புதுடில்லி, மே 24 நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, நீட் மற்றும் ஜேஇஇ ஆகிய இரு நுழைவுத் தேர்வுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே தேசிய பொது நுழைவுத் தேர்வாக கணினி வழியில் நடத்துவது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
தயாரிப்புக் குழுவிலிருந்தே கசிந்த வினாத்தாள்: சிபிஅய் விசாரணையில் அதிர்ச்சி
கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்பே ராஜஸ்தானில் கசிந்தது சிபிஅய் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவுப் புகாரைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஅய் நடத்திய வேட்டையில், மகாராட்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்ணி மற்றும் புனேயைச் சேர்ந்த உயிரியல் பெண் விரிவுரையாளர் மனீஷா மந்தாரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மனீஷா மந்தாரே, தனக்கு இருந்த சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி, தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாத்தாள்களை அணுகியுள்ளார். இவர்கள் இருவரும் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு வினாத்தாளை கசியவிட்டது அம்பலமாகியுள்ளது.
வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் உள்ளவர்களே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், தேர்வு மய்யங்களில் மாணவர்களின் ஆடைகள் மற்றும் உடமைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கெடுபிடி காட்டிய தேசிய தேர்வு முகமையின் செயலுக்குப் பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் கண்டனமும் எழுந்துள்ளது.
தொடர் முறைகேடு புகார்களை அடுத்து, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி வழியில் (Computer Based Test) நடத்தப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு அளித்த பரிந்துரையின்படி, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த ஒரே தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்துவது சாத்தியமா என்பது குறித்து நாடாளுமன்றக் குழுவிடம் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக் கான மாணவர்கள் ஜேஇஇ மற்றும் நீட் ஆகிய இரு தேர்வுகளையும் எழுதி வருகின்றனர். இந்த இரு தேர்வுகளும் ஒருங்கிணைக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிப்பது, கட்டணம் செலுத்துவது மற்றும் வெவ்வேறு தேர்வுகளை எழுதுவது போன்ற அலைச்சல்களும் சிரமங்களும் குறையும். இதனால் எதிர்காலத்தில் மாணவர்களுக்குப் பெரும் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
