‘போதி விருட்சம்’ விருது என்னை இன்னும் பணி செய்ய ஊக்குவிக்கிறது!
மனிதத்தன்மையை இழக்கச் செய்த ஜாதி அமைப்பிலிருந்து,
மீண்டும் மனிதர்களாக நம்மை மீட்டெடுப்பதே நமது இலக்கு!
அந்தப் புரட்சிப் பாதையில் நாம் தொடர்ந்து நடப்போம்!
பெங்களூரு, ஏப்.16 ‘போதி விருட்சம்’ விருது என்னை இன்னும் பணி செய்ய ஊக்குவிக்கிறது. மனிதத்தன்மையை இழக்கச் செய்த ஜாதி அமைப்பி லிருந்து, மீண்டும் மனிதர்களாக நம்மை மீட்டெடுப்பதே நமது இலக்கு. அந்தப் புரட்சிப் பாதையில் நாம் தொடர்ந்து நடப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெங்களூருவில் விருது வழங்கும் விழாவில் – தமிழர் தலைவர்
ஆசிரியரின் ஏற்புரை
நேற்று முன்தினம் (14.4.2026) கருநாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஸ்பூர்த்திதம்மா’ எனும் அமைப்பினர் நடத்திய ‘அம்பேத்கர் ஹப்பா 2026’ விருது வழங்கும் விழாவில், ‘ஸ்பூர்த்திதம்மா’ அமைப்பின் தலைவர் எஸ்.மாரிசுவாமி தலைமையில், நாடொஜா குமர. வீரபத்திரப்பா அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ‘போதி விருட்சம்’ விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும்
வழங்கினார்.
விருதினைப் பெற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஏற்புரை வருமாறு:

எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் சதா மனோத்சவ சமிதி அமைப்பினர், இந்த அற்புத மான விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது. ஏனெனில் பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு சாதாரண மனிதர் அல்லர்; அவர் ஓர் அறிவு மேதை. அதுமட்டுமல்ல, அவர் நமது சுதந்திரத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடிய மாபெரும் மனித குல விடுதலைப் போராளி. இந்த விழாவின் தலைவர், சமூகப் பணியாளர், பொது நலத்திற்காகப் பாடுபடுபவர், பத்திரிகையாளர். விழாவின் தலைமை விருந்தி னரான நடிகர் அசோக், நீதிபதி அவர்கள் மற்றும் என்னுடன் விருது பெறும் விருதாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனுதர்மம் இழைத்த இழிவுகளைத் துடைத்தெறிந்த சமூகப் புரட்சியாளர்கள்!
பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். அவர்களை ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால், அவர்கள் ‘‘விடுதலை வீரர்கள்’’ (Liberators). அவர்கள் மட்டும் இல்லையென்றால், இன்று நாம் தோளில் துண்டு போடும் உரிமையையோ, நம் சகோதரிகள் ரவிக்கை (Jacket) அணியும் உரிமையையோ பெற்றிருக்க மாட்டார்கள். மனு தர்மம் இழைத்த இழிவுகளைத் துடைத்தெறிய அரும்பாடுபட்ட சமூகப் புரட்சியாளர்கள் அவர்கள்!

புத்தர் இல்லையென்றால் ஆதி பகுத்தறிவு இயக்கம் இருந்திருக்காது. ஆனால், புத்தரின் மண்ணிலேயே பார்ப்பனியம் சூழ்ச்சி செய்து பவுத்தத்தை வெளியேற்றியது. இன்று நீங்கள் எனக்கு அளித்த இந்த கவுரவத்திற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை; ஆனால், என் இறுதி மூச்சு வரை இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க உங்கள் விருப்ப ஆணைப்படி நான் பாடுபடுவேன்.
உலகிலேயே ‘‘பிறப்பின் அடிப்படையில் தகுதி, திறமையை’’ தீர்மானிக்கப்படும் ஒரே நாடு நமது நாடுதான். அறிவு இருந்தாலும் இங்கே ஜாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள். பாபா சாகேப் நடத்திய மகத் போராட்டம் முதல் அவரது இதழ்கள் வரை அனைத்தும் ஒரே செய்தியையே சொல்கின்றன. ‘‘மக்களிடம் செல்…!’’ ‘‘கற்பி’’, ‘‘ஒன்று சேர்’’, ‘‘புரட்சி செய்’’ (Educate, Organize, Agitate).
ஜாதியை ஒழிக்காமல்,
தீண்டாமையை
ஒழிக்க முடியாது!
தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், தீண்டாமையின் வேர் ஜாதி அமைப்பில் உள்ளது. ஜாதியை ஒழிக்காமல், தீண்டாமையை ஒழிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவு தீண்டாமை எந்த வடிவில் இருந்தாலும், அது ஒழிக்கப்பட்டதாகச் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் அது இன்னும் தொடர்கிறதே! மனிதர்களை விட, வளர்ப்புப் பிராணிகளை நேசிக்கும் ஒரு சமூகம், தூக்கிக் கொஞ்சும் ஒரு சமூகம், சக மனிதனைத் தீண்டத்தகாதவனாக நடத்துவது கொடுமை.
சமூகப் போராளி
ஜோதிராவ் பூலே
மராட்டிய மண்ணில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூகப் போராளி ஜோதிராவ் பூலே அவர்க ளின் 200 ஆவது பிறந்த நாள் நடப்பு ஆண்டில் கொண்டாடப்படுகிறது. சாவித்திரி பாய் பூலே அவர்களின் சமுதாயப் பணி கிடைத்ததால்தான் பெரும்பாலான பெண்கள் கல்வி கற்க முடிந்தது. அந்தத் தலைவர்களின் பிறந்த நாளைத் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்வோம். நாம் அனைவரும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஜாதி ஒழிப்புப் பணிக்கு அந்தக் கொண்டாட்டங்கள் நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று உங்களையெல்லாம் அழைக்கிறோம்.
பாபா சாகேப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் பர்மா நாட்டு (இன்றைய மியான்மா) ரங்கூன் நகரில் நடைபெற்ற உலக புத்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அப்பொழுது அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி, புத்த மதத்தில் சேருவதுபற்றி பெரியாரிடம் எடுத்துச் சொன்னார். அதற்குப் பெரியார், ‘‘தனியாக புத்த மதத்தில் சேராதீர்கள்; நிறைய பேருடன் சென்று சேருங்கள்; அப்பொழுதுதான் மதம் மாறியதன் தாக்கம் எதிரொலிக்கும்’’ எனப் பரிந்துரைத்தார்.
அம்பேத்கரின்
22 உறுதிமொழிகள்!
1956 அக்டோபர் 14 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் நாகபுரியில் பவுத்தத்தைத் தழுவியபோது 22 உறுதிமொழிகளை ஏற்றார்.
அதில் முக்கியமானவை:
‘‘பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனை தெய்வங்களாகக் கருதமாட்டேன்; அவர்களை வணங்கமாட்டேன்.
ராமன் மற்றும் கிருஷ்ணனை தெய்வங்களாக ஏற்கமாட்டேன்.
புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன்.
மனிதகுலத்திற்குத் தீங்கான, ஏற்றத்தாழ்வை வலியுறுத்தும் இந்து மதத்தைத் துறந்து, சமத்துவத்தை போதிக்கும் பவுத்தத்தை ஏற்கிறேன்’’ என்ற உறுதி மொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன!
நாம் மொழி, மாநிலம் கடந்து மனிதர்களாக ஒன்றிணைய வேண்டும்!
பாபா சாகேப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். 1929 இல் தமிழ்நாட்டில் சுயமரியாதை மாநாடு நடந்த அதே நேரத்தில், மகாராட்டிராவின் நாசிக்கிலும் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அச்செய்தி அக்காலத்தின் ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டில் வெளியாகியுள்ளது. நாம் மொழி, மாநிலம் கடந்து மனிதர்களாக ஒன்றிணைய வேண்டும்.
இன்று பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தால் மட்டும் போதாது, அது ஒரு சடங்காக மாறிவிடக்கூடாது. அவர்கள் விட்டுச் சென்ற போராட்டத்தை நாம் கையில் எடுக்க வேண்டும்.
புரட்சிப் பாதையில்
நாம் தொடர்ந்து நடப்போம்!
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தாலும், உங்கள் அழைப்பினை ஏற்று நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த விருது என்னை இன்னும் பணி செய்ய ஊக்குவிக்கிறது. மனிதத்தன்மையை இழக்கச் செய்த (Dehumanization) ஜாதி அமைப்பிலிருந்து, மீண்டும் மனிதர்களாக நம்மை மீட்டெடுப்பதே (Rehumanization) நமது இலக்கு. அந்தப் புரட்சிப் பாதையில் நாம் தொடர்ந்து நடப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

