தீ பரவட்டும்!

5 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கடந்த சில நாட்களாகவே தொகுதி மறுசீரமைப்பு குறித்தே தேசியளவில் விவாதம் வெடித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன…? ஏன் கடந்த 50 ஆண்டுகளாக இவை செய்யப்படவில்லை.. இப்போது ஏன் இது மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது?

கடந்த நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்துமே மக்கள் தொகை அதிகரிப்பு குறித்தே அதிகம் கவலைப்பட்டன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஒன்றிய அரசு சார்பில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டன. தென் மாநிலங்கள் அதைச் சிறப்பாக அமல்படுத்தி மக்கள் தொகையைக் குறைத்த நிலையில், வட மாநிலங்களில் அதற்குப் பலன் இல்லை.

“மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள், அதுதான் நாட்டுக்கு நல்லது” என்று ஒன்றிய அரசு சொன்னதைக் கேட்டு, கச்சிதமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு இப்போது ‘அரசியல் அதிகாரம்’ குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 50 ஆண்டுக்கால வரலாறு என்ன? ஏன் தொகுதி மறுசீரமைப்பு  நிறுத்தி வைக்கப்பட்டது?

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் விதி. 1952, 1963, 1973 ஆண்டுகளில் அதன்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.

1952-ஆம் ஆண்டு: 494 தொகுதிகள் (1951-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்)

1963-ஆம் ஆண்டு: 522 தொகுதிகள் (1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்)

1973-ஆம் ஆண்டு: 543 தொகுதிகள் (1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்)

எனத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனால், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு ஒரு பெரிய சிக்கல் உருவானது.

1970களில் இந்தியா ‘சிறு குடும்பம் செல்வக் குடும்பம்’ எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி தமிழ்நாடு, கேரளா போன்ற தெற்கு மாநிலங்கள் மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தின. அதேநேரம் வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையாமல் எகிறிக்கொண்டே சென்றது.

ஒருவேளை 1981இல் தொகுதி மறுசீரமைப்பு நடந்திருந்தால், மக்கள் தொகையைக் குறைத்ததற்குப் பரிசாக – தமிழ்நாட்டிற்குத் தொகுதிகள் குறைந்திருக்கும். மாறாக, மக்கள் தொகையை அதிகரித்த உபி-க்கு மிகவும் சாதகமாக தொகுதிகள் கூடி இருக்கும். அரசின் கொள்கையை சரிவரக் கடைப்பிடித்தால் தண்டனையா? கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒன்றிய அரசின் கேடயமும் விருதுமா?

தென் மாநிலங்களின் அச்சத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய ஒன்றிய அரசு, 1976இல் ஒரு அதிரடி முடிவெடுத்தது. இதற்காக புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, “2001ஆம் ஆண்டு வரை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது; 1971 மக்கள் தொகை கணக்கே இறுதியானது” எனத் தொகுதிகள் முடக்கப்பட்டன. மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகத் தங்களது அரசியல் அதிகாரத்தை இழந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

2001-இல் இந்தத் தடை முடிவுக்கு வந்தபோது, நிலைமை இன்னும் மாறவில்லை. தென் மாநிலங்கள் மக்கள் தொகையை மேலும் சிறப்பாகக் குறைத்திருந்தன. ஆனால், வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்தே வந்தது. அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்த போதிலும், மீண்டும் ஒரு 25 ஆண்டுகளுக்கு (அதாவது 2026 வரை) இந்தத் தடையை நீட்டிக்க ஒப்புக்கொண்டது. இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வந்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்.

அந்த 25 ஆண்டுக்கால தடையும் இப்போது (2026-இல்) முடிவுக்கு வருகிறது. 1971இல் இருந்த மக்கள் தொகைக்கும், இன்றைய 2026 மக்கள் தொகைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. 1971-இல் உ.பி.-க்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்த மக்கள் தொகை வித்தியாசம் குறைவு… இன்று உ.பி.-யின் மக்கள் தொகை தமிழ்நாட்டை விடப் பல மடங்கு அதிகம். எனவே, ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பைச் செய்வதில் தீவிரமாக உள்ளது.

‘‘மகளிர் இடஒதுக்கீடு’’ என்ற தேன் தடவிய உருண்டையை ஊட்டுகின்றனர். உள் ஒதுக்கீடுடன் கூடிய மகளிர் ஒதுக்கீட்டை தனியே கொண்டு வரட்டும் – வரவேற்போம்! இரண்டும் ஒன்றல்ல – வேறு வேறு!

புதிய மறுசீரமைப்பு நடந்தால் வட மாநிலங்களின் தொகுதிகள் 70% முதல் 80% வரை அதிகரிக்கும்.. ஆனால் தென் மாநிலங்களுக்கு 30% மட்டுமே அதிகரிக்கும். இது நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் குரலை வலிமையிழக்கச் செய்துவிடும் என்பதுதான் தற்போதைய பதற்றத்திற்குக் காரணம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று  (16.4.2026) சிறப்புக் கூட்டம் நடக்கும் நிலையில், வாதங்கள் அனல் பறக்கும் என்பதில் அய்யமில்லை!

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2021இல்  நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

கரோனா முடிந்த நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததற்கு யார் பொறுப்பு? ஒன்றிய பிஜேபி அரசு தானே!

சூழ்ச்சியும், தந்திரமுமே தன் குருதி ஓட்டமாகக் கொண்ட பிஜேபி எந்த அரசியலமைப்புச் சட்ட வரன்முறைகளையும் கடைப்பிடிக்காமல் தானடித்த மூப்பாக நடந்து வருகிறது.

‘வடக்கு வாழ்கிறது – தெற்கு தேய்கிறது’ என்று ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து குரல் எழுந்தது. இப்பொழுது அவசர அவசரமாக ஒன்றிய பிஜேபி அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு என்பது – அந்த நிலையை சட்டப்படியாகவே ஆக்கும் வேலையில் இறங்கி விட்டது என்பது தெளிவாகவே தெரிந்து விட்டது.

543 உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற கட்டடத்தை மாற்றி, 850 இருக்கைகளைக் கொண்டதாகப் புதியாகக் கட்டப்பட்ட பொழுதே இந்த சந்தேகக் குரல் கிளப்பப்பட்டது.

ஜனநாயக ரீதியில் எதையும் விவாதிப்பது, நாடாளுமன்றக் குழு அமைத்து ஆலோசிப்பது என்ற நடைமுறைகளை பிஜேபியிடம் எதிர்பார்க்க முடியாது – காரணம் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டது. தென் மாநிலங்கள் மட்டுமல்ல; பாதிக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களும் (ஏழு சகோதரிகள்) ஒருங்கிணைந்து – மக்கள் போராட்டம் கிளர்ந்து எழுந்தால்தான் இதற்கு ஒரு தீர்வைக் காண முடியும்!

முதல் கண்டனத்தை நமது முதலமைச்சர் துவக்கிக் கொடுத்துள்ளார். ‘‘நாடெங்கும் இன்று கருப்புக் கொடி ஏற்றுங்கள்’’ என்ற அறிவிப்பு சாதாரணமானதல்ல – அடுத்து வெடிக்கப் போகும் மக்கள் கிளர்ச்சிக்கான தொடு (Button) புள்ளியாகும். கருப்புக் கொடியை ஏற்றியது மட்டுமல்ல; அந்த மசோதா நகலையும் எரித்து தமிழ்நாட்டின் உரிமையை வெளிப்படுத்தினார்.

சென்னை பெரியார் திடலில் கருப்புக் கொடிகளை ஏற்றியதோடு, தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலையும் ஏராளமான கழகத் தோழர்களின் உரிமை முழக்கத்துக்கிடையே எரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி! ஆம், வழக்கம்போல் இந்தியாவுக்கே வழிகாட்டி விட்டது தமிழ்நாடு.

‘தீ பரவட்டும்’ என்றார் அறிஞர் அண்ணா அன்று! இன்று இதோ பரவ ஆரம்பித்து விட்டது!

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர்ந்து, மேலும் பலம் கூடும் நிலையில், நமதுமுதலமைச்சரின் குரலுக்கு மிகப் பலத்த வரவேற்பு மாநிலங்கள் தழுவிய அளவில் கிடைக்கும் என்பதில் அய்யமில்லை!

வாழ்க பெரியார்!, வெல்க திராவிடம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *