தமிழ்நாட்டின் திட்டங்கள் எதுவாயினும், அதில் ஒரு தனித்துவமும் முழுமையும் இருக்கும். உடனடியாகத் தெரியாத அதன் விரிந்த பலன்கள், வெகுகாலம் கழித்து, ஒரு சமூக மாற்றமே உண்டகியிருப்பதற்குச் சான்றாக நிற்கும். அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தவையாக இல்லாமல், எதிர்காலத்திலும் எவரும் கை வைக்க முடியாத வண்ணம் ஆழமானதாக வேரூன்றியிருக்கும். இது திராவிட இயக்கத்தின் செயல்முறை! சரியானதொன்றைச் சரியாகச் செய்தால், அதன் விளைவுகளும் சரியாகவே அமையும் என்பதற்கேற்றவையே இவ் வெற்றிகள்! இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதும், வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கான அரசு ஆணையும், அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தை உண்டாக்கியதும், மொழி-பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிரான போராட்டங்களும், சுயமரியாதைத் திருமண முறையும், அதைச் சட்டமாக்க மேற்கொண்டு பெற்ற வெற்றியும், பெண்களுக்கான சொத்துரிமையும், கல்வி – வேலைவாய்ப்பு, சமூக உரிமைகளும், இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புக்கும், விரிவாக்கத்துக்குமான சட்டங்களும் என்று ஒவ்வொன்றாகத் தனித் தனியே பகுத்துப் பார்த்தால், அதன் ஆழ அகலங்களை விரித்துப் பார்த்தால், நிகழ்ந்திருக்கும் சமூகப் புரட்சியில் இவை ஒவ்வொன்றின் கண்ணிகளும் எங்கெங்கே வினையாற்றி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மேலோட்டமான அதிகாரப் பங்கேற்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவம் என்றெல்லாம் மட்டும் குரல் கொடுத்திருந்தால், திராவிட இயக்கமும் இந்தியாவில் தோன்றி மறைந்த எண்ணற்ற சமூகக் கோபம் கொண்ட இயக்கங்களுள் ஒன்றாக வலுவற்று இருந்திருக்கும். அப்படிப்பட்ட அமைப்பாக இருந்திருந்தால், ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களால், அதை வெகு இயல்பாகக் கையாண்டிருக்க முடியும். பேர வலிமைக்கேற்ப சில பல ‘சீனி மிட்டாய்’களைக் கொடுத்துவிட்டு, அத்துடன் அவற்றைச் சாந்தியடையச் செய்யும் வித்தை பார்ப்பனியத்திற்குப் பழக்கப்பட்டிருக்கிறது. இன்றும் அது நடந்துகொண்டிருப்பதை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் செயல்பாடுகள் பலிக்கும் வட இந்திய மாநிலங்களைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். பெயருக்குச் சில அரசியல் பதவிகளை, ஏன் உயர் பதவிகளைக் கூட கொடுத்து, அலங்காரமாக அமர வைத்துவிட்டு, அதன் சூட்சுமக் கயிறுகளை மட்டும் தங்கள் பூணூலுடனே பிணைத்து வைத்துக் கொண்டு, எப்படி தங்கள் நலனுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பார்ப்பனியத்திற்கு 2500 ஆண்டுகாலத்தில், பல லட்சக் கணக்கான ஆட்சியாளர்களைச் சமாளித்த அனுபவம் உண்டு. கோடிக்கணக்கான சூழல்களைக் (Situations) கையாண்ட படிப்பினைகள் உண்டு. எண்ணற்ற ‘கேஸ் லா’க்கள் (Case Laws) உண்டு. இவற்றையெல்லாம் தங்களுக்கான பாடங்களாகக் கொண்டுதான் பார்ப்பனிய ஆதிக்கம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
ஆனால், இவற்றில் இருந்து தான் திராவிட இயக்கமும், தந்தை பெரியாரின் தத்துவங்களும், நடைமுறைகளும் மாறுபட்டு நிற்கின்றன. சமூக மாற்றத்தின் பல பரிணாமங்களையும், விருப்பங்களையும் கண்டு அவற்றையெல்லாம் சமாளித்து வந்திருக்கும் ஆரியத்திற்கு, திராவிட இயக்கத்தின் அணுகுமுறை ஏன் அச்சத்தைக் கொடுக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். புத்தருக்குப் பிறகு ஒரு தீர்க்கமான எதிரியை இப்போதுதான் ஆரியம் சந்தித்திருக்கிறது. புத்தம் வீழ்த்தப்பட்ட இடத்தையும் புரிந்துகொண்டு எழுந்துள்ள இயக்கம் என்பதால் தான், ஆரியம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. நச்சுயிர்கள் கூட அடுத்த பரிணாம வளர்ச்சியுடன் புது வடிவமெடுத்து (new variant) வருகின்றன என்றாலும், அவற்றை அடையாளம் கண்டு அழிப்பதற்கான மருந்துகளுடன் அறிவியல் தயாராக இருப்பதில்லையா? அப்படித்தான் திராவிட இயக்கம், ஓர் அறிவியல் இயக்கமாக இன்று எழுந்து நிற்கிறது.
எனவேதான், கொஞ்சமும் இடம் கொடுக்காமல் எப்படியாவது இதனை வீழ்த்தியே தீர வேண்டும் என்று பார்ப்பனியம் எல்லா வழிமுறைகளையும் கையாண்டு பார்க்கிறது. கொஞ்சம் சறுக்கினாலும், ‘பார்த்தாயா விழுந்துவிட்டார்கள்’ என்று . பரிகசித்து, ஊக்கமிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. ஒரே ஒரு தேர்தல் தோல்வியைக் காட்டியே ‘60 ஆண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆண்டுவந்த நிலை இன்று மாறி விட்டது. இனிமேல் எல்லாம் இப்படித்தான்’ என்று கொக்கரிக்கிறது.
திராவிடம் என்பது அரசியல் வெற்றி, தோல்விகளால் அழிந்து போகக் கூடியதல்ல. சமத்துவ, சமூக நீதி, பகுத்தறிவு, விடுதலை உணர்வுகளை மக்களிடம் ஆழமாக விதைத்துள்ள இயக்கம். எதுவுமே இல்லாமல், சுழியத்திலிருந்து (Zero) தொடங்கிய இயக்கம். தொடர் போராட்டம் மட்டுமே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை உணர்ந்த இயக்கம். ஏராளமான தோல்விகளைக் கண்டும் சற்றும் துவண்டுவிடாத மன உறுதி படைத்த தொண்டர்களைக் கொண்ட இயக்கம். உரம் பெற்ற தலைவர்களைப் பெற்ற இயக்கம். அப்படியொருவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர். வரலாறு காணாத வெற்றிகளைக் கண்டவர்; வஞ்சகத்தால் பல தோல்விகளையும் கண்டவர். ‘யாருக்காக உழைக்கிறோமோ அந்த மக்களே புரிந்துகொள்ளாமல் நம்மைத் தூற்றவும் செய்வார்கள். எனவே பொதுவாழ்வுக்கு அடிப்படைத் தகுதி – நன்றி எதிர்பார்க்காத குணமே!’ என்னும் பெரியாரின் பாடத்தைப் பயின்றவர். அதனால் தான் மிகப் பொருத்தமாக, அவர் பிறந்தநாளைத் (ஜூன் 3) திராவிடர் எழுச்சி நாளாக அறிவித்து, அதை முன்னிட்டு 103 கூட்டங்களை நாடு முழுக்க நடத்த ஆணையிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்!
தமிழகம் வீழ்ச்சியுறாது தடுக்க, நடக்கட்டும் திராவிடர் எழுச்சி நாள் கூட்டங்கள்! திராவிடத்தின் தீரத்தை, திண்மையை, மேன்மையை, மாண்பை, வரலாற்றை, சாதனைகளைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல நடக்கட்டும் திராவிடர் எழுச்சி நாள் கூட்டங்கள்! திக்கெட்டும் நடக்கட்டும் திராவிடர் எழுச்சி நாள் கூட்டங்கள்!
