டேராடூன், ஜூன்.8- ‘சார் தாம்’ யாத்திரை தொடங்கிய 50 நாட் களில் 31 லட்சம் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்துள்ளனர். இது வரை 161 பேர் உயிரிழந்தனர்.
இந்துக்களின் 4 ‘புனித’த் தலங் களான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத், கங் கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களுக்குச் செல்லும் யாத்திரை, ‘சார் (நான்கு) தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக் கான ‘சார் தாம்’ யாத்திரை கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்கு சென்று வழிபட முடியும். குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால், பாதயாத்திரை செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கும்.
யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ முன்பதிவு செய்ய வேண்டும். ‘சார்தாம்’ யாத்திரையில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாதவகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நடைதிறக்கப்பட்ட 50 நாட்களில் 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனராம். இதனால் ரிஷிகேஷ், பத்ரிநாத் சாலையில் தொடர்ந்து கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
161 பேர் உயிரிழப்பு
அதேவேளையில், நடைபெற்று வரும் ‘யாத்திரை’ காலத்தில் 161 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் கடுமையான ரத்த அழுத்த மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து உத்தரகாண்ட் மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘சார் தாம்’ யாத்திரை தொடங்கிய தில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு அதிகபட்சமாக 11.06 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு 9 லட்சம் பக்தர்களும், கங்கோத்ரி கோவிலுக்கு 5.3 லட்சம் பக்தர்களும், யமுனோத்ரி கோவிலுக்கு 5 லட்சம் பக்தர்களும் வந்துள்ளனர்.
யாத்திரை சீசன் தொடங்கியதில் இருந்து 2.90 லட்சம் வாகனங்கள் யாத்திரை வழித் தடங்களை பயன்படுத்தியுள்ளன. யமுனோத்ரியில் அதிகபட்சமாக 78 உயிரிழப்புகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து கேதார்நாத்தில் 47, பத்ரிநாத்தில் 20, கங்கோத்ரியில் 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
