுகிறார்

இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மட்டு மல்ல; இந்தியாவினுடைய மதச்சார்பின்மைக்கு பெரிய ஆபத்து வந்திருக்கின்ற இன்றைய சூழலில், அரசியலில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டு இருக்கின்ற இன்றைய சூழலில், பெரியார் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது தேவைப்படுகிறார்.

சூத்திரப் பட்டம் விலகி,
சமத்துவம் பெறுகின்ற வரையில்…

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டது அய்யா என்று, தந்தை பெரியார் அவர்களின் 93 ஆவது வயதில், திருச்சி பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்த நாள் விழா வில் சொன்னதுபோது, பெரியார் சொன்னார், ‘‘இனி என்னை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லி ஒரு தோழர் சொன்னார். நான் காலையில் இரண்டு இட்டலி சாப்பிடுகிறேன்; 11 மணிக்கு ஒரு தேநீர் அருந்துகிறேன். மதியம் ஒரு கைப்பிடி அளவிற்குப் புலால் சோறு சாப்பிடுகிறேன். இரவு, இரண்டு சப்பாத்தி சாப்பிடுகிறேன். இவற்றையெல்லாம் நான் சாப்பிடுவதற்காக எங்கோ ஒரு தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் ‘சூத்திரப்’ பட்டத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய சூத்திரப் பட்டம் விலகி, அவன் சமத்துவம் பெறுகின்ற வரையில், என்னுடைய உழைப்பை நான், ஓய்வை எடுத்துக் கொள்ளமாட்டேன்’’ என்று சொன்னார்.

அதே வயதில் நம்முடைய ஆசிரியர் அவர்கள், இந்த சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவருக்குப் பக்க பலமாக இந்தக் குடும்பம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டு அரசியலை இயக்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி ஸ்டாலின்!

பெரியார் வழியில், அண்ணா வழியில், தலைவர் கலைஞர் வழியில், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டு அரசியலை இயக்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் மணமக்க ளுக்கான வாழ்த்துரை இங்கே படிக்கப்பட்டது. இந்த குடும்பத்தில் இன்றைக்கு இணையேற்பினை நடத்தியிருக்கும்  மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.

– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *