இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவு விழாவில் கழகத்தின் கடமையைச் சுட்டிக்காட்டி, தமிழர் தலைவர் எழுச்சி உரை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

அய்ந்து ஆண்டுகள் முதுகெலும்புள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி
தமிழ்நாட்டில் EWS இடஒதுக்கீட்டை கொண்டுவர விடவில்லை!
நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது?
அப்படி நடந்தால் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும்!

 

தாம்பரம், ஆக. 26 ‘நீட்’ தேர்வு,  உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பரப்புரையின் முதல் குழுவின் பிரச்சாரப் பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், “அய்ந்து ஆண்டுகள் ஆட்சி செய்த முதுகெலும்புள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி, தமிழ்நாட்டில் EWS முறையை கொண்டுவர விடவில்லை. அதையே இந்த அரசும் தொடர்வதாக தெரிவித்திருக்கிறார்கள். நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிய வில்லை. அப்படி நடந்தால், மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது எங்களைப் போன்ற வர்களின் கடமையாகும்” என்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

முதல் குழு கடந்து வந்த பாதை…

சட்டக்கல்லூரி மாணவர், திராவிட மாணவர் கழக விளையாட்டு அணிச் செயலாளர் ம.பூவரசன் தலைமையில், துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில், முதல் குழு சென்று திரும்பியுள்ளது. இதில், பெண்கள் 11 பேர், ஆண்கள் 27 பேர் மொத்தம் 38 பேராவர். நான்கு நாட்களில், மழை,வெயில் என்றும் பாராமல் 370 கி.மீ.பயணம் செய்து வந்திருக்கின்றனர். முதலில் 10 தோழர்கள்தான் பயணம் செய்வதாக இருந்தது. தமிழ்நாடு காவல் துறை இந்த பரப்புரைப் பயணத்திற்கு முதல்நாள் நள்ளிரவு தடை செய்வதற்குப் பின்பு ஏற்பட்ட எழுச்சியால் 6 முனைகளிலும் எண்ணிக்கை இருமடங்காயிற்று. 2017இல் தமிழ்நாடு முழுவதும் 5 முனைகளிலும், 2024 இல் 6 முனைகளிலும், 2026இல் அதே 6 முனைகளிருந்தும் பரப்புரை செய்து முடித்திருக்கிறார்கள். வடநாட்டில் Fair Neet என்கிறார்கள். நாம், இங்கே Ban Neet கேட்கிறோம். 6 முனைகளிலிருந்து புறப்பட்ட 6 குழுக்கள் மொத்தம் 2,220 கி.மீ.பயணம் செய்தும், ஊன்றிப் படித்து உண்மையைப் பரப்புங்கள்! – தர்மேந்திரப் பிரதான் பதவி விலகினால் போதுமா? நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டாமா? மாணவர்கள் போராட்டத்தை மடைமாற்றியது நியாயமா? – நீட்டை ஒழிக்கும் வரை திராவிடர் கழகத்தின் போராட்டம் ஓயாது எனும் தலைப்பிலான நான்கு பக்கத் துண்டறிக்கையை, மொத்தம் 50,000/- பிரதிகள் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுல்ல, நான்கு நாட்களிலும் எந்தவிதமான அசம்பாவிதம் ஏற்படாமல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த ஒழுக்கத்தைத் திராவிடர் கழகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.

–  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்
(தாம்பரம் நிறைவு விழாவில் – 25.08.2026)

 

தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், நீட் தேர்வு மற்றும் EWS இரண்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரு சக்கர வாகனப் பரப்புரைக் குழு சென்னையிலிருந்து 22.08.2026  அன்று புறப்பட்டு 25.08.2026   அன்று மாலை தாம்பரம் வந்து சேர்ந்தது. மேற்குத் தாம்பரம், பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகரில் நடைபெற்ற நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அந்தக்குழுவினர் கலந்துகொண்டனர். தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, முதல் குழுவின் தலைமையேற்ற சட்டக்கல்லூரி மாணவர் ம.பூவரசன், ஒருங்கிணைப்பாளர்கள் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்

