‘விடுதலை’ 92 ஆம் ஆண்டு பெருவிழாவில் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள்!

4 Min Read

‘குடிஅரசு’ ஏடாக இருந்தாலும், ‘விடுதலை’யாக இருந்தாலும் திராவிட இயக்க ஏடுகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு!
‘விடுதலை’க்குச் சந்தா கொடுங்கள்; வளர்ச்சி நிதி கொடுங்கள்!
எங்கும் ‘விடுதலை’யைப் பரவச் செய்யுங்கள்!

 

சென்னை, ஜூன் 2 ‘குடிஅரசு’ ஏடாக இருந்தாலும், ‘விடுதலை’யாக இருந்தாலும், திராவிட இயக்க ஏடு களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு! ‘விடுதலை’க்குச் சந்தா கொடுங்கள்; வளர்ச்சி நிதி கொடுங்கள்! எங்கும் ‘விடுதலை’யைப் பரவச் செய்யுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (1.6.2026) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் ‘விடுதலை’யின் 92 ஆம் ஆண்டு பெரு விழா நடைபெற்றது.

அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

திராவிடர் கழகத்தினுடைய ஆழம், அகலம், வரலாறு, சாதனையாளர்கள், இதற்கு உழைத்தவர்கள் என்ற மிகப்பெரிய அடித்தளமும் அடிக்கட்டுமானமும் அவ்வளவு சிறப்பானது. தோழர்களே, ‘விடுதலை’, ‘குடிஅரசு’ ஏடுகள்தான் பெரிய சமூகப் புரட்சியை உருவாக்கின. இன்றைக்கும் பார்த்தீர்களானால், ‘விடுதலை’க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

பொன்னாடை வேண்டாம் – சந்தாவாகவோ,  நிதியாகவோ கொடுங்கள்!

இன்றைக்கு நான் அறிக்கை ஒன்றை ‘விடுதலை’யில் எழுதியிருக்கிறேன். தோழர்களில் சில பேர் வந்து எனக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்துகிறார்கள். நான் எழுதியிருப்பதை அவர்கள் படிக்கவில்லை; படித்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். அதுதான் மிக முக்கியம். நான் எழுதியிருக்கும் மிக முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால், இந்தப் பொன்னாடை போன்றவற்றை வாங்கி வராதீர்கள்; புத்தகம் கூட கொடுக்க வேண்டாம். ஏனெனில், அதுகூட என்னிடம் போதுமானதாக இருக்கிறது. எனவே, அதை நிதியாகக் கொடுத்துவிடுங்கள்.

‘விடுதலை’ நாளிதழுக்குச் சந்தா கொடுங்கள், அதை மக்களிடம் பரப்புங்கள். இப்பொழுதெல்லாம் நான் திருமணங்களுக்குச் சென்றால், ‘என்னுடைய தலைமையில் தான் திருமணம் நடத்த வேண்டும், இந்தத் தேதியில் வர வேண்டும்’ என்று வற்புறுத்திக் கேட்பவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான் விதிக்கி றேன். அது என்னவென்றால், அவர்கள் அய்ந்து சந்தாக்கள்  கொடுக்க வேண்டும். அப்படித் தந்தால் தான் நான் அந்தத் திருமணத்திற்கு வருவேன்.

‘மணமகள் வீட்டில் மூன்று முகவரிகள், மணமகன் வீட்டில் இரண்டு முகவரிகள் என மொத்தம் அய்ந்து உறவினர்களின் முகவரிகளைக் கொடுங்கள்; அவர்க ளுக்கு ‘விடுதலை’ நாளிதழ் புதிதாகச் செல்லட்டும், அதை அவர்கள் படித்துப் பழகட்டும்’ என்று கூறுவேன். அதையே தான் இன்றும் நான் எழுதியிருக்கிறேன்.

தோழர்களுக்கு
அன்பான வேண்டுகோள்!

ஆகவே, தோழர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள்; தயவுசெய்து என்னை வந்து பார்க்கும்போது பழங்கள், பொருள்கள் போன்ற வற்றை வாங்கி வராதீர்கள். அல்லது வேறு புத்தகங்க ளையோ, ஓடிப்போய் கைத்தறித் துண்டு உள்ளிட்ட பொருட்களையோ வாங்க வேண்டாம். நான் கைத்தறிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஏன் சொல்கிறேன் என்றால், அவையெல்லாம் ஏற்கெனவே என்னிடம் போதுமான அளவுக்கு இருக்கின்றன.

மாறாக, இதைக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து, ‘விடுதலை வளர்ச்சி நிதி’ என்று சொல்லி உங்களால் இயன்றதைக் கொடுங்கள். ‘நம்மால் ரூ.2000 கொடுக்க முடியவில்லையே’ என்று நினைத்துக் கவலைப்படாதீர்கள். நிதி கொடுக்கும்போது அதன் ரூபாய் மதிப்பு முக்கியமல்ல; அதற்குப் பின்னால் உள்ள உங்களுடைய உணர்ச்சிதான் மிக முக்கியம். நீங்கள் காட்டுகிற ஆதரவும், ஊக்கமும்தான் மிக முக்கியம், அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். எங்கும் விடுதலையைப் பரவச் செய்யுங்கள்.  ‘விடுதலை’யின் வரலாற்றில் இப்படி எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. ‘விடுதலை’யினுடைய வரலாறு சாதாரணமானது அல்ல.

பெரிய பெரிய ஆட்கள் எல்லாம், ‘‘விடுதலை’யில் ஒரு செய்தி வந்தால் போதும்;  உடனே மாறிவிடும்’’ என்று சொல்வார்கள். ‘விடுதலை’யில்,  ‘‘இது உண்மையா?’’ என்று ஒரு தலைப்பில் பெட்டிச் செய்தி வெளியிடுவோம்.  அதற்குப் பெரிய மிக முக்கியத்துவம் இருக்கும். அதனுடைய பலாபலன் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.  தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் இருந்து, அண்ணா காலத்தில் இருந்து எல்லா காலகட்டத்திலும், ‘குடிஅரசு’ ஏடாக இருந்தாலும், ‘விடுதலை’யாக இருந்தாலும் திராவிட இயக்க ஏடுகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.  எத்தனையோ லட்சக்கணக்காக போகிற பத்திரிகைகள், நாளேடுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றிற்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு இந்த ‘விடுதலை’க்கு உண்டு.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில் குறிப்பிட்டார்.

(முழு உரை பின்னர் வெளிவரும்)

திராவிடர் கழகம்

அமெரிக்க பெரியார் பன்னாட்டமைப்பின் எழுத்தாளர் அகிலா செல்வாஜூவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற
எழுத்தாளர் ப.திருமாவேலனுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் புத்தகங்களை வழங்கினார். விழாவில் இயக்க நூல்கள் வெளியிடப்பட்டன (சென்னை, 1.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *