ஹவானா, ஜூன் 7 – அமெரிக்காவின் தடைகளை எதிர் கொண்டு மருத்துவத் துறையில் தொடர்ந்து பல சாதனைகளைச் செய்து வரும் கியூபா தற்போது புற்றுநோய் கட்டிகளைக் குணப்படுத்தும் ‘ஹெபர்சா வேக்ஸ்’ (HEBERSaVax) என்ற புதிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கி, மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு வகையான புற்றுநோய் களையும் குணப்படும் வகையிலான இத்தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகள் வெற்றியடைந்துள்ளன. இந்த முடிவுகளைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி யானெலிஸ் மொரேரா தியாஸ் மற்றும் அவரது மருத்துவக் குழுவினருக்குக் கியூபா அதிபர் மிகுயெல் தியாஸ் கானல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முடக்கப்படும் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சி
இந்தத் தடுப்பூசியானது ஒரு ‘சிகிச் சைக்கான தடுப்பூசி’ (Therapeutic Vaccine) அல்லது ‘செயல்பாட்டு நோய் எதிர்ப்புச் சிகிச்சை’ (Active Immun otherapy) என்று அழைக்கப்படுகிறது.
மனித உடலில் புற்றுநோய் கட்டிகள் வளர்வதற்குத் தொடர்ச்சியான ஊட்டச் சத்துக்களும் ஆக்சிஜனும் தேவை. இவை இரண்டையும் மனித உடலில் ரத்த ஓட்டம் மூலமாக அக்கட்டிகள் எடுத்துக் கொள்ளும் என்ற நிலையில் இந்தத் தடுப்பூசி, ரத்த ஓட்டம் மூலம் கிடைக்கும் சத்துக்களையும் அதன் வழித்தடங்களைத் துண்டித்து கட்டிகளின் வளர்ச்சியை முடக்குகிறது. அதே நேரத்தில், பாதிக்கப்படுபவரது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றலையும் உடலுக்கு மீண்டும் வழங்குகிறது.
குடல், கல்லீரல், சினைப்பை,
சிறுநீரகப் புற்று நோய்களுக்கு தீர்வு
இந்த ‘ஹெபர்சாவேக்ஸ்’ தடுப்பூசி, முற்றிய நிலையில் உள்ள குடல், கல்லீரல், சினைப்பை, சிறுநீரகப் புற்று நோய்களுக்கு தீர்வு தந்துள்ளது என கியூபா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
வழக்கமான ‘கீமோதெரபி’ போன்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடும் போது, இந்தத் தடுப்பூசியால் மிகக் குறைவான மற்றும் பொறுத்துக் கொள்ளக்கூடிய பக்க விளைவுகளே ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டதால், இதனை மற்ற பாரம்பரிய புற்றுநோய் சிகிச்சைகளுடன் இணைத்தும் வழங்க முடியும் என கூறப்படுகிறது.
இந்தத் தடுப்பூசி தோலின் அடியில் (Subcutaneous) ஊசி மூலம் எளிதாகச் செலுத்தக்கூடிய வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை (Phase II clinical trials) தடுப்பூசி வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இதில் முற்றிய நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவப் பயனாளி உடல் நிலை முழுமையாகக் குணமடைந்து, அவர்களின் வாழ்நாள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக கியூபா ஆராய்ச்சியாளர்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
