திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை

5 Min Read

* ஆணவக் கொலைகளைச் சட்டப்படியான கடுமையான தண்டனைகள் மூலம் தடுப்பது அவசியம் – அவசரம்!
* இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தந்த நீதிபதிக்குப் பாராட்டு
இந்த உத்தரவு விரைந்து வினையாற்ற அரசிற்கு நல்வாய்ப்பாக அமைய வேண்டும்!

ஆணவக் கொலைகளைச் சட்டப்படியான கடுமையான தண்டனை மூலம் தடுப்பது அவசியம், அவசரம்! இந்தக் கொலை வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தந்த நீதிபதிக்குப் பாராட்டுகள்! இந்த உத்தரவு விரைந்து வினையாற்ற அரசிற்கு நல்வாய்ப்பாக அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆணவக் கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் தமது சொந்த மகள், மென் பொறியாளரான வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததை ஒப்புக் கொள்ளாமல்,  ஜாதி வெறியின் காரணமாக அப்பெண்ணின் தந்தை, தனது மகனுடனும்,  மனைவியுடனும் நடத்திய ஆணவக் கொலைக்குக் காரணமாக அமைந்தார். அவரது ஜாமீன் மனு மீதான வழக்கில், ஜாதி ஆணவ வெறி எப்படித் தாய், தந்தை, மகள் என்ற பாசத்தையே பலி பீடத்திற்குக் கொண்டு போய் நிறுத்திடும் கொடுமையாக்கி, உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் கள்ளமும், பள்ளமும் எப்படி ஆட்டுவிக்கிறது என்பதைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. புகழேந்தி அவர்கள் நன்கு சுட்டிக் காட்டியுள்ளார். ஜாதி ஆணவ மனப்போக்கு, நமது சமூகத்தில்  – பாசத்தைக்கூட   கொன்று தின்றுவிடும் பேராபத்து எப்படி கடும் தொற்றுநோயாக ஆகின்றது என்பதை மிக மிகத் தெளிவுடனும், வலியுடனும் அரசுகளுக்கு நல்ல அறிவுறுத்தலாகத்  தமது தீர்ப்பை அருமையாகத் தந்துள்ளார் (அதன் சாரம் தனியே காண்க)

தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையாக இது சட்டப்படி கருதப்பட முடியாது என்பதை ஆணவப் படுகொலை வழக்குகளில் உச்சநீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புகளும், அது அறிவுறுத்தியுள்ள தனிச் சட்டத்திற்கான தேவைகளும், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு வலியுறுத்தியுள்ள வழிமுறைகளுமே சான்று. ஆணவப் படுகொலை என்பது நம் சமூகத்திடையே பரவி உலுக்கும்  வர்ணாஸ்ரமப் பண்பாட்டுப் படையெடுப்பின் தீய விளைவே!

இதற்கான மூல வேர் எங்கே உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும்  அரசுகளும், அறிவார்ந்த முற்போக்காளர்களும்! புத்தரும், வள்ளுவரும், வடலூர் வள்ளலாரும்  முன்பு எழுதினர். 100 ஆண்டுக் கால சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்த ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான பல்வேறுத் தொடர் போராட்டங்கள் – தென்னாட்டில் திராவிட இயக்கங்கள், முற்போக்காளர்கள், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றவர்களின் எழுத்து, பிரச்சாரப்  போராட்டங்கள் மூலம் பெரும் அளவு விழிப்புணர்வு ஏற்பட்டும்கூட இன்னமும் இப்படியா? சில புரியாதவர்கள் ‘‘அவர்கள் தோற்று விட்டனர்’’ என்று அவசர முடிவுடன் அவதூறு பரப்பவும் இந்த ஆணவக் கொலை நிகழ்வுகள் காரணமாக அமைந்து விடுகின்றன. (கடந்த 10 ஆண்டுகளில்  59 ஆணவக் கொலைகள்  நடந்தாக நீதிபதி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்).

மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ ஸ்பெஷலிஸ்டுகள் எல்லாம் இருந்தும்கூட எப்படி2021இல் கரோனா – (கோவிட்– 19) தொற்றுப் பரவி, உலகையே உலுக்கிய தொடர் மரணங்கள் ஏற்பட்டன! அதனால் மருத்துவர்கள் தோற்றுவிட்டனர்; பயனற்றுப் போய் விட்டனர் என்று கூறினால் அது அறிவுடைமையா?

அதுதான் மேற்சொன்னதற்கும் விடை. என்றாலும் அண்ணல் காந்தியார் அவர்களைக் கோட்சே என்ற  பார்ப்பன ஹிந்து மதவெறியன்  சுட்டுக் கொன்றபோது, நம் மக்கள் நிதானமிழந்து விடாமல், மதக் கலவரமோ, ஜாதிக் கலவரமோ பரவிவிடாமல் தடுக்கத் தந்தை பெரியார் ஒன்றை நினைவூட்டினார் – ஆத்திரப்பட்ட மக்களிடம்!

கடுமையான தண்டனைகள்மூலம் தடுப்பது அவசியம் அவசரம்

‘‘ காந்தியைச் சுட்டத் துப்பாக்கியைத் தண்டிப்பதைவிட, அதைப் பிடித்த கை ‘மதவெறி’ என்பதால், அதனை நோய் நாடி, நோய் முதல்நாடி ஒழிக்க  அறிவு பூர்வமாகச் சிந்தித்தும்,  இந்த வெறித்தனத்தினை முடிவுக்குக் கொண்டு வர அனைவரும் முன்வர வேண்டும்’’ என்று அறிவுரை கூறி அமைதி ஏற்படுத்தினார் தந்தை பெரியார். (சான்று: ‘புதியதோர் உலகு செய்வோம்’ நூல், தந்தை பெரியார்)

ஆணவக் கொலைகளைச் சட்டப்படியான கடுமையான தண்டனைகள் மூலம் தடுப்பது அவசியம் – அவசரம்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நம் இயக்கமும்,  முற்போக்காளர் களும், ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களும்  விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆணவக் கொலை ஏற்படா வண்ணமும், ஜாதி வெறி,  ஜாதி ஆணவத்திற்கு எதி ராகவும் வழிமுறைகளை அரசுக்குக் கூற உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு. கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் ஓர் ஆணையத்தினை அமைத்த நிலையில் இடையில் –  தேர்தல் குறுக்கிட்டு விட்டது.   ஆட்சி மாற்றத்தினால் அந்தப் பணி தேக்கமுறக் கூடாது; புதிய அரசு  அதன் பணியினை விரைவுப்படுத்தி, அறிக்கையைப் பெற்று கிடப்பில் போட்டு விடாமல் அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆணவக் கொலைத் தடுப்பு விஷயத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த – போற்றத்தக்க இந்த உத்தரவு விரைந்து வினையாற்ற அரசிற்கு ஒரு நல் வாய்ப்பாக அமைய வேண்டும்.

தொடர் நடவடிக்கையில்
புதிய ஆட்சி ஈடுபட வேண்டும்

சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஒரு முக்கிய  சமூகக் கொடுமையான  இது படித்தவர்களைக்கூட வெறியாளர்களாக மாற்றிடும்   ஒரு  சமூகத் தொற்று! இதனைத் தடுக்கச் சட்டமும், சமூகத்தினரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஜாதிமறுப்பு இணையர்களுக்குப் பாதுகாப்பு தரும் பொறுப்பை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.  ஜாதி  – தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தினை நடத்துவோருக்குத் தக்க ஊக்கமும்,   தக்க பாதுகாப்பும் தருவது பற்றி ஆழ்ந்து யோசித்துச் செயலாற்ற ஆட்சியாளர்களும்,  கட்சி பேதமில்லா அனைத்து முற்போக்கு ஜாதி ஒழிப்பாளர்களும் முன் வர வேண்டும்.

18 வயது இளைஞர்கள் வாக்குச் செலுத்துவது எப்படி தடுக்க முடியாத உரிமையோ, அதைவிட முக்கியம் சட்டப்படி வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் தாங்கள் விரும்பியவர்களை மணந்து வாழும் உரிமை, அடிப்படைஉரிமையாகும். தந்தை பெரியார் அவர்கள் ‘‘இதில் மற்றவர் தலையிடுதல் என்பது, தேவையற்ற ஆணவ அதிகாரத்தினைக் காட்டுவது அல்லாது வேறு என்ன?’’  என்றார்  – சிந்தியுங்கள்.

அதே போல, நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், ‘‘பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் யாரும் எந்த ஜாதி அடையாளத்துடனும் வரக் கூடாது’’ என்று தெளிவாகக் கூறியுள்ளது. வரவேற்கத்தக்கதாகும்.

இதனை ஒரு தனி ஆணையாகவும் வெளியிடுவது சாலச் சிறந்தது. மேலும் இதனைக் கண்காணிக்க ஒரு தனி அமைப்பு (Squard)  உருவாக்குவது முக்கியம். அதை மீறுவோர் மீது கடுமையான தண்டனையாக பள்ளியை விட்டே நீக்கிடவும், வேறெங்கும் படிக்கச் சேர முடியாத நிலையை உருவாக்கும் அளவுக்குக் கடுமையாக்குவதும் தவிர்க்க முடியாததாகும். ஜாதி அடையாளங்கள்தான் படிப்படியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பள்ளிக்கு வரும் ஆபத்தை உருவாக்குகின்றன.

சிறப்பான வரலாற்றுத் தீர்ப்பு (Land Mark Judgement) தந்த நீதிபதி அவர்களையும் பாராட்டி, சமூக நல்வாழ்வுக்கும், ஒருங்கிணைப்புக்கும் இத்தீர்ப்பு ஒரு கலங்கரை வெளிச்சமாக, சட்டம் என்ற இருட்டறையை ஒளிமயமாக்கியுள்ளதாக நன்றி கூறுகிறோம்.

 கி.வீரமணி

    தலைவர்,
திராவிடர் கழகம்

 

13.6.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *