பகுத்தறிவுப் பகலவன் தந்தை ‘பெரியாருக்கு வணக்கம்’ தொடங்கி, ‘ஸநாதனத்தை ஒழிப்போம்’ என்ற முத்தாய்ப்போடு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையில் பதிவு செய்துள்ளார் மானமிகு உதயநிதி மு.க. ஸ்டாலின்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையிலேயே தான் யார்? தான் சார்ந்த திராவிட இயக்கம் – சுயமரியாதை இயக்கம் எந்தக் கொள்கையை மூல வேராகக் கொண்டது என்பதைப் பறைசாற்றியிருக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான மானமிகு உதயநிதி அவர்களை முழு மனதுடன் பாராட்டுகிறோம்.
சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில், தருணத்தில், உரையை ஆற்ற வேண்டிய இடத்தில் பளிச் சென்று முத்தாய்ப்பாக ஒரு கருத்துரையை வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரும் வகையில் பதிய வைத்துள்ளார் என்பதை நாம் எடுத்துக் கூறியாக வேண்டும்.
இந்த பகுத்தறிவும் சமத்துவமும், சுய மரியாதையும் சார்ந்த இந்தக் கருத்து இந்திய அளவில் பேசப்படும் என்பதில் அய்யமில்லை. பேசப்படட்டும்! அப்பொழுதுதான் இதுபற்றிய உண்மைத் தன்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும்.
விவாதப் பொருளாகும் போதுதான் சிந்தனை விரியும் – சிறப்பான முறைகளும் தெரியும்!
பகுத்தறிவுப் பகலவன் என்று தந்தை பெரியாருக்குத் தனது வணக்கத்தைத் தொடங்கும் போதே – அதில் குடி கொண்டுள்ள கூர்மையான லட்சியமும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ சிந்தனையும், சமூகநீதியும் உள்ளடக்கமாகக் கொண்டது என்பது வெளிப்படை!
‘எதிர்க்கட்சியாக இருப்போமே தவிர எதிரிக் கட்சியாக இருக்க மாட்டோம்’ என்று மானமிகு உதயநிதி ஸ்டாலின் கூறியதில் உள்ள ஜனநாயகப் பண்பு பெரிதும் போற்றத் தகுந்ததாகும்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் எதிர்க்கட்சித் தலைவரின் பண்பு மிளிரும் ஜனநாயக ஆட்சியில் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் சிறந்த உரையாக இருந்ததுபற்றி நேற்றைய ‘விடுதலை’யில் பாராட்டி எழுதியுள்ளார்.
தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பான ஒன்றே!
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்குத் தொண்டாற்றுவது அவர்களின் வளர்ச்சிப் பணிக்காகப் போட்டிப் போடுவதில் அக்கறை செலுத்துவது தான் நற்பண்பாகும்.
மக்களைப் பிரிக்கும் ஸநாதனத்தினை ஒழிப்பதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் முத்தாய்ப்பாகக் கூறியது – உண்மையான திராவிட இயக்கத்தின் அசலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது ஸநாதனம் குறித்து, பொது நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து, மிகப் பெரிய பேசு பொருளாக இருந்தது.
ஆனால் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தமது கொள்கையில் உறுதியாக இருந்தது ஒரு தனித் தன்மையாகும்.
இப்பொழுது எதிர்க்கட்சிகளின் தலைவராக இருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரின் இந்த அழுத்தமான பதிவு போற்றத்தகுந்ததாகும்.
‘‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்’’ என்றார் தந்தை பெரியார் ‘(குடிஅரசு’ 11.11.1944).
பேதம் – எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்த்து சமத்துவ நிலையை உண்டாக்கப் பாடுபடுவதுதான் மனிதன் பகுத்தறிவுவாதி, சுயமரியாதை உடையவன் என்பதற்கு அடையாளமாகும்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் போராடியதற்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அந்தவகையில் சட்டம் இயற்றியதற்கும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில் செயல்படுத்திக் காட்டியதற்கும் காரணமே ‘பிறப்பின் அடிப்படையில் பேதம் கூடாது’ என்ற சமத்துவ எண்ணத்தின் அடிப்படையில்தான்.
ஸநாதன எதிர்ப்புக் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் மானமிகு உதயநிதி தெரிவித்த கருத்து ஆழமானது. ஆனால், சிலர் ஸநாதனம் என்பதன் உண்மைத் தன்மையை மாற்றி, பதிவுரை, பொழிப்புரை கூறுவது கடைந்தெடுத்த மோசடியாகும்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி தனது ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலில் (முதல் தொகுதி பக்கம் 282) ஸநாதனம் என்று சொல்லும்போது வருணாசிரமம் என்றுதான் பொருள் கூறியிருக்கிறார்.
வருணாசிரமம் என்றால் பிறப்பின் அடிப்படையில் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற பேதத்தை உள்ளடக்கியதாகும்.
‘‘நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை.அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க, அந்த வர்ணாதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது’’ என்று கிருஷ்ணன் கூறுவதாகக் கீதை கூறுகிறது. (கீதை அத்தியாயம் – 4; சுலோகம் 13).
இந்த நிலையில் ஸனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொல்லுகிறார்.
‘‘நாம் எதிர்பார்க்கின்ற தேர்தல், சிம்மாசனத்திலே அமர்வதல்ல; கோட்டையில் உட்காருவதல்ல; இவற்றை எல்லாம் விடப் பெரியது சமுதாயத்தை எழுச்சி உள்ளதாக ஆக்குவது, தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனுக்கு எடுத்துக்காட்டுவதுதான் நாம் வெற்றிபெற வேண்டிய, சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறக்க விடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பேசினார்.
இப்படி எங்கு பேசினார்?
சென்னையில் – திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் 2.6.2008 அன்று பேசினார்.
ஆம் திமுக வெறும் அரசியல் கட்சியல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
அந்த வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மானமிகு உதயநிதி ஸ்டாலின் முதலாவதாக ஆற்றிய உரை திராவிட இயக்கக் கொள்கைச் சாசனமாகும்.
அவருக்கு வாழ்த்துகள் – பாராட்டுகள்!
