சென்னை, ஜூன் 9- சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று (8.6.2026) அளித்த பேட்டியில் கூறியதாவது:
“காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியில் திமுக இல்லை. எனவே ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளவில்லை.
ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் எங்களுடைய கொள்கை, நிலைப்பாட்டுக்கு ஏற்ப முடிவை எடுத்தால் வரவேற்போம்.
பாஜவுக்கு எதிராக மதச்சார்பற்ற வலுவான ஒரு கூட்டணி உருவாகும். தேர்தல் வெற்றி, தோல்வியால் அசைத்து பார்க்க முடியாது. 75 ஆண்டுகளில் பல வெற்றிகள், தோல்விகளை சந்தித்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெறும்போது கொள்கைகளை செயல்படுத்துவோம். வெற்றி பெறாத நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தத்துடன் போராடுவோம்.” இவ்வாறு கூறினார்.
அப்போது அவரிடம், ‘தவெக ஆட்சிக்கு நாங்கள் சுயமாக முடிவெடுத்து ஆதரவு அளித்தோம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன், “அந்தந்த கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் விமர்சிக்கக் கூடாது. அது அந்தக் கட்சியின் உரிமை என்று எங்களுடைய தலைவரும் சொல்லி இருக்கிறார்” என்றார்.
அரசுப் பேருந்து சேவை தரத்தை உயர்த்த வேண்டும்!
அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பேருந்துகளின் சேவை தரத்தை உயா்த்த போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் உத்தரவிட்டாா்.
சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழக (எம்டிசி) தலைமை அலுவலகத்தில் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தலைமையில் உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (8.6.2026) நடைபெற்றது.
அப்போது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு பேருந்து சேவை, திட்டங்கள் குறித்து அமைச்சா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகளை இயக்ககுவது, பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிப்பது, பயணிகளிடம் ஓட்டுநா்-நடத்துநா்கள் கனிவாக நடந்து கொள்வது, மாணவா்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவது உள்ளிட்ட சேவைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், பணியாளா்களின் நலன், பணிமனை தர உயா்வு, உள்கட்டமைப்பு மேம்பாடு, விழாக் காலங்களில் தடையற்ற போக்குவரத்து, குளிா்சாதன பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் வழித்தட உணவகங்களின் தரத்தைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.
ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணி நேரத்தில் கைப்பேசிகள் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிா்க்க வேண்டும் என்றும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளைக் கண்டறிந்து புதிய வழித்தடங்கள் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
பேருந்துகளின் முகப்பு, பின்புற விளக்குகள், பிரதிபலிப்பு ஒட்டிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், ‘சென்னை ஒன்’ செயலியை பொதுமக்களிடம் அதிகமாக கொண்டு சோ்த்தல், தொலைதூரப் பேருந்து சேவைகளை முழுமையாக இணையதள முன்பதிவு முறைக்கு மாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா், மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மய்யத்தைப் பாா்வையிட்டு, பயணிகளின் புகாா்களை உடனுக்குடன் தீா்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
