இராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியாகும். மூன்று புறமும் கடலால் சூழப்பட்டு, நடுவில் ஒரு சாலை போகும். அதுவும் சிறிது தூரத்தில் முடிந்துவிடும். வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் (மன்னார் வளைகுடா) இணையும் அந்த இடத்திற்குப் பெயர் ‘அரிச்சல் முனை’. இராமேசுவரத்திற்கு இப்படி ஏராளமான சிறப்புகள் இருந்தாலும், புராணக் கதைகளையே முதன்மைப்படுத்திப் பரப்புவர். அப்படியான இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அந்த இராமநாதபுரத்தில் வசிக்கும் பெரியார் பெருந் தொண்டர் பா.ஜெயராமன் அவர்களை ‘விடுதலை’ ஞாயிறு மலருக்காக, அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
அய்யா வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் பா.ஜெயராமன். 1945இல் பிறந்தேன். வயது 81 ஆகிறது. பெற்றோர் பெயர் பாஸ்கரன் – நாச்சியார். மானாமதுரை அருகே அரிமண்டபம் எனும் கிராமத்தில் பிறந்தேன். எங்கள் தாத்தா இயல்பாகவே பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசுபவர். “குறி” சொல்பவர்களிடம், “இந்த மிளகாயில் எத்தனை விதைகள் உள்ளன?” எனக் கேலியாகவும், சிந்திக்கும்படியும் கேட்பார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எங்கள் குடும்பத்தில் அப்போதே கண்டோம். எங்கள் அம்மா அந்தக் காலத்திலேயே 5ஆம் வகுப்பு வரை படித்தவர்.

அதனால் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஒன்று முதல் அய்ந்து வரை நான் ஏட்டுப் படிப்புப் படித்தேன். பிறகு மானாமதுரை சென்று படித்தேன். பள்ளிக் கூடத்திற்குப் போக, வர 20 கிலோமீட்டர் தூரம் ஆகும். செருப்புகூட இன்றி நடந்தே செல்வேன். இது 1954 காலகட்டம். அதுவரை எங்கள் கிராமத்தில் யாரும் வெளியூர் சென்று படித்ததில்லை. என்னைத் தான் எங்கள் அம்மா முதன்முதலில் படிக்க அனுப்பினார்.
தொடர்ந்து என்ன படித்தீர்கள்?
பள்ளிப் படிப்பு முடித்ததும், சிவகங்கையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். இது 1964-1966 காலகட்டம். தொடர்ந்து பியூசி படித்தேன். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முடித்தேன். பின்னர் காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்கள் ஏற்பாட்டில் விடுப்பு எடுத்துக்கொண்டு பி.எட். சேர்ந்தேன். இறுதியாக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், அஞ்சல் வழியில் எம்.ஏ. முடித்தேன்.
எங்கே பணி செய்தீர்கள்?
ஆசிரியர் பயிற்சி முடித்ததும் சிவகங்கையில் இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் இராமலட்சுமி உயர்நிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் பள்ளி நமது கழகத்தில் மாவட்டத் தலைவராக இருந்த இரா.சண்முக நாதன் அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமானது. அப்பள்ளியில் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடமாட்டார்கள். அனைத்து மத மற்றும் ஜாதியினரும் ஆசிரியராகவும், பிற ஊழியர்களாகவும் பணியாற்றுவார்கள். நான் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அங்கு பாடம் எடுத்தேன்.
மற்றொரு விசயத்தையும் குறிப்பிட்ட வேண்டும். ஆசிரியர் பயிற்சி முடித்ததும், நான் வேலைக்குச் சென்றுவிட்டேன். பிறகுதான் கூடுதலாகக் கற்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் பணியில் இருந்தவாறே பியூசி, பி.ஏ., பி.எட், எம்.ஏ., போன்ற படிப்புகளை முடித்தேன். 1966 தொடங்கி 2003ஆம் ஆண்டில் எனது பணியை நிறைவு செய்தேன். இந்த 37 ஆண்டுகளில் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் நல்ல வண்ணம் கற்பித்துள்ளேன்.
இயக்கத் தொடர்பு உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவராக இருந்த காலம் – இயல்பாகவே பகுத்தறிவுச் சிந்தனையும் இருந்த நேரமது! அப்போது சிவகங்கையில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அங்கு சென்ற நான், அய்யா என்.ஆர்.சாமி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். உடனே மகிழ்ந்த அவர், என்னை மேடையில் அமரச் சொல்லிவிட்டார். சுற்றியிருந்த அனைவரும் இதைப் பார்த்தனர். சக மாணவர்களோ அன்று முதல் என்னைத் தி.க., தி.க. எனக் கூறத் தொடங்கினர். இந்நிலையில் எனது அம்மா ஊரான நாச்சியார்கோயில் (கும்பகோணம்) சென்று திரும்பும் போது, என்.ஆர்.சாமி அவர்களின் இல்லத்திற்கும் செல்லத் தொடங்கினேன். அப்போதெல்லாம் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் கிடைப்பது அரிது என்பதால் சண்முகநாதன் அய்யா ஏற்பாட்டில் படிப்பு முடிந்ததும் உடனடியாக வேலை கிடைத்துவிட்டது. சாமி சமதர்மம்தான் வீட்டிற்கே வந்து அழைத்துச் சென்று பணியில் சேர்த்தார். அதன் மூலமே எனது கொள்கைகள் வளர்ந்து, இயக்கப் பணிகள் அதிகரித்து, அந்த வீட்டிலேயே பெண் எடுத்துத் திருமணம் செய்யும் நிலைக்கு வந்தேன்.
வியப்பாக இருக்கிறதே, தங்கள் திருமணம் குறித்துக் கொஞ்சம் கூறுங்கள்?
நான் ஆசிரியராக இருந்ததோடு, பகுத்தறிவுச் சிந்தனையுடனும் இருந்தேன். எனவே எங்கள் குடும்பமும், என்.ஆர்.சாமி அய்யா குடும்பமும் இணைந்து எனக்கும், அவர்கள் வீட்டுப் பெண்ணான தமிழரசி அவர்களுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். அதனடிப்படையில் 1966ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் நிச்சயம் செய்து, மார்கழி மாதத்தில் இணையேற்பு விழா நடந்தது. அதிலும் புரட்சிகரமான திருமணம் அது. 1966 ஆம் ஆண்டுகளில் பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது. குறைந்தபட்சம் அக்னி (நெருப்பு) வளர்த்து பெண்ணும், மாப்பிள்ளையும் அதனைச் சுற்றி வர வேண்டும்.
ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இரா.சண்முகநாதன் இதற்கு ஒரு வழியைக் கூறினார். அந்தச் சமயத்தில் காரைக்குடி, காந்தி திடலில் திராவிடர் கழக மாநாடு, சமதர்ம மாநாடு என இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டு மேடையில் சிறியதாக நெருப்பை வளர்த்து என்னையும், தமிழரசி அவர்களையும் சுற்றி வரச் சொன்னார்கள். அப்போது ஒரு தாளில் இராமாயணம் ஒழிக, மகாபாரதம் ஒழிக என எழுதி அதைத் தீயில் போட சொன்னார்கள். அதேபோல பல்வேறு புராணங்கள் பெயரையும் எழுதி தீயிலிட்டவாறே, அந்தத் திருமணம் மாநாட்டில் பரபரப்புடன் நடைபெற்றது. அதற்கடுத்த ஆண்டு, 1967 இல் அறிஞர் அண்ணா வரலாற்றுச் சிறப்புமிக்க சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்.
உங்கள் வாழ்க்கையே கொள்கையுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறதே?
ஆமாம்! மாணவர் பருவத்தில் ஏற்பட்ட முற்போக்குச் சிந்தனை என்.ஆர்.சாமி குடும்பத்தால் வளர்த்தெடுக்கப் பட்டது. அதேபோல நான் பணிபுரிந்த பள்ளி சிவகங்கை இரா.சண்முகநாதன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஆதலால் எனது பணி அறிவியல் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் மனநிறைவாக இருந்தது. எனது சுற்றமே இயக்கத்தாலும், கொள்கையாலும் சூழப்பட்டதாக இருந்தது. பணியில் இருக்கும்போதும் இயக்கப் பணிகளில் தொடர்ந்து குடும்பத்துடன் ஈடுபட்டு வந்திருக்கிறேன். அவ்வகையில், நான் சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளராக 10 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர் இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயலாற்றினேன்.
இராமநாதபுரம் அரண்மனை முன்பாக 2008ஆம் ஆண்டு “இராமர் பாலம் மோசடி மாநாடு” நடத்தினோம். அஞ்சல் அலுவலகத்தின் முன் போராட்டம் உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டிருக்கிறேன். ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அதேபோல ‘பெரியார் வினா-விடை’ மற்றும் ‘வாகைசூட வாரீர்’, மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளையும் தலைமைக் கழக அறிவுறுத்தலுக்கு இணங்க நடத்தியுள்ளேன். தமிழ்நாட்டில் நடைபெறும் பல மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். பலத்த எதிர்ப்பிற்கு இடையே திருச்சி வெல்லமண்டி பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் முதல் வரிசையில் நானும், சாமி.திராவிடமணியும் முழக்கமிட்டுச் சென்றது இப்போதும் நினைவில் நிற்கிறது. 1975ஆம் ஆண்டு காரைக்குடியில் திறக்கப்பட்ட பெரியார் சிலைத் திறப்புப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இன்றும் நானும், என் இணையரும் அன்றாடம் ‘விடுதலை’யைப் படித்து விவாதிப்பது வழக்கம். பேரப் பிள்ளைகளை அழைத்து வைத்துக்கொண்டு வரலாற்றுச் செய்திகளைச் சொல்லுவோம்.
உங்கள் பிள்ளைகள் குறித்துக் கூறுங்கள்?
எங்களுக்கு 3 பிள்ளைகள். முதல் மகள் பெயர் வீனஸ் ராணி. இரண்டாவது மகள் பெயர் இங்கர்சால். அடுத்து பிறந்த மகன் பெயர் பெரியார் லெனின். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவராகவும், பேராசிரியராகவும் இருக்கிறார். மூவருமே அரசுப் பணியில் இருக்கிறார்கள். இங்கர்சால் அவர்களின் இணையர் தான் காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு. எங்கள் குடும்பத்தின் பேரன், பேத்திகள் வரை அனைவருக்குமே வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர்கள்தான் வைத்துள்ளோம். அந்தக் காலம் தொட்டே கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழியில்தான் எங்கள் தலைமுறைகள் பயணித்து வருகின்றன” எனப் பா.ஜெயராமன் தெரிவித்தார்.
