சென்னை, ஜூன் 13- டில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சுக்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவின் முக்கிய விவரங்கள் வருமாறு:
தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாகப் போலி கதைகளைக் கூறியவர், இப்போது டில்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதாரம், பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதத்தினர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், பெண்கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், மகளிர் சுய உதவிக்குழு வளர்ச்சி எனப் பெருமையாகப் பேசியுள்ளார்.
சாதனை யாருடையது?
இவை அனைத்தும் இவர்களுடைய ஒரு மாத கால ‘சோபா மாடல்’ ஆட்சியில் நடந்ததா? அல்லது கடந்த 5 ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். திராவிட மாடல் சாதனை கள் மீது இந்த அரசு முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.
மவுனம் ஏன்?
தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கோரிப் பேசுகிறார். டில்லி சென்றவர் கருநாடகாவில் ஆட்சி செய்யும் தனது புதிய கூட்டணிக் கட்சியிடம் மேகதாதுப் பிரச்சினை குறித்து வாய் திறக்காமல், ‘நமக்கெதுக்கு வம்பு’ என அமைதியாகத் திரும்பியுள்ளார். “பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றிப் பெற்ற போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது, உண்மை நிச்சயம் வெல்லும்” என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் சாடியுள்ளார்.
