‘நீதித்துறையில் ஊழல் இருப்பதை மறுக்க முடியாது!’ திரைப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

2 Min Read

சென்னை, மே 29 ‘‘நீதித்துறையில் ஊழல் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது; அதேபோல நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறி, ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.

கருப்பு திரைப்படம்!

இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் நீதித்துறையையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகக் கூறி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவரது மனுவின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:

ஊழல் உண்மைதான்

‘கருப்பு’ திரைப்படத்தின் கதைக்களம் முழுக்க முழுக்க நீதித்துறையை மய்யமாகக் கொண்டது. அதில் வரும் நீதிபதி ஊழல்வாதியாகவும், செல்வாக்கு மிக்க வழக்குரைஞர் நீதி மன்றத்தை ஆட்டிப்படைப்பவராகவும் காட்டப்பட்டுள்ளார். நீதித்துறையில் ஊழல் நீதிபதிகள் நேற்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் சான்றுகள்

நாட்டில் உள்ள 20 சதவீத நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பரூச்சா கேரளாவில் ஒருமுறை வெளிப்படையாகவே தெரி வித்துள்ளார். அதேபோல், மும்பை உயர் நீதி மன்றம் தொடர்பான ஒரு வழக்கில், ‘‘ஊழல் என்னும் புற்றுநோய் செல்கள் நீதித்துறையின் உயிர்நாடிகளுக்குள் ஊடுருவி வருகிறது” என உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது.

 நீதித்துறையின் சுயபரிசோதனை

வழக்குரைஞர்கள் சிலரின் தொடர்பு இல்லாமல் நீதித்துறையில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த ஊழல் நிகழ்வுகளை நாங்களும் அறிவோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது இதுபோன்ற கருப்பு ஆடு களைக் களையெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. திரைப்படத்தில் வரும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும், அவற்றை முழுமையாக மறுக்க முடியாது.

படைப்புச் சுதந்திரம்

கருத்துச் சுதந்திரம் திரைப்படக் கலை ஞர்களுக்கும் பொருந்தும். ஒரு கார்ட்டூ னிஸ்ட்டுக்கு தன் கற்பனையால் அரசியல் கருத்துகளை வெளியிட என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை திரைப்படக் கலை ஞர்களுக்கும் உண்டு. மேலும், தணிக்கை வாரியம் சான்றளித்த பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது.

‘‘நாம் இப்போது சமூக ஊடகங்களின் யுகத்தில் இருக்கிறோம். விமர்சனங்கள் கொடூரமாக இருந்தாலும், அதை புறக்கணித்து விட்டு நீதித்துறை முன்னோக்கிச் செல்ல வேண்டும். இப்படத்தில் ‘ஏழுகிணறு நீதிமன்றம்’ என்ற கற்பனையான பெயரில்தான் ஊழல் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நீதித்துறையையும் அது கேள்விக்குறியாக்கவில்லை. சென்னை நகரில் ஏழுகிணறு நீதிமன்றம் என்ற பெயரில் எந்த நீதிமன்றமும் இல்லை என்பதால், இதில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் இல்லை‘‘ என்று கூறி, இயக்குநர் மற்றும் நடிகர்கள் மீதான நடவடிக்கையை நிராகரித்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *