‘விடுதலை’ பத்திரிகையிலே முதல் பக்கத்திலே தேவநேயப் பாவாணரின் அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென்ற வேண்டுகோள் இருந்தது.
உடனடியாக அதை கத்தரித்து டில்லிக்கு தம்பி தயாநிதிமாறனுக்கு அனுப்பி வைத்தது மாத்திரமல்ல. தொலைபேசியிலும் அதைச் சொல்லி அவரும் அதை நிறைவேற்றி இன்றைக்கு அந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு தூண்டு சக்தியாக இருந்தது நம்முடைய வீரமணி அவர்கள் என்பதையும், இதைப் போல தூண்டு சக்தியாக நீங்கள் பல காரியங்களில் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
(தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர், அறிஞர்களின் அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழாவில் (18.2.1906) விடுதலை 19.2.2006)
– – – – –

செய்தி இதழல்ல கருத்திதழ்!
சுயமரியாதைக் கொள்கைகளையே விடுதலையின் கொள்கைகளாக அமைத்தார் பெரியார் என்பது இயல்பானதே. அதற்காகவே குடிஅரசு கிழமையிதழ் – பயன்பட்டு வந்தாலும், அந்நோக்கத்தை நிறைவேற்றுகின்ற முயற்சியில் கூடுதலாக நாளேடு ஒன்றும் துணையாக இருக்க வேண்டும் என்பதில் விடாப் பிடியாக அவர் இருந்தார்.
எனவே நீதிக்கட்சியாரிமிருந்து 1937இல் விடுதலையைப் பெற்றுக் கொண்டு ஈரோடு சென்ற பெரியார். தன்மதிப்பு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைத் தமிழ் மக்களிடத்தே வலியுறுத்தி வளர்த்தல், தீண்டாமைக் கொடுமை அழிப்பு. வேத – சாஸ்திர – புராண-இதிகாசங்களை எதிர்த்தொதுக்குதல், புரோகிதப் புறக்கணிப்பு, கடவுள் மதக் கற்பனைகளை மறுத்தல், பெண்ணடிமை நீக்கம், கைம்பெண் மணம். மணவிலக்கு உரிமை, சுயமரியாதை முறை வாழ்க் கையொப்பந்தம், வடமொழி – இந்தி மொழிகளின் தீங்குகளைத் துடைத்தெறியக் கிளர்ச்சிகள் மேற் கொள்ளுதல், வடநாட்டாரின் வல்லாட்சி கூடாதென அறவழிப் போராட்டங்கள் நடத்துதல்.
அனைத்துச் சாதிப் பிரிவினருக்கும் கல்விச் செல்வம் கிட்டுமாறு செய்தல், அரசுப் பணிகளில் வகுப்புவாரி உரிமை வழங்கும் சட்டம் இயற்றல், இவற்றையெல்லாம் எய்துவதற்கான முயற்சிகள், சிறை வாழ்வையும் ஏற்க அணியமாயிருத்தல் முதலிய தன்மான இயக்கக் கொள்கைகள் திட்டங்கள் தொடர்பான கருத்துகளையே விடுதலையில் அச்சிட்டு வெளியிட் டார் ஆக விடுதலை நாளிதழ் முற்றிலும் ஒரு செய்தி இதழாக நடத்தப் பெறவில்லை. அது ஒரு கருத்திதழாகவே நடைபோட்டது
பெரியார் பேருரையாளர்
அ.இறையன் எழுதிய இதழாளர் பெரியார்
பக்கம் 317
