லண்டன், மார்ச் 22- மத்திய கிழக்கில் மோதல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே இந்த மோதலில் இப்போது பிரிட்டன் உள்ளே வந்துள்ளது.
அமெரிக்காவைத் தனது தளங்களைப் பயன்படுத்தப் பிரிட்டன் அனுமதி கொடுத்துள்ளது. இது மத்திய கிழக்கு மோதலில் மிகப் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் 4ஆவது வாரத்தில் நுழைந்துள்ளது. இப்போது வரை போர் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இரு தரப்புமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், இதனால் ஹார்முஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
திருப்பம்
இதற்கிடையே போரில் மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தாக்கும் ஈரான் ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தனது தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது. இத்தனை காலமாகப் போரில் இருந்து பிரிட்டன் விலகியே இருந்த சூழலில், இது ஒரு முக்கிய கொள்கை மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது இதற்குத் தான் போரில் தங்களுக்கு உதவ வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தார். நேட்டோ நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என அமெரிக்கா வைத்த கோரிக்கையை முதலில் நேட்டோ மறுத்தது. இதனால் கொந்தளித்த டிரம்ப், நேட்டோ நாடுகளைக் கோழை நாடுகள், காகிதப் புலி என்றெல்லாம் விமர்சித்திருந்தார். இந்தச் சூழலில் தான் பிரிட்டன் தனது முடிவை மாற்றியுள்ளது.
அனுமதி
பிரிட்டன் பிரதமர் அலுவலகம் இந்த முடிவை உறுதிப்படுத்தியது. உக்கிரமடைந்து வரும் போர் மற்றும் உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றைச் சீர்குலைக்க ஈரான் செய்யும் முயற்சிகள் குறித்து பிரிட்டிஷ் அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை கூட்டுப் பாதுகாப்பின் கீழ் வருகிறது என்றும் பிரிட்டன் அரசு கூறியது.
இது தொடர்பாகப் பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘பிராந்தியத்தின் கூட்டுத் தற்காப்புக்காக இங்கிலாந்துத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி தரப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைத் தளங்கள் மற்றும் திறன்களைக் குறைப்பதற்கான அமெரிக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலைப்பாடு மாறியது
இந்த ஒப்புதல் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் வேறு விதமான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதாவது தனக்கு உறுதிமொழிகள் தேவை என்றும் ஈரான் உடனான போரில் பிரிட்டன் நேரடியாக ஈடுபடாது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால், மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்திய பின்னர் ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அமெரிக்கா படைகள் தனது ஆர்.ஏ.எப். பெஃயர் போர்டு (RAF Fairford) தளத்தையும், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்கா – இங்கிலாந்து கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவையும் பயன்படுத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.
டிரம்ப்
அதேநேரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முடிவைப் பெரியளவில் வரவேற்கவில்லை. இது தாமதமான பதில் என்றே விமர்சித்தார். அவர் மேலும், ‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இவ்வளவு நேரம் எடுத்தது ஆச்சரியம் தருகிறது. அவர்கள் இதை இன்னும் விரைவாகச் செய்திருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு இருந்து வருகிறது. ஆனாலும், இவ்வளவு தாமதப்படுத்தியது சரியில்லை” என்றார்.
ஈரான் எச்சரிக்கை
இதற்கிடையில், பிரிட்டனின் இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாக எதிர்த்துள்ளது. அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், பிரிட்டிஷ் மக்களின் உயிர்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக ஈரான் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் மேலும், “ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கப் போரில் பிரிட்டிஷ் மக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது தனது சொந்த மக்களைப் புறக்கணித்து, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து துணை போய் இருக்கிறது. இதன் மூலம் ஸ்டார்மர் பிரிட்டிஷ் மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளுகிறார்” என விமர்சித்துள்ளார்.
