புதுடில்லி, மே 30 கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ்’ சமூக ஊடகக் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில், அதனை ரத்து செய்வது குறித்து மறுஆய்வுக் குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 21-ஆம் தேதி இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த அமைப்பின் சார்பில் ‘கரப்பான்பூச்சி திரும்பிவிட்டது’ என்ற பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டு, தற்போது அது 2,27,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களுடன் தீவிரமாக இயங்கி வருகிறது.
தங்களது பழைய கணக்கு முடக்கப் பட்டதை எதிர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்
மனுதாரர் அபிஜித் திப்கே, காணொலி கான்பரன்ஸ் (காணொலி காட்சி) மூலம் மறுஆய்வுக்குழுவின் முன் ஆஜராகி தனது தரப்பு நியாயங்களை விளக்க நீதிபதி அனுமதி யளித்தார்.
கட்சியின் எக்ஸ்’ கணக்கு மீதான தடையை நீக்குவதில் மறுஆய்வுக் குழுவிற்குத் திருப்தி ஏற்படும் பட்சத்தில், கணக்கின் முடக்கத்தை ரத்து செய்யும் முழு சட்ட அதிகாரமும் அக்குழுவிற்கு உண்டு என நீதிபதி தெளிவுபடுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் எக்ஸ் நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, மறுஆய்வுக்குழு அனைத்து அம்சங்களையும் முழுமையாகப் பரிசீலித்து, தன் முடிவை நீதிமன்ற ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
