பெண்ணின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 2 பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்!

2 Min Read

தேவகோட்டை, மே 23- பெண் பயணி ஒருவர் அளித்த பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவரை அலைக்கழித்த விவகாரத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 5 காவலர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே 19-ஆம் தேதி சம்பந்தர் தெருவிலிருந்து வெள்ளையன் ஊரணி தென்கரை பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவை காரைக்குடியைச் சேர்ந்த மாதவன் (50) என்பவர் ஓட்டியுள்ளார். அவர் ஆட்டோவை வழக்கமான பாதையில் செலுத்தாமல், திட்டமிட்டு ஒரு குறுகிய சந்து வழியாக இயக்கியுள்ளார். அப்போது, ஆட்டோவில் தனியாக இருந்த அந்த பெண் பயணிக்கு மாதவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அன்றைய நாளே பாதுகாப்பு தேடி தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் துரைராஜ், புகாரைப் பெறாமல் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறி அவரை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் கீதாலெட்சுமியும் மனுவை வாங்க மறுத்துள்ளார். “இந்தச் சம்பவம் குறித்து நகர் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும்” என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், காவல் துறையினரின் இந்த அலட்சியப் போக்கு குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரிக்கு இணைய வழி மூலம் நேரடியாகப் புகார் அனுப்பினார்.

பணியிடை நீக்கம்

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை தலைவர், உடனடியாக இதுகுறித்து விசாரிக்கத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை காவலர் நடத்திய தீவிர விசாரணையை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் மாதவனை நேற்று முன்தினம் (21.5.2026) கைது செய்தனர்.

கீதாலட்சுமி –- –காவல்துறை ஆய்வாளர் (மகளிர் காவல் நிலையம்), துரைராஜ் -– காவல்துறை ஆய்வாளர் (நகர் காவல் நிலையம்), ராஜேஸ்வரி –- உதவி-காவல்துறை ஆய்வாளர் (எஸ்.அய்),  ஜெயா  -–உதவி-காவல்துறை ஆய்வாளர் (எஸ்.அய்), சந்தானம் – தனிப்பிரிவு காவலர் பாதிக்கப்பட்ட பெண் என்று தெரிந்தும், சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவரை அலைக்கழித்த குற்றத்திற்காக இந்த 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல காவல்துறைத் தலைவர் (அய்.ஜி) விஜயேந்திர பிதாரி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த நிகழ்வு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *