உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்குக் கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் விரைவில் ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற உலக நாடுகளின் நம்பிக்கையே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் நிலவரம் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 23.5.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பில், இருதரப்பும் போர் நிறுத்த உடன்பாட்டை நெருங்கிவிட்டதாகத் தெரிவித்தார். இந்த சாதகமான அறிவிப்பைத் தொடர்ந்து, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 5 விழுக்காடு குறைந்து, ஒரு பீப்பாய்க்குச் சுமார் 98 டாலர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. பன்னாட்டு நிதித் துறை மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஹோர்மூஸ் நீரிணை எப்போது முழுமையாகத் திறக்கப்படும் என்பது மிக முக்கியமானது என்று ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “நீரிணை திறக்கப்பட்ட பிறகு, அங்குள்ள எரிசக்தி உற்பத்தி ஆலைகள் மீண்டும் தங்களின் முழுமையான உற்பத்தித் திறனுக்குத் திரும்புவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசமே, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை சீராக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலை நாடுகள் மற்றும் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்குக் குறைந்திருந்தாலும், அதன் பலன் இந்திய நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை பன்னாட்டளவில் நிலவும் இந்த நெருக்கடி மற்றும் பதற்றமான சூழல்களையே காரணமாகக் காட்டி, இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு (தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.10 என உயர்ந்துள்ளது) வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
