சென்னை, மே 24- தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகச் சுருங்காமல், ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவையில் அரங்கேறிய கொடூரம்
அண்மையில் கோவை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதநேயமற்ற, மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
முதலமைச்சருக்கு கோரிக்கை
இதுபோன்ற தொடர் குற்றங்களால் பெண்களின் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். “பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு, குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தர அரசு சிறப்புப் பிரிவுகளை முடுக்கிவிட வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடூரங்கள் நிகழாத வண்ணம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தவும், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே
மீண்டும் போர் மூளும் சூழல்!
சமரசப் பேச்சு நடத்த பாகிஸ்தான்
ராணுவ தளபதி ஈரான் பயணம்!
ராணுவ தளபதி ஈரான் பயணம்!
இஸ்லாமாபாத், மே 24- அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் 22.5.2026 அன்று திடீரென ஈரான் புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் வைத்துதான் நடைபெற்றது. இதன் காரணமாகவே இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தற்காலிகமாக எட்டப்பட்டிருந்த போர் நிறுத்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிராந்திய அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் இந்த அவசரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது ஈரான் பயணத்தின் போது, போர் நிறுத்தத்தைத் தொடர்வது குறித்து அங்குள்ள முக்கிய ஈரானிய அரசுப் பிரமுகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் சந்திப்பு, அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றத்தைக் குறைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
