தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

10 Min Read

‘‘நான் மக்களோடு போய்க் கொண்டிருக்கிறவன் அல்ல;
மக்கள் பின்னாலே போகக்கூடியவன் அல்ல;
என் பின்னாலே மக்கள் வரவேண்டும்!’’

சென்னை, மே 30 ‘‘நான் மக்களோடு போய்க் கொண்டிருக்கிறவன் அல்ல; மக்கள் பின்னாலே போகக்கூடியவன் அல்ல; என் பின்னாலே மக்கள் வரவேண்டும்’’ என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக் கூறி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டம்!

கடந்த 23.5.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டத்தில்,  ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

‘பெரியார்’ திரைப்படத்தில் காணலாம்!

மணியம்மையார் அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அய்யா அவர்கள் சில நேரங்களில் மாற்றுக்கருத்து கொள்ளும்போது, அவற்றை அவர் முறைப்படுத்தியுள்ளார். இந்த ஏற்பாட்டின் பின்னணி யில் பெரியதொரு தொலைநோக்குப்பார்வை இருந்தி ருக்கிறது!  அய்யா அவர்கள் எதையும் ஒரு நாளில் முடிவு செய்ய மாட்டார்; பல கோணங்களில் அதைப்பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பார்.

“நீங்கள் வந்து ரிஜிட்ஸ்ரேசனின்போது சாட்சிக் கையெழுத்திட முடியுமா? குடும்பப் பிரச்சினைகள் இருப்பதால் உங்கள் கருத்தைக் கூறுங்கள். இது முற்றிலும் நட்பு முறையிலானது; இதற்கும், அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, நீங்கள் வந்து பதிவில் கையெழுத்திட வாய்ப்பிருக்குமா?’’ என்று கேட்ப தற்காகத் திருவண்ணாமலை ரயில் நிலைய சந்திப்பில் கவர்னர் ஜெனரல் (ஆளுநர்) பதவியில் இருந்த இராஜ கோபாலாச்சாரியாரைச் சந்தித்துக் கேட்கிறார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநாட்டின்போது அய்யாவிடம், அந்தச் சந்திப்பைப்பற்றிக் கேள்வி கேட்டனர். ‘‘நீங்கள் இரண்டு பேரும் ரகசியமாக சந்தித்து என்ன பேசினீர்கள்?’’ என்று கேட்டனர்.

 ‘‘அது என் சொந்த விஷயம். அச்சந்திப்பு கொள்கையைப் பொறுத்தது அல்ல!’’

உடனே அய்யா அவர்கள் ஒரே வார்த்தையில், ‘‘அது என் சொந்த விஷயம். அச்சந்திப்பு கொள்கையைப் பொறுத்தது அல்ல’’ என்றார்.

‘‘இல்லை, பெரியார் அவர்கள் எதையோ  மறைக்கிறார். ராஜகோலாச்சாரியார் வந்தாரு, அவர்தான் இந்த யோசனைகளை இந்த இயக்கம் ஒழிய வேண்டும் என்பதற்காகச் சொன்னார்’’ என்று பலரும் அதுபற்றிக் கூறினர். அறிவு ஜீவிகள் அதற்கும் மேலே மேலே நிறைய வாதங்களைச் சொன்னார்கள்.

ஆனால், அந்த ரயில் நிலைய சந்திப்பு நடந்த நேரத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. ‘நான்,  இங்கிருந்து சென்ற பிறகு, இதைப்பற்றி யோசித்துச் சொல்கிறேன்’ என்று இராஜகோபாலாச்சாரியார் கூறிவிட்டுச் சென்றார். அதன்படியே அவர், சட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்த ஆலோசனையைக் கேட்டிருக்கிறார்.

இராஜகோபாலாச்சாரியாருக்கு, அதிகாரிகளின் யோசனை!

அதற்கு அதிகாரிகள், ‘நீங்கள் கவர்னர் ஜெனரல் பதவியில் இருக்கிறீர்கள்; எனவே, அப்படிச் செய்ய முடியாது; ரிஜிஸ்ட்ரேசன் அலுவலகத்திற்கு நீங்கள் போகவும் முடியாது; நீங்கள் போய் அதற்குச் சாட்சிக் கையெழுத்து போடுவது மரபு கிடையாது’  என்று தங்களின் ஆலோசனையைக் கூறியுள்ளனர்.

அதிகாரிகள் அவ்வாறு சொன்னவுடனேயே, அவர் தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதினார். ‘நான் இங்குள்ள அதிகாரிகளிடம் சட்டப்படி கலந்தாலோசித்தேன்…’ என்று தொடங்கி, நடந்தவை அனைத்தையும் அந்தக் கடிதத்தில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். அவர் அனுப்பிய அந்தக் கடிதம், அதன் உறை (Cover) உள்பட அனைத்தும் இன்று வரை மிக பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின் மேல் பகுதியில் அவர் தன் கைப்படவே சில விவரங்களை எழுதியுள்ளார். அவருக்கு நாமகிரி என்றொரு மகள் இருந்தார். கணவனை இழந்தவர். அவர், தன் தந்தைக்கு ஒரு செயலாளரைப் போலச் செயல்பட்டு வந்தார். இராஜகோபாலாச்சாரியார் (கவர்னர் ஜெனரல்) சொல்லச் சொல்ல, மணிமணியான தமிழ் எழுத்துகளில் நாமகிரி அம்மாள் எழுதிய பல கடிதங்கள் வந்துள்ளன; ஆனால், இக்கடிதத்தில் அவர் தன் சொந்தக் கையெழுத்திலேயே எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மிகத் தெளிவாக என்ன எழுதியிருக்கிறார் என்றால், ‘நான் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தேன். அப்படி நான் சாட்சிக் கையெ ழுத்திடுவது நம் மரபிலும், சம்பிரதாயத்திலும் கிடை யாது. எனவே, அதற்கு வாய்ப்புகள் இல்லை’ என்று எழுதி விட்டு, அதற்கு அடுத்த விஷயத்தைத் தொடர்கி றார்.

‘‘எனக்கு உசிதமாகப் படவில்லை’’ என்றார் இராஜகோபாலாச்சாரியார்!

‘‘ஒன்றை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆப்த நண்பர் நாயக்கர் அவர்களுக்குச் சொல்கிறேன்; ஒரு இளம்பெண்ணை நீங்கள் இந்தக் காலத்தில், இப்படி ஒரு திருமண ஏற்பாடு  செய்து, உங்களுக்குப் பிறகு அந்தச் சொத்தை நிர்வாக முறையில், இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும்  என்று நினைக்கிறீர்கள். அப்படி அவர் இருப்பாரா? என்பது அது உறுதியாகச் சொல்ல முடியாது. அது கேள்வியாக இருக்கும்.  ஆகவே, அது உசிதமாகப் படவில்லை’’ என்று எழுதியிருந்தார்.

‘‘பெரியார் – மணியம்மையார் திருமண ஏற்பாட்டிற்கு, இராஜகோபாலாச்சாரியார் கொடுத்தது எதிர்மறை பதில்தான் – நெகட்டிவ் ஆன்சர்தான். ‘‘திருமணம் செய்ய வேண்டாம்.  அது விரும்பத்தக்கது அல்ல. காரணம், அந்த அம்மா நீங்கள் நினைக்கிற அளவுக்குப் பின்னால் இருப்பார்கள்’’ என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. உங்கள் காலத்தில் அது சரியாக இருக்கும். பின்னாளில் சரியாக இருக்குமா? அப்படி இருப்பார்களா?’’ என்று  அவர் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.

‘‘அந்தரங்கம்’’ –  கான்பிடென்சியல்!

இவ்வளவு பெரியவர்  இப்படி எழுதியிருக்கிறாரே? என்று யாராக இருந்தாலும் குழப்பம் வரும். ஆனால், தந்தை பெரியாருடைய சிந்தனையின் கூர்மையைப் பாருங்கள். ‘‘சரி, அவருக்குத் தோன்றியதை அவர் எழுதி யிருக்கிறார்.  என் முடிவை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை’’ என்று சொல்லிவிட்டு, அந்தக் கடிதத்தின் மூலையில்,  அவர் கைப்படவே எழுதியிருக்கிறார். ‘‘அந்தரங்கம்’’ –  கான்பிடென்சியல் என்று.

‘‘அந்தரங்கம்’’, ‘‘கான்பிடென்சியல்’’ என்ற இரண்டு வார்த்தைகளைப் பாருங்கள்,  அய்யா அவர்கள், கழகத்திற்கு வரும்  கவரைப் பிரிக்கும்போதுகூட அவசரப்பட்டு, ‘டப்பு’ன்னு எப்படி வேண்டுமானாலும் பிரிக்க மாட்டார்.  ரொம்ப பக்குவமாக, கொஞ்சம் தண்ணீர் தொட்டோ, எச்சில் தொட்டோ அதை இப்படி முறுக்கி,  அப்படியே பொறுமையாகக் கவரை பிரித்து எடுத்து, மறுபடியும் அந்தக் கவரை அப்படியே ஏற்கெனவே இருந்த மாதிரியே உள்ளே வைத்திடுவார்.

அன்னை மணியம்மையாரைத் தவிர, வேறு யாரும் இருக்க முடியாது!

எல்லோரும், பல குற்றச்சாட்டுகளை அய்யா மேல் சுமத்தினர். ஆச்சாரியார்தான், பெரியாருக்கு அந்தத் ‘‘திருமணம் செய்து கொள்ளுங்கள்’’ என்ற யோசனையைச் சொல்லி, கட்சியை இரண்டாக்குவதற்காக அப்படிச் சொன்னார் என்று சொல்லி கடுமையான எதிர்ப்பு; கொஞ்சம் நஞ்சம் எதிர்ப்பு இல்லை. தாக்குதல் என்றால், வசைமாரித் தாக்குதல்.  எந்தப் பெண்ணும், உலகத்தில் இவ்வளவு தாக்குதல், இவ்வளவு அசிங்கமான வசைமாரிகளைப் பெற்றவர், அன்னை மணியம்மையாரைத் தவிர, வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால், அந்த அம்மையார் கொஞ்சம் கூட அதைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை.

அய்யாவிற்கு வருகின்ற கடிதங்களைத் தொகுத்து வைத்திருப்பார். அதில், பாராட்டுக் கடிதங்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும். வசவு கடிதங்கள்தான் அதிகமாக இருக்கும்; அவற்றை எல்லாம் பத்திரமாக வைத்திருப்பார். ஆனால், அதைப்பற்றி அவர் கவலைப்பட்டது கிடையாது.

பெரியாருடைய சிந்தனைக் கூர்மையும், அறிவு நாணயத்திற்கும் இதைவிட நல்ல எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.

‘‘ஆச்சாரியார் ராஜாஜி சொல்லித்தான் செய்தேன், செய்தேன் என்று சொல்றீங்களே, ராஜாஜி என்னய்யா சொன்னார், உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார். ராஜாஜி  1972 இல் இறக்கிறார்; பெரியார் அவர்கள் 1973 இல் இறக்கிறார்.

அந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி தனியே வைத்துவிட்டார்!

இது நடந்தது எப்பொழுது? 1949 ஆம் ஆண்டு.  இத்தனை ஆண்டுகளில் பெரிய எதிர்ப்புகள், எங்கே பார்த்தாலும்  சரமாரியான எதிர்ப்புகள். அந்த நேரத்தில்கூட கொஞ்சம் கூட அவர் உணர்ச்சி வசப்படாமல், ‘அந்தரங்கம்’  ‘கான்பிடன்சியல்’ என்று  எழுதியது – ‘‘இது நம்முடைய நட்பு முறையில் வந்தி ருக்கிறது. அவரை ஒருபோதும் காட்டிக் கொடுக்கக் கூடாது. அது முறை இல்லை. அது பண்பு அல்ல’’ என்று  உணர்த்தக் கூடிய அளவிற்கு, அப்படியே அந்தக் கடிதத்தைப் பத்திரப்படுத்தி தனியே வைத்துவிட்டார்.

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ எழுதும்போது அந்தக் கடிதத்தை வெளியிட்டோம்!

