சென்னை,மே 15 நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மறு தேர்வு நடத்தும் முடிவைக் கைவிடக் கோரியும், பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த அனுமதிக்க வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிக முக்கியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் நீட் தேர்வில் உள்ள தொடர் முறைகேடுகள் மற்றும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.
தொடர்கதையாகும் நீட் முறைகேடுகள்
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன என்பதை மு.க.ஸ்டாலின் தன் கடிதத்தில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்:
2015 (AIPMT): நீட் தேர்வுக்கு முன் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிந்ததால் உச்சநீதிமன்றம் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தியது.
2016 & 2017: நீட் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. 2017-இல் ஆள்மாறாட்டப் புகார்கள், கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு மற்றும் தவறான மொழிபெயர்ப்புகளால் மாணவர்களின் சமவாய்ப்பு கேள்விக்குறியானது.
2020 & 2021: மாணவர்களுக்குப் பதிலாகப் போலித் தேர்வர்களைக் கொண்டு தேர்வு எழுத வைத்த பெரும் பின்னணிப் படை அம்பலமானது. 2021 முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் 6 மாத தாமதம் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது.
2022 & 2024: திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடுகளால் சிபிஅய் பலரைக் கைது செய்தது. குறிப்பாக 2024-ஆம் ஆண்டு தேர்வு மிக மோசமான சர்ச்சைகளைச் சந்தித்தது. ஒரே மய்யத்தில் பல டாப்பர்கள் உருவானது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் வழங்கியது மற்றும் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வினாத்தாள்கள் விற்கப்பட்ட புகார்கள் எழுந்தன.
தற்போதைய நிலை (2026): வினாத்தாள் கசிவு காரணமாக 2026 நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு செய்ததாக பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் பிடிபட்டு, சிபிஅய் விசாரணை நடந்து வருகிறது. இதனால் 22.8 லட்சம் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற தவிப்பில் உள்ளனர்.
“குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடிகளால் நேரடியாகப் பயனடைந்துள்ளனர். பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடிகள் நடந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கருநாடகா மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டதும், போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.”
ரூ.70,000 கோடி வணிகம்
ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது! தகுதி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, தற்போது பணம் கொழிக்கும் ஒரு வணிகமாக, பயிற்சி மய்யங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுக்கான தேர்வாக மட்டுமே மாறியுள்ளது என்று மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார்.
நீட் தேர்வு சார்ந்த பயிற்சி மய்யத் தொழில் தற்போது 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு வளர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல லட்சம் செலவழித்துச் சிறப்புப் பயிற்சி பெறாமல் இதில் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகி உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். இது மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் கிராமப்புற, அரசுப்பள்ளி மற்றும் முதல் தலைமுறையாகப் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் பெரும் தடைக்கல்லாக அமைந்துள்ளது.
இதற்கு மாறாக, தமிழ்நாட்டில் முன்பு நடைமுறையில் இருந்த ப்ளஸ் டூ (+2) மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்பை உறுதி செய்ததோடு, இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைக்க உதவியது என்றும், நீட் தேர்வு மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கி உயிரைப் பறிக்கும் காரணியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரிக்கை
தமிழ்நாடு அரசு நீட் விலக்கிற்காக 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் இருமுறை சட்டப்பேரவையில் ஒருமனதாகச் சட்டம் இயற்றியும், அதற்கு 2025 ஏப்ரலில் குடியரசுத் தலைவர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
தற்போது நிலவும் அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் இரு முக்கிய உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:
நீட் மறுதேர்வைக் கைவிடுக
ஏற்ெகனவே கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் 22.8 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்துவது மற்றுமொரு சுமையாகவே அமையும் என்பதால் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும்.
தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாததால், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்புப் பிரிவு 123-இன்படி ஓர் அவசரச் சட்டத்தை (Ordinance) ஒன்றிய அரசு உடனே பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் 2026-2027 கல்வியாண்டுக்கான மருத்துவ சேர்க்கையை, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான கிராமப்புற, பிற்படுத் தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதமர் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாகச் செயலாற்ற வேண்டும் எனத் தன் கடிதத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
