‘தி.மு.க. கூட்டணி உடையாதா’ என்று ஏங்கிய அரசியல் எதிரிகள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2 Min Read

சென்னை, மார்ச்.6 “திமுக கூட்டணி உடையாதா என்று நம் அரசியல் எதிரிகள் ஏங்கினார்கள். உறுதியான வெற்றிக் கூட்டணியை நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“வரும் மார்ச் 9-ஆம் தேதி திருச்சி, சிறுகனூரில் திமுகவின் ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தேர்தல் சிறப்பு மாபெரும் நிர் வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இது பத்து லட்சம் நிர்வாகிகள் கூடும் பெருவிழாவாக இருக்கும். 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, ‘திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்’ என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம். அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், ‘திமுக கூட்டணி உடையாதா’ என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தனர்.

‘ஆஃபர்’ கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.

மதவெறி அரசியலுக்குத் தமிழ் நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்ற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்க மாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைய விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

வரும் மார்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் – தமிழ்நாடு வெல் லட்டும்’ என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாபெரும் மாநாடு நடைபெற உள்ள திருச்சி சிறுகனூரில்தான், 2021-ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை: ‘திமுகவுக்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ் நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பதுதான்.

கட்சியினரின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறது. தொடர் பயணத்துக்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்துக்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைக்க வேண்டும். திமுக அரசு மீண்டும் அமைய வேண்டும். தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய உறுதியேற்றுக் களம் காண்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *