‘இந்திய அரசியலின் மோசமான காலகட்டம்’ என்று சொல்லப்பட்டவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 12 ஆண்டுகள் ஆட்சிக் காலம் தான்!
ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிள்ளையான பாரதிய ஜனதா கட்சி, தனிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்தாலும் சரி, கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சியில் இருந்தாலும் சரி, எதற்காக ஆர்.எஸ்.எஸ்.சால் உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறதோ அதிலிருந்து வழுவாமல் தன் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசில் பெரும்பான்மை பெறுவது என்பது மக்களவையில் மட்டும் பெரும்பான்மை பெறுவது ஆகாது என்று பா.ஜ.க. கருதுகிறது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றால் தான், அதன் மூலக் கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதால் தான், மாநில ஆட்சிகளைப் பிடிப்பதிலும் மும்முரம் காட்டுகிறது. தற்போதைய சூழலில் மக்களவையில் பா.ஜ.க.வுக்கு முழுப் பெரும்பான்மை இல்லை – ஆட்சியே தெலுங்குதேசம், அய்க்கிய ஜனதா தளம் கட்சிகளின் முட்டுக் கொடுப்பில் தான் தொடுக்கிக் கொண்டுள்ளது. எனினும், படிப்படியாக அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறவும், அல்லது வெற்றியை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொள்ளவும் எல்லா வகையான உத்திகளையும் பயன்படுத்துகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் 12 கால ஆட்சி என்றால், முதல் ஆட்சிக் காலமான 2014 – 2019 காலத்திலும், தனிப் பெரும் பலம் பெற்று ஆட்சியமைத்த 2019 – 2024 காலத்திலும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார் கும்பல் நடத்திய வன்முறைகள், மாட்டுக்கறி கொலைகள், கல்வித் துறையைக் காவி மயமாக்கவும், கார்ப்பரேட் மயமாக்கவும் மேற்கொண்ட முயற்சிகள், விவசாயிகள் சட்டத் திணிப்பு, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பாசிச நடவடிக்கைகள், பொருளாதார நசிவு, எதிர்க்கட்சிகளை நசுக்குதல், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி திணிப்பு, மாநில உரிமை பறிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், நீட் திணிப்பு, பெரு முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் நடந்த கும்பல் கொலைகள், சிறுபான்மையினர் உரிமை பறிப்பு, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய அமைப்புகளை அரசியல் நலன்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் 370 உரிமைப் பறிப்பு, ராமன் கோவில் கட்டுமானம், ஒடுக்கப்பட்டோர் உரிமைப் பறிப்பு, சமூகநீதிக் குழப்படிகள், பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று அடுக்கடுக்காக நிகழ்த்தப்பட்டவை யாவும் நினைவுக்கு வந்து போகும். அடுத்து 2024-இல் பெரும்பான்மை அற்ற அரசாக இருந்தாலும் கூட, பா.ஜ.க. தன் போக்கிலிருந்து மாற்றம் காட்டவில்லை. எஸ்.அய்.ஆர் என்ற பெயரில் வாக்குகளைத் திருடுதல், நீக்குதல், குடியுரிமையை வேறு பெயரில் தடுக்க முனைதல், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தென் மாநில மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குதல் என்று நீண்ட கால நோக்கிலான ஆபத்தான செயல்பாடுகளை எவ்விதத் தயக்கமும் இன்றி முன்னெடுத்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய நீதிமன்றங்களின் முடிவுகள் மதில்மேல் பூனைதான்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில், இந்தியா முழுவதும் இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைதான் தொகுதி மறுசீரமைப்பு என்னும் பெயரில் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் மக்களவை இடங்களைக் குறைக்கும் ஆபத்தைப் போக்கியது! ஆனால், இத்தகைய பெரும்பான்மை தேவைப்படாத பிரச்சினைகளில் இன்னும் எண்ணிடற்கரிய இடர்கள் இந்த 12 ஆண்டு கால ஆட்சியில் கண்ணிவெடிகளாகப் புதைக்கப்பட்டுள்ளன.
இப்படி பா.ஜ.க.வின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு தான், பா.ஜ.க.வையோ, அதன் கூட்டணிகளையோ ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகளும், சமூகநீதி ஆர்வலர்களும், மனித உரிமை, மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரும் குரல் கொடுக்கின்றனர்; போராடுகின்றனர். அதற்காக, அதுவரை எதிர் எதிர் அணியில் நின்றவர்கள் கூட ஓரணியில் நிற்கின்றனர் என்றால், அதன் அடிப்படை நோக்கம் பாசிச பா.ஜ.க. எதிர்ப்பு – ஜனநாயகக் காப்பு என்பதுதான்.
இந்த ஒருங்கிணைப்பு எங்கெங்கே குறைகிறதோ, எங்கே அரசியல்வாதிகள் விலைபோகிறார்களோ, எங்கே பா.ஜ.க.வுடன் நீக்குப் போக்காக நடந்துகொண்டே காலத்தைக் கடத்தலாம் என்ற ‘வழவழாத்’ தன்மை இருக்கிறதோ அங்கெல்லாம் பா.ஜ.க.வின் ‘ஆக்டோபஸ் கரங்கள்’ ஒரு சில மாதங்களிலேயே தங்கள் வித்தைகளைக் காட்டி விழுங்கியுள்ளன. மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக இருந்த மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் அரசை ஒழித்து, பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. அதன் விளைவுகள் என்ன என்பதை இந்த சொற்ப நாட்களிலேயே அமைதி இழந்து தவிக்கும் மேற்கு வங்காளம் உணரத் தொடங்கியுள்ளது. பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியர்கள் மீதான அதீத கட்டுப்பாடு, வழிபாடு தடுப்பு, தாக்குதல், பசுக் குண்டர்களின் வன்முறை என்று நாளும் வரும் செய்திகள் அச்சத்தைத் தருகின்றன. பா.ஜ.க. புகுந்தால் நாடு நாசமாகிவிடும் என்று மதச்சார்பற்ற தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததை, ‘‘பா.ஜ.க.வைக் காட்டி அரசியல் நலன் பெறப் பார்க்கிறார்கள்’’ என்று கொச்சைப்படுத்திய ‘நடுநிலை’ வாதிகள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பது சந்தேகமே! நடுநிலை என்று சொல்லவும் நாளை அவர்களை விட்டுவைக்காது ஆர்.எஸ்.எஸ்.! எச்சரிக்கை!