கடைசியாக அன்னை மணியம்மையாராவது சொன்னார்களா, என்றால், அவர்களும் அந்த அய்ந்தாண்டுகளில்  சொல்லவில்லை. கடைசியாக அதுபோன்ற கடிதங்களை, என்னிடம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு, அந்தக் கடிதங்களையெல்லாம் திறந்து பார்த்து, ‘அந்தரங்கம்’ என்று எழுதியிருக்கின்ற கடிதத்தைப் படித்தபொழுதுதான் விவரம் தெரிந்தது. ஒரு காலகட்டத்தில் எப்படியும்  இதனை வெளி யாக்கவேண்டும். அந்தக் கடிதங்கள் எழுதப்பட்டு, எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு நான்தான் முதன் முதலில், ம.நடராஜன் நடத்திய ‘புதிய பார்வை’ பத்திரிகையில்  ‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ எழுதும்போது அந்தக் கடிதத்தை வெளியிட்டோம். பிறகுதான்,  ‘தினமணி’ உள்பட மற்ற பத்திரிகையில் எல்லாம் எடுத்துப் போட்டாங்க.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இவ்வளவுத் தாக்குப் பிடிக்கிற சூழ்நிலை அப்போது இல்லை; தனக்கு எதிர்ப்பு வந்த உடனே, அந்த எதிர்ப்பில் இருந்து, தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக, ‘‘ராஜாஜி அப்படிச் சொல்லவில்லை; இதோ  கடிதம் இருக்கிறது பாருங்கள்’’ என்று, நீங்களும், நானும் இதுபோன்ற நேரங்களில் உடனே அவசரப்பட்டுச் சொல்லுவோம், நம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக. ஆனால், தந்தை பெரியார்  அவர்கள் அப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வில்லை. என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என்றார்.

என்னைவிட அதிகமாக பொதுமக்கள் மத்தியில பழகுகிறவன் யாரும் கிடையாது: தந்தை பெரியார்!

அதில் எழுதுகிறார்,  ‘‘பொதுமக்கள் யோக்கி யதை என்ன என்று எனக்குத் தெரியும். என்னை விட அதிகமாக பொதுமக்கள் மத்தியில பழகு கிறவன் யாரும் கிடையாது’’ என்றார். அந்த அறிக்கைகளையெல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தீர்கள் என்றால்,  அவருடைய சிந்தனையின் கூர்மை எப்படிப்பட்டது என்பது மிகத் தெளிவாக தெரியும்.

‘‘உங்களுக்கு ஆசீர்வாதம்’’ என்று இராஜாஜியிடமிருந்து கடிதம்!

இராஜகோபாலாச்சாரியாருக்கே ஒரு சங்கடமான மனநிலை. அடுத்தது, இன்னொரு கடிதம் எழுதுகிறார். அதில்  என்ன எழுதியிருக்கிறார் என்றால், ‘‘சிறீமான் நாயக்கர் அவர்களுக்கு, நண்பர் நாயக்கர் அவர்களுக்கு, நான் சில நாள்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு கடிதம்  எழுதி இருந்தேன். ஆனால், இப்போது நான் கேள்விப்பட்டேன், அந்தத் திருமண ஏற்பாடு எல்லாம் முடிந்தது சுபமாக என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆசீர்வாதம்’’ என்று. அந்தக் கடிதமும் வருகிறது. அதற்குப் பிறகு அவருக்கே ‘‘என்னடா, நாம் சொன்னதை மீறித்தான் செய்திருக்கிறார்’’ என்ற எண்ணம் இருந்தாலும், வாழ்த்துச் சொல்கிறார்.

ஆகஸ்ட் 15 அய், ‘‘ஆட்சி மாற்ற நாள்’’  என்று எழுதினார் தந்தை பெரியார்!

அதே மாதிரி இன்னும் இரண்டு செய்தி. ‘‘ஆகஸ்ட் 15  –  அண்ணா அவர்கள் அது மகிழ்ச்சிகரமான நாள்; ஒரு எதிரி ஒழிந்தான்’’ என்று எழுதினார். பெரியார், அவருடைய சிந்தனையில் என்ன  எழுதினார், இன்றைக்கும் அதை எடுத்துப் பாருங்கள். எது சரியாக இருக்கும்? என்று.  ‘‘ஆட்சி மாற்ற நாள்’’ என்று எழுதினார். Madeover என்ற வார்த்தையைச் சொன்னார். ‘‘வடநாட்டுக்காரன், பார்ப்பனக் கொள்ளைக்காரன் கிட்ட கொடுக்கிறான். அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் இல்லை.  இது ஓர்  ஆட்சி Madeover. என்னிடம் இருப்பதை மாற்றி, உங்களிடம் கொடுக்கிறான். எஜமானனை மாற்றினானே தவிர, மற்றபடி வேறு ஒன்றும் கிடையாது’’ இன்றைக்கு வரையில் அது உண்மைதான். அப்படியென்றால், பெரியாருடைய சிந்தனை, தொலைநோக்கு, கூர்மை என்பது எப்படிப்பட்டது?  என்பதை மிகத் தெளி வாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். மக்களைப் பற்றி கவலைப்படாமல், மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், தன்னுடைய கருத்து என்ன என்பதைப்பற்றி ஆழமாகச் சிந்தித்து, சுதந்திரமாக வெளியிட்டு, ஒரு வரலாற்றைப் படைக்கக்கூடிய அளவில் இருக்கக்கூடியவர் தான் அவர்.

என் பின்னாலே மக்கள் வரவேண்டும்!

அதனால், இந்த மாதிரி வாய்ப்புகளைத் தெரியப்படுத்த வேண்டும். ஒரு தலைவன் என்பவன், அதுவும் குறிப்பாக ஒரு புரட்சியை, சமூகப் புரட்சியை உருவாக்க வேண்டியவர்கள் தெளிவாகச் சொல்வார்கள். ‘‘நான் மக்களோடு போய்க் கொண்டிருக்கிறவன் அல்ல; மக்கள் பின்னாலே போகக்கூடியவன் அல்ல; என் பின்னாலே மக்கள் வரவேண்டும்’’ என்றார்.

ஒருமுறை காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தக் கருத்தைச் சொல்கிறார்.  அந்தக் கூட்டத்தில் பலதரப்பட்டவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

‘‘என்னுடைய அமைப்பு, என்னுடைய நோக்கம், உங்களை எல்லாம் திருத்துவதற்காகத்தான் தான் வந்திருக்கேன். என் பின்னால் நீங்கள் வர வேண்டும் என்று நினைப்பேனே தவிர, உங்கள் பின்னால் நான் வந்தால், எனக்குக் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற அறிவும் போய்விடும்’’ என்று சொல்கிறார்.

ஆகவே, தந்தை பெரியார் அவர்களுடைய அணுகுமுறை என்பது எதார்த்தமான அணுகுமுறையாகும். அந்த உண்மையை நிர்வாணத் தன்மையோடு சொல்லும்போது சொல்லுவார்.  இப்படி ஒவ்வொரு துறையிலேயும் வரும்போது, இதே மாதிரி, ஒவ்வொரு வாய்ப்புகளை எடுத்துச் சொல்லும்போது,  இரண்டாவது இந்தப் பிரச்சினையையும் சொன்னோம்.

மொழி ஒரு போர்க் கருவியாக
இருக்க வேண்டும்!

தமிழ் மொழி பற்றிச்  சொல்லும்போது கூட, ‘‘தமிழ் மொழி மேல் இருக்கிற காதலினால் சொல்லவில்லை.  இதைவிட மோசமான மொழி இன்னொன்று வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அதை நீங்கள் சீர்திருத்தவேண்டும். அதுதான் மிக முக்கியம். மொழி ஒரு போர்க் கருவியாக இருக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

மொழியைப் போர்க்கருவி என்று சொன்ன ஒரே தலைவர், ஒரே சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள்தான். மொழியைப்பற்றி என்னென்வோ சொல்லிருக்கிறார்கள். மொழியைப் போர்க் கருவி என்று சொன்னால்,  அதை விவரித்தால் எப்படி வரும்? போர்க் கருவி என்று இன்றைக்கு நாம் வில்லும், வேலும் கோயிலில் இருக்க வேண்டிய விஷயமே தவிர, அவை போர்க்களத்தில் கிடையாது. இன்றைக்குப் போர்க் கருவி என்றால், மிசைல்ஸ் வந்துவிட்டது; ஏவுகணைகள் வந்தாகி விட்டது. இன்றைக்கு அவற்றையெல்லாம் வெளிநாடுகளிலிருந்து  வாங்குகிறோம்.

இந்தக் காலத்தில், புராணத்தில் இருக்கிறது; அதனால், வில்லையும், அம்பையும் வைத்தே எதிரிகள் கதையை முடித்துவிடலாம் என்று இருக்க முடியுமா? ஏழு மராமரங்களையும் தொலைத்த அம்பு எங்கே போயிற்று என்று தெரியவில்லையே!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *