அரசுப் பணியிலிருக்கும் ஒருவர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினர் இறப்புத் துயரத்தோடு, மாத வருவாய் தடைப்படுவதால் பொருளாதாரத் துயரிலும் அல்லல் படவேண்டிய நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பச் சூழல் அறிந்து, அந்தக் குடும்பத்தில் பணித் தகுதி உள்ளோருக்கு பரிவு அடிப்படையில் அரசுப் பணி (Compassionate appointment) வழங்கிடும் நடைமுறை தற்சமயம் உள்ளது. அப்படிப்பட்ட பணியினை பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உரிமையாக அல்லாமல் குடும்பத்தின் மீது அரசு காட்டக்கூடிய பரிவாகத்தான் கருதப்படுகிறது.
இறந்த அரசுப் பணியாளர் குடும்பத்தில் 18-வயதிற்கு மேலாக வேலையில்லாமல் யாரேனும் இருந்தால் ஒருவருக்கு பணி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். பெண்ணாக இருந்தால் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. காரணம் ஒரு பெண் திருமணம் ஆனநிலையில் தனது பிறந்த குடும்பத்திலிருந்து விடு பட்டு, கணவர் குடும்பத்தினரைச் சார்ந் தவராகவே கருதப்படுகிறார். திருமணச் சடங்கு என்பது ஒரு பெண்ணை அவரது பிறந்த வீட்டிலிருந்து விடு படும் நிகழ்ச்சியாகவே கருதுகிறது. சட்டங்களும் இந்த விடுவிக்கப்பட்ட நிலையினைத்தான் வலியுறுத்துகின்றன. திருமணமான பெண்ணுக்குள்ள பரிவு அடிப்படையிலான பணிநியமன கோரிக்கைபற்றி நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்ற நேரங்களில் சட்டப்படி திருமணமான பெண் பரிவு அடிப்படையிலான பணி நியமன கோரிகை விடுக்க உரிமை அற்றவர் என்ற நிலைதான் இதுவரை இருந்து வந்தது. 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு ஆணைப்படி திருமணமான பெண், தான் பிறந்த குடும்பத்தைச் சார்ந்தவர் (dependent) என்று கருதமுடியாத நிலை நிலவுகிறது.
அண்மையில் அரசு நியாய விலை கடையினை அரசு ஒதுக்கீட்டின்கீழ் பெற்ற ஒருவர் இறந்த நிலையில், அல்லல்பட்டு வந்த அவரது குடும்பத்தை இறந்தவரது திருமணம் செய்து கொண்ட மகள்தான் கவனித்து வருகிறார். இந்த நிலையில் இறந்தவரின் திருமணமான மகள் தனது தந்தை அரசு நியாயவிலைக் கடை ஒதுக்கீட்டினைப்பெற பரிவு அடிப்படை யில் அரசிடம் கோரியிருந்தார். அரசு விதிப்படி திருமணமான பெண்ணுக்கு பரிவு அடிப்படையிலான ஒதுக்கீடு கேட்டுப் பெற உரிமையில்லை என்ற நிலையில், தனது தாயும் (இறந்தவரது மனைவி) இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரிகளைக் காத்திடும் சமூகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அரசு ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தனக்கு சாதகமாக தீர்ப்பு வராத நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றமானது மாபெரும் திருப்பமாக, இறந்தவரது குடும்பத்தினை திருமணமான மகள் பராமரித்து வருகிறார் என்ற நிலையில் பரிவு அடிப்படையிலான கடை ஒதுக்கீடு பெற அந்த திருமணமான பெண் தகுதி உடையவர்தான் எனும் கருத்தினைத் தெரிவித்துள்ளது. சமூக எதார்த்தங்கள், மணமான பெண்ணுக்குத் தன் பிறந்த வீட்டுடன் உள்ள உறவினை, பொறுப்பினை சட்டவிதிகளுக்கு மாறாகத்தான் பிரதிபலிக்கின்றன. மேலும், திருமணமான பெண் தான் பிறந்த குடும்பத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும் நடைமுறையானது அரசியல மைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவ விழுமியத்திற்கு எதிரானது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது அரசு விதிகளிலும் மாற்றம் செய்து, பரிவு அடிப்படையிலான அரசுப் பணி நியமனம், சமத்துவ அடிப்படையில் தகுதி உள்ள திருமணமான பெண் களுக்கும் கிடைத்திடும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் மணம் முடித்த ஆண்களுக்கு உள்ள தகுதிநிலை மணம் முடித்த பெண்களுக்கு இல்லை எனும் பாலின பாகுபாடு நிலவி வரும் சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு திருப்புமுனையினை உருவாக்கியுள்ளது.