.ஆசிரியர் உரை

முதல் குழுவில் பங்கேற்றவர்கள்

நான்கு நாட்களும் பயணித்தவர்கள்

ஆண்கள்:- ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சோ.சுரேஷ், மு.அருண்குமார், ம.பூவரசன், ஆ.வெங்க டேசன், நா.பார்த்திபன், க.ச.பெரியார் மாணாக்கன், ப.சக்கரவர்த்தி,  உ.விஜய், சா.சென்னகிருட்டிணன், ஏ.எம்.ஜி.ராஜவர்மன், த.ராஜா, ப.கண்ணதாசன், க.கண்ணன், ம.தினகரன், இரா.அருள், முரளிகிருட்டிணன் சின்னதுரை, அ.அபிஷேக், ஓவியர் பெரு.இளங்கோ, சா.தாமோதரன், கே.என்.மகேஸ்வரன்.

பெண்கள்:- மு.பசும்பொன், த.மரகதமணி, மு.பவானி, மு.செல்வி, க.இறைவி, இரா.சு.உத்திரமணி, பி.ஆதித்தமிழச்சி, த.இளவரசி, மு.தமிழ்ச்செல்வி,

இரண்டு நாட்கள் வந்தவர்கள்:- வ.தமிழ்ச்செல்வன், திராவிட இலக்கியா.

ஒரு நாள் வந்தவர்கள்:- க.ச.இரணியன், தளபதி பாண்டியன், ந,மணிதுரை, பி.டார்வின், வி.யாழ் ஒளி, கணேசன்.

பெண்கள் 11, ஆண்கள் 27. மொத்தம் 38.

ஆசிரியர் உரை

பயணத்தின் நோக்கத்தை குறிப்பிட்டு அதற்கு மக்கள் ஆதரவைப் பெறும் வகையில் திரட்டிய மூன்று உண்டியல்கள் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டன. முதல் குழுவில் நீட் தேர்வு மற்றும் உயர் ஜாதியினருக்கான இடஒதுக்கீடு  பற்றிய புத்தகங்கள் ரூபாய் 16,030 க்கு விற்பனை செய்யப்பட்டு மக்களிடம் பரப்பட்டுள்ளன. இந்தப் பயணத்தை விளக்கி போடப்பட்ட துண்டறிக்கைகள் 10,000 மக்களிடம் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மாநில இளைஞரணித் தலைவர் ஆ.இர.சிவசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அருண்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், தி.மு.க. மருத்துவரணி தோழர் மருத்துவர் கீர்த்திகா தேவி, ம.தி.மு.க. பொறுப்பாளர் துரை.மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் யாக்கூப் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தமது சிறப்புரையை, “குடிசெய்வார்க் கில்லை பருவம் என்பதைப் போல, மழை பெய்யும் போதும் நாம் கூட்டம் நடத்துகிறோம்” என்று தொடங்கினார். தொடர்ந்து அவர், “இந்தியாவிலேயே நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட போதே, அது எவ்வளவு பெரிய ஆபத்து, பார்ப்பன சூழ்ச்சி, மனுதர்மம் பின்னணியில் இருக்கிறது என்பதை, முதன் முதலில் சுட்டிக்காட்டியது திராவிடர் கழகம் தான்” என்று, திராவிடர் கழகத்தின் முன்நோக்கும் தன்மையை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர், “அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரும்பாடுபட்டு கொண்டு வந்தவுடனே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், மனு தர்மத்தைத்தான் அரசியலமைப்புச் சட்டமாக கொண்டு வரவேண்டுமே தவிர, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் சரியில்லை. தூக்கிப்போடுங்கள் என்று அவர்களது பத்திரிகையில் எழுதி னார்கள்” என்ற முக்கிய மான வரலாற்றுத் தகவலை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். ஏன் அவர்கள் அப்படி எழுதினார்கள்? என்பதையும் விளக்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையை விளக்க முற்பட்டார். அதாவது, “We the people of India, declaring the Nation a SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC” என்று சொல்லிவிட்டு, ‘‘அதில் முதலில் வருவது சமூகநீதி. அதற்கு விரோதமாக இருப்பதுதான் மனுதர்மம்” என்று சுட்டிய பின்னர், அதற்கு தரவுகளைத் தருவதற்காக பிரதிவாதி பயங்கரம் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, இந்து மதம் எங்கே போகிறது? என்ற புத்தகத்தில், மனுதர்மத்தில் இருப்பதை எடுத்து எழுதப்பட்டிருக்கும், ”சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே” என்பதை வாசித்துக் காட்டினார். தொடர்ந்து அவர், “அதன் தொடர்ச்சிதான் நீட் தேர்வு; அதன் தொடர்ச்சிதான் EWS” என்று ஆயிரமாயிரம் ஆண்டுகால நமக்கான கல்வி மறுப்பை எளிமையாகவும், ஆழமாகவும் புரிய வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘நான் உலக வரலாற்றையெல்லாம் படித்திருக்கிறேன். சில நாடுகளில்; சில மதங்களில் பேதங்கள் இருந்தாலும், அந்த மக்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்படவில்லை. தன்னுடைய மக்களுக்கு கல்வியை மறுத்ததுடன், அதையும் மீறி கற்றுக்கொண்டால் கடுமையான தண்டனையும் தருவது உலகளவில் இந்துமதம் மட்டும்தான்” என்று, அம்பேத்கர் அவர்கள் மனம் நொந்து எழுதியதைச் சுட்டிக்காட்டி, உண்மையை நிறுவினார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் மருத்துவம் படிக்க மனு போடுவதற்கே சமஸ்கிருதம் தகுதியாக வைக்கப்பட்டிருந்ததையும், பெரியார் போன்றவர்கள் சொல்லி, பானகல் அரசர் அதை நீக்கியதையும், அதன்பிறகுதான் எல்லாரும் மருத்துவம் படிக்க விண்ணப்பம் செய்ததையும், அதனால்தான் இன்றைக்கும் நம் மக்களில் பலரும் மருத்துவம் படித்து பல்வேறு நிலைகளில் உயர்ந்திருப்பதையும் எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசுகையில், “தடை ஓட்டப் பந்தயம் போல, நீதிக்கட்சிக் காலத்தில் 1928இல் தொடங்கி, 1950 வரை நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு நிறுத்தப்பட்டதையும், பெரியார் போராடி, பிரிவு 15(4) சேர்க்கப்பட்டு, மறுபடியும் பெற்றதையும்’’ நினைவுபடுத்தினார். தொடர்ந்து, கிரிமிலேயர் பற்றியும், அதில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகளையும் குறிப்பிட்டும், திராவிடர் கழகம் தொடர்ந்து அதை எதிர்த்து வருவதையும் குறிப்பிட்டார். மேலும் அவர், நீட் தேர்வு சட்டவிரோதமானது என்பதையும் விளக்கினார். பொருளாதாரத்தில் இடஒதுக்கீடு என்று, பிரதமராக இருந்த நரசிம்மராவ், தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆகியோரின் முயற்சிகளையும், அவை முறியடிக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துரைத்தார்.

ஆசிரியர் உரை

EWS பற்றி குறிப்பிடும் போது, ”அய்ந்து ஆண்டுகள் ஆட்சி செய்த முதுகெலும்புள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி, தமிழ்நாட்டில் EWS முறையை கொண்டுவர விடவில்லை. அதையே இந்த அரசும் தொடர்வதாக தெரிவித்திருக்கிறார்கள். நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை? அப்படி நடந்தால், மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது எங்களைப்போன்றவர்களின் கடமையாகும்” என்று சுட்டிக்காட்டி உரையாற்றினார். மேலும் அவர், ‘‘இடஒதுக்கீடே இல்லாத இந்தியா என்று வடநாட்டில் பேசத்தொடங்கிவிட்டார்கள். நாம் ஜாதி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்” என்று ஆரிய, திராவிடர் போராட்டத்தின் தொடர்ச்சியை நிறுவி, “நீட் தேர்வு, EWS இரண்டையும் ஒழிக்கும் வரை திராவிடர் கழகம் போராடும்” என்று கூறி தமதுரையை நிறைவு செய்தார்.

மாவட்டக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ப.முத்தையன், கழகத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.  தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், ம.தி.மு.க. பொறுப்பாளர் துரை. மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் உள்ளிட்டோர் கழகத் தலைவருக்கு சிறப்பு செய்தனர். பயணத்தில் கலந்துகொண்ட அனைவரும் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அருணா பத்மாசூரன் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *