‘கல்வி வளர்ச்சி நாள்’ என்பது தமிழ்நாட்டில் பெயரளவுக்குக் கொண்டாடப்படுவதல்ல. தமிழ்நாட்டின் திசை இதுதான் என உலகுக்குச் சொல்லும் நாள் இது!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள், இங்கிருந்த ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு, இம் மண்ணின் குடிகளைக் கல்வி மறுக்கப்பட்டவர்களாக, படித்தால் நாக்கு அறுக்கப்பட வேண்டும் என்று கண்டித்து அடக்கப்பட்டவர்களாக வைத்திருந்த சூழலில், அதே போல வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களால்தான் மீண்டும் கல்வி கிடைக்கத் தொடங்கியது. அக் கல்வியை விரிவாக்கத் தொடங்கியது.நீதிக்கட்சி. அதனை நசுக்க விரும்பினார் ராஜகோபாலாச்சாரியார். பள்ளிகளில் கட்டாயப் பாடமாக ஹிந்தியைத் திணித்தார். ஹிந்தியைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தார் பெரியார்.
மீண்டும் சில ஆண்டுகள் கழித்துக் கொல்லைப் புற வழியாக ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார், 1952 ஜூன் 24 ஆம் நாள், சென்னை திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசும் போது, “அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியது இல்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார். நிதிச் சுமையைக் காரணம் காட்டிப் பள்ளிகளை மூடினார்.
அடுத்த சில மாதங்களில், அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ் “தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைப்பது என்றும், அந்நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில்களைக் கற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கவும் சர்க்கார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த குழந்தைகள் வயல்களிலும், தொழிற் சாலைகளிலும் பிறர் செய்யும் தொழில்களைக் கவனிக்கச் செய்து கற்கச் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது. விவசாயத் தொழில்கள், கொட்டகை போடுதல், செங்கல் அறுப்பு வேலைகள், கிணறுகள் வெட்டுதல் போன்ற பல வேலைகளில் பள்ளிச் சிறுவர், சிறுமியரைப் பழக்கப்படுத்துவது என்பதும் யோசிக்கப்பட்டு வருகிறது” என்று சென்னை சட்டமன்றத்தில் கூறினார். (20.03.1953)
‘புதிய தொழிற்கல்வி’ என்ற பெயரால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தைக் கண்டு கொதித்தெழுந்தார் பெரியார். திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்திலும், மன்னார்குடியில் 1953 ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநாட்டிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி, போராட்டத்துக்கு நாள் குறித்தார் பெரியார். ஜூலை 14-இல் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வ.வீராசாமி தலைமையில் சட்டமன்றத்துக்கு எதிரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அவரையும், அவருடன் சென்ற திராவிடர் கழகத் தோழர்களையும் காவல்துறையினரைக் கொண்டு மோசமாகக் கையாண்டது ராஜாஜி அரசு. அதை எதிர்த்துக் கேட்க சட்டமன்றத்திலும் அனுமதி மறுக்கப்பட்டது. 20-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு முன் மறியல் போராட்டம் அறிவித்தார் பெரியார். இதனிடையில் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பையும் உள்ளடக்கி மும்முனைப் போராட்டத்தை நடத்தியது தி.மு.க (ஜூலை 15).
பின்னர் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை அமைக்கப் பட்டுப் பிரச்சாரம் நாகையிலிருந்து கிளம்பி சென்னை வந்து சேர்வதற்குள், பெரியார் போர்ப் பிரகடனம் போன்ற அறிவிப்பின் விளைவுகளை எதிர்கொள்ளப் பயந்து, பதவியிலிருந்து விலகி ஓடினார் ராஜாஜி.
தந்தை பெரியாரின் பேராதரவோடு முதலமைச்சரானார் காமராஜர். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்; நீதிக்கட்சியால் தொடங்கப்பட்ட முயற்சிகளைத் தடுத்த ராஜாஜியின் தடை நீங்கி, மீண்டும் கல்வி நீரோடையைப் பாயவிட்டார்.
அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும் இதைக் காத்து வளர்க்கும் முயற்சிகள் தொடர்ந்தன, விரிந்தன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டே கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் 2006-இல் அறிவித்தார். அந்தக் கல்வி அனைவருக்கும் சென்று சேரத் தொடர்ந்து போராடியே வருகிறோம். பழைய குலக்கல்வித் திட்டம் ஒன்றிய அரசால் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டால் அதை ஏற்க முடியாது என்று உறுதியுடன் நின்றது திராவிட மாடல் தி.மு.க. அரசு.
அதன் விளைவுகளைத் தான் கல்வி அமைச்சகம்
ஜூலை 7 அன்று வெளியிட்ட ‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ்’ (UDISE+) 2025-2026 அறிக்கை பளிச்சென எடுத்துரைக்கிறது. பள்ளி உள்கட்ட மைப்பு வசதிகளில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் மொத்தப் பள்ளிகளில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 3.9 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், 5 சதவீதத்தினருக்குத் தமிழ்நாட்டின் பள்ளிகள் கல்வி வழங்குகின்றன என்பது மிக முக்கியமான செய்தியாகும்.
தமிழ்நாட்டில் 57,566 பள்ளிகளில், 1,24,02,872 மாணவர்களும் 5,69,909 ஆசிரியர்களும் உள்ளனர்; இங்கு ஒட்டுமொத்த மாணவர்-ஆசிரியர் விகிதம் 22 ஆக உள்ளது, இது தேசிய சராசரியான 24-அய் விடச் சிறந்ததாகும்.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளிலும் 95 சதவீதப் பள்ளிகளில் மின்சார வசதியும், 98.5 சதவீதப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதியும், 97.2 சதவீதப் பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும், 96.9 சதவீதப் பள்ளிகளில் கை கழுவும் வசதியும், 99.5 சதவீதப் பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதியும் உள்ளன. கணினி வசதி கொண்ட பள்ளிகளின் விகிதம் 2024-2025-இல் 64.7 சதவீதத்திலிருந்து 2025-2026-இல் 69.9 சதவீதமாக உயர்ந்துள்ளது; அதே காலகட்டத்தில், இணைய வசதி கொண்ட பள்ளிகளின் விகிதம் 63.5 சதவீதத்திலிருந்து 67.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்ததக்கதாகும்.
இடைநிற்றல் இல்லாத தொடக்கக்கல்வி, அடுத்த கட்ட படிப்புகளுக்குச் செல்வதில் இந்தியாவிலேயே அதிக சதவிகிதம் என்று தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் பெருகி வருகிறது. அதைக் காத்து நிற்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
