சென்னை, ஆக.12 அனைவருக்குமான கோயில் நுழைவுப் போராட்டத்தின் வரலாற்றை விளக்கும் ‘மக்களின் கருவறை – கோயில்களை ஜனநாயகப்படுத்திய 100 ஆண்டுகால போராட்டம்’ (The People’s Sanctum – The 100 year Struggle to Democratize Temples in India) எனும் ஆங்கில நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை – விக்டோரியா பொது அரங்கத்தில் நடைபெற்றது.
8.8.2026 அன்று மாலையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மூத்த வழக்கு ரைஞர் நளினி நடராஜன் புத்தகத்தினை வெளியிட, முதல் படியினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்பமை முனைவர் ஆனந்த் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் நாடா ளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி புத்தகம் பற்றிய உரையினை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாண்பமை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கோயில் நுழைவு பற்றிய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகளினாலான அடிப்படை உரிமைகள் பற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக புத்தக ஆசிரியர் வழக்குரைஞர் மனுராஜ் சண்முக சுந்தரத்திடம், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் புத்தக உள்ளடக்கம் பற்றி கலந்துரையாடிய வினா-விடை நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெருமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள்:
கவிஞர் கனிமொழி
கருணாநிதி எம்.பி.
100 ஆண்டு சமத்துவத்திற்கான போராட்ட வரலாற்றை எடுத்துக்காட்டி வெற்றியடைந்ததைக் கூறும் நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அனைவரும் கோயிலினுள் சென்று வழிபடும் உரிமை இன்றைக்கு சட்ட உரிமையாக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முன்னோட்ட போராட்டமான ‘வைக்கம் போராட்டம்’, தந்தை பெரியார் பங்கேற்று வெற்றி கண்டது. அனைவரும் கோயிலுக்குள் செல்லும் உரிமைக்கு முன்பாக, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்லும் உரிமைக்கானது வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டம் வெற்றி கண்டு அடுத்த கட்டமான அனைவரும் கோயிலுக்குள் செல்லும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்ட நிலைகள் அனைத்தி லும் தந்தை பெரியாரும், அவர் நிறு விய சுயமரியாதை இயக்கமான திராவிட இயக்கங்களின் பங்கும் முதன்மையானது. தன்னைப் பொறுத்த அளவிலும், தான் நிறுவிய அமைப்பிலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அதனை எதிர்த்துக் கடுமையானப் பிரச்சாரத்தை நடத்திடும் நிலையிலும், கடவுள் நம்பிக்கையாளரிடம் – வழிபாடு செய்பவரிடையே பாகுபாடு உள்ள நிலைமையை எதிர்த்து, வழிபாட்டில் சமத்துவ நிலைக்காகப் போராடியவர் தந்தை பெரியார். கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு அனைவருக்கும் உரிமை இல்லை. சமத்துவ வழிபாட்டு உரிமை கிடைத்திட போராடியவர் தந்தை பெரியார். கடந்த காலத்தில் கோயில் நுழைவிற்கு பின்னர் கருவறைக்குள் சென்று பூஜை செய்திடும் உரிமையும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று அறப்போராட்டம் கண்டார். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் 1971 இல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அர்ச்சகராக பயிற்சி அளித்தல், பயிற்சி பெற்றவர்களுக்கு அர்ச்சகர் நியமனம், 2021 இல் தான் நடைமுறைக்கு வந்தது.
மாண்பமை நீதிபதி
ஆனந்த் வெங்கடேஷ்
அனைவருக்குமான கோயில் நுழைவு குறித்து அம்பேத்கரும், தந்தை பெரியாரும் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மனுசாஸ்திரத்தில் உள்ளபடி மக்களை பாகுபடுத்தி அதன் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் பலருக்கு மறுக்கப்பட்ட சூழ்நிலை முன்பு நிலவியது. அப்படி மறுக்கப்பட்ட உரி மைகளுள் ஒன்று கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்திடும் உரிமை.
மேலும் சமூகத்தில் ஒவ்வொரு ஜாதியினரும் அனைவருக்கும் மேல் நிலையில் உள்ளோருக்கு எத்தனை அடி இடைவெளியில் இருக்க வேண்டும் என்பது நடைமுறை விதியாகவே நிலவி வந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் பொழுது, ஒடுக்கப்பட்டோரிடம் வாக்குமூலமோ, விசாரணை நடத்திடவோ நேர்ந்தால், அவர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைந்து சாட்சியம் அளிக்க முடியாது. நீதிமன்றத்திற்கு வெளியில் நின்றுதான் அளிக்க முடியும். விசாரணையும் வெளியில் நிற்கும் – சாட்சியம் அளிப்ப வர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாக கேள்வி கேட்கப்படும். இடைவெளி அதிகம் இருந்தால், நீதிமன்றத்தில் விசாரணையின் பொழுது கேட்கப்படும் கேள்விகளுக்கு, இடைவெளியில் ஒருவர் அதே கேள்வியை சத்தமாக மீண்டும் சொல்லி – ஒடுக்கப்பட்ட சாட்சியினரிடம் – பதில் பெற்று, பின்னர் சத்தமாக மீண்டும் நீதிமன்றத்தில் கேட்கும் வகையில் சூழ்நிலை நிலவிய காலம் இருந்தது. இந்த பாகுபாடு நிலைகளெல்லாம் பின்னாளில் மாற்றம் பெற்றது.
கோயில் நுழைவில் நிலவிய பாகுபாடு இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை இராஜதானியில் சட்ட ரீதியாக களையப்பட்டது. இந்திய அரசி யலமைப்புச் சட்டம் உருவான நிலையில் மத உரிமை, வழிபாட்டு நடைமுறை என்பது குடிமக்கள் அனைவருக்குமான அடிப்படை உரிமையாக பலம் பெற்றது. மத வழிபாடு சலுகை அல்ல; ஒவ்வொரு குடிமகனது அடிப்படை உரிமையாகும்.
நூலாசிரியர் வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், கலந்துரையாடலின் பொழுது தெரிவித்தவை:
அம்பேத்கரும், பெரியாரும் ஒரு வருக்கொருவர் நேரில் சந்தித்துப் பேசிடாத நிலையிலேயே 1920–களில் ஒத்த கருத்துடையவர்களாக இருந்து அனைவருக்குமான கோயில் நுழைவுப் போராட்டத்திற்காக பாடுபட்டுள்ளனர். பெரியார் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம், அம்பேத்கர் நடத்திய காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம் ஆகியவை மனித உரிமைப் போராட்டங்களில் முக்கியமானவை. பின்னர் அம்பேத்கர், தேசியத்தை வளர்த்தெடுப்பதிலும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தந்தை பெரியார், மனிதர்கள் அனை வரும் சமம் என்ற அடிப்படையில் கோயிலுக்குள் சென்று வழிபடுவதிலும், கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்வதிலும், நம்பிக்கை உள்ளவர்களிடம் சமத்துவம் நிலவிட வேண்டும் என்று வலியுறுத்தி தன் வாழ்நாள் இறுதி வரை களப்போராளியாகவே இருந்தார். அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்பதற்காக – அதன் நடைமுறைக்காகத் தொடர்ந்து போராடி வந்தார். கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்வதற்கு அனைவருக்கும் உரிமை என்ற நிலை யிலிருந்து கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையினைப் பெற்று நடைமுறைப்படுத்திடவே நூறாண்டு காலம் ஆகியிருக்கிறது.
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற இந்நாள் – முன்னாள் நீதிபதிகள், இந்நாள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.
