பெரம்பலூர், ஜூன் 5 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில், தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், தனிப்படை காவல்துறையினர் பாடாலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாடாலூர் அரசு டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (வயது 36) என்பவரைக் கைது செய்தனர். இவர் (தவெக) ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமேஷ் அரசு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து, அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 40 மது பாட்டில்கள் காவல்துயைினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கான
காலை உணவுத் திட்டம்
மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
தமிழ்நாடுஅரசு உத்தரவு!
சென்னை, ஜூன் 5 தமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர் களுக்கான காலை உணவுத் திட்டத்தின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்த நிலையில், அதனை மேலும் 3 மாதங்க ளுக்கு நீட்டித்து தமிழ்நாடுஅரசு நேற்று (4.6.2026) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள், காலையிலேயே விரைவாகப் புறப்பட்டு விடுவதால் பெரும்பாலானோர் காலை உணவு சாப்பிடுவதில்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த 15.9.2022 அன்று மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ-மாணவிகள் இதன் மூலம் பயனடைந்தனர். பின்னர் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
இதனால், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இக்காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி மற்றும் எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. கோடை விடுமுறை முடிந்து நேற்று (4.6.2026) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், எவ்விதத் தடையுமின்றி காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இத்திட்டத்திற்கான பழைய ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி மேலும் 3 மாதங்களுக்கு ஒப்பந்தத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 3 மாத காலத்திற்குள் புதிய ஒப்பந்தங்கள் (ஒப்பந்தப் புள்ளிகள்) கோரப்பட்டு, புதிய ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
