எச்சரிக்கை: கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி ஆந்திர எம்.எல்.ஏ. வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம் நூதனக் கொள்ளை! சைபர் குற்றக்கும்பல் கைவரிசை?

போலவரம், மார்ச் 24- ஆந்திர மாநிலம் போலவரம் தொகுதி ஜனசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலராஜு, நூதன சைபர் மோசடியில் சிக்கி, ரூ.12 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.12 லட்சம் கொள்ளை

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி ஆட்சியில், மேற்கு கோதாவரி மாவட்டத்தின் போலவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாலராஜு. கடந்த 6ஆம் தேதி இவரது கைப்பேசிக்கு சாலைப் போக்குவரத்துத் துறையிலிருந்து வருவதைப் போல ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ‘சலான்’ (Challan) என்ற பெயரில் ஒரு கோப்பு (File) இணைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் என நினைத்து பாலராஜு அந்த கோப்பைத் திறந்து பார்த்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 12 லட்சம் ரூபாய் சில நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. பணத்தை இழந்த அதிர்ச்சியில் பாலராஜு தேசிய சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்: சட்டமன்ற உறுப்பினரின் பணம் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம் மய்யம் வாயிலாக எடுக்கப்பட்டுள்ளது.

அவரது கைப்பேசி மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு அளவிலான சைபர் குற்ற கும்பல் இதில் பின்னணியில் இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எச்சரிக்கை: தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்குகள் அல்லது கோப்புகளை (Files) ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா?

மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம்!

சென்னை, மார்ச் 24- சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாக பறவைகள் எதிர்பாராத வகையில் முறையில் உயிரிழந்து வந்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:-

பறவைக் காய்ச்சல் பாதிப்பு 99.9 சதவீதம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது. காகங்கள், புறாக்கள் அதிகளவில் இறந்து கிடந்தால் உடனே தகவல் தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பறவை இறந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏதாவது உள்ளதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டக்கூடாது. இது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நோய் பரவ காரணமாகலாம்.

இறைச்சிக் கடைகள் மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநாசினிகள் தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உட்கொள்வது பாதுகாப்பானது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் பலனில்லை

எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதி

வெளியுறவுக் கொள்கை தோல்வி என விமர்சனம்

சென்னை, மார்ச் 24- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12 ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்தாலும், அதன் மூலம் இந்திய மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபணமாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய ஏழாவது நாளிலேயே, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. போரின் ஒன்பதாவது நாளில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பிரீமியம் பெட்ரோல் மற்றும் தொழில் துறைக்கான எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்படும் சிறு தொழில்கள்

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதன் விளைவாக சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் (Hotels) மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உணவு சார்ந்த இதர சிறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் எரிபொருள் விலை உயர்வால் சிதைந்துள்ளது. “ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய போதே ஒன்றிய அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன்றைய பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம்.

இன்று பெருநகரங்களில் வசிப்பவர்கள் கூட எரிவாயு சிலிண்டர் வாங்க முடியாமல் விறகு அடுப்பிற்கு மாறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரத் தாக்குதல்,” எனப் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *