பெங்களுரு, மார்ச் 20- இந்தியாவில் கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புச் சூழல் குறித்த கவலைக்குரிய புள்ளிவிவரங்களை பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் தனது ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு 2026’ என்ற அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் கல்வித் திட்டங்களின் தோல்வியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பட்டதாரி இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
2004இல்: வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்தது.
2023இல்: இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்து 67 சதவீதம் எட்டியுள்ளது.
உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் புதிய பட்டதாரிகள் வேலைச்சந்தைக்குள் நுழைகின்றனர். ஆனால், அவர்களில் பாதி பேருக்கு (சுமார் 28 லட்சம்) மட்டுமே ஏதோ ஒரு பணி கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக: வெறும் 15 லட்சம் பேருக்கு மட்டுமே நிலையான ஊதியத்துடன் கூடிய முறையான வேலைகள் கிடைக்கின்றன.
மீதமுள்ளவர்கள் தற்காலிகப் பணிகளிலும், கல்வித் தகுதிக்குத் தொடர்பில்லாத குறைந்த ஊதியப் பணிகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொலைநோக்குப் பார்வையில்லாத திட்டங்கள் மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற புதிய சிந்தனைகள் கொண்ட தலைவர்கள் இல்லாததே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்த ஒன்றிய அரசு, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை உருவாக்கத் தவறியதே இந்தப் பேரழிவிற்கு அடிப்படை எனப் பொருளாதார வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். கல்வித் தகுதிக்கும், சந்தையில் உள்ள வேலை வாய்ப்புக்கும் இடையிலான இந்த மிகப்பெரிய இடைவெளி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இளைஞர் களின் ஆற்றல் வீணடிக்கப்படுவது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரட்டை எஞ்சின் உ.பி. சர்க்காருக்கு
‘திராவிட மாடல்’ அரசு எடுக்கும் பாடம்
‘திராவிட மாடல்’ அரசு எடுக்கும் பாடம்
மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க தமிழ்நாட்டில் உ.பி. அதிகாரிகள் கள ஆய்வு!
சென்னை, மார்ச் 20- இந்தியாவிலேயே மருத்துவக் கட்டமைப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டின் திட்டங்களைக் கண்டறிய உத்தரப் பிரதேச மாநிலத்தின் உயர்மட்டத் திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாடு வந்துள்ளனர். மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR) குறைப்பதில் தமிழ்நாடு படைத்துள்ள சாதனையைத் தங்கள் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்துவதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும்.
மகப்பேற்றின் போதோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ தாய்மார்கள் உயிரிழக்கும் எண் ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே மகப்பேறு இறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. இதில் இரு மாநிலங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது:
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மகப்பேற்றில் வெறும் 01 விழுக்காடு உயிரிழப்பு மட்டுமே பதிவாகி உள்ளது ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 15 விழுக்காடாக உள்ளது உத்தரப் பிரதேசத்தில் நிலவும் இந்த இக்கட்டான சூழலைச் சரிசெய்ய, “இரட்டை எஞ்சின்” அரசுக்குத் தமிழ்நாட்டின் “திராவிட மாடல்” திட்டங்கள் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்தித்த உ.பி. குழுவினர், இங்கு மகப்பேறு மரணங்கள் இவ்வளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். குறிப்பாக, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், தாய் – சேய் நல விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களின் தொடர் கண்காணிப்பு, 108 ஆம்புலன்ஸ் சேவையின் துரித செயல்பாடு போன்றவைகளால் தமிழ்நாடு அரசு இந்தச் சாதனையை எட்டி உள்ளது.
தமிழ்நாடு சுகாதார அலுவலர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து, இக்குழுவினர் இன்று (20.3.2026) மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்கின்றனர். அங்கு மகப்பேறு காலப் பராமரிப்பு, அவசர சிகிச்சை முறைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
“மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசியல் கடந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதற்கு இந்த ஆய்வே சாட்சியாகும்”.
தனியார் இடங்களில் தொழுகை நடத்தக் கூடாதா – தடை விதிக்க முடியாது!
அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அலகாபாத், மார்ச் 20- தனியாருக்கு சொந்தமான இடங்களில் தொழுகை நடத்துவதற்கு உ.பி.யில் சம்பல் உள்ளிட்ட சில மாவட்டங்கள் தடை விதித்தன. இந்த சூழலில் சம்பல் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முனாசீர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் அத்துல் – தர், சித்தார்த் நந்தன் அமர்வு நேற்று (19.3.2026) வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின் 25ஆவது பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் முழு உரிமை அளிக்கிறது. எனவே, எந்தவொரு நபரும் தனது சொந்த வளாகத்தில் நடத்தும் பிரார்த்தனைகளையோ அல்லது மதச் சடங்குகளையோ தடை செய்ய முடியாது. தனியார் இடங்களில் நடைபெறும் பிரார்த்தனைகளுக்கு தனி நபர் அல்லது குழுக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை அரசு கவனத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முனாசீர் கான் அனுமதி கேட்ட நிலம் 1995அல் மசூதி கட்ட அவரது தாத்தாவால் ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த இடத்தில் உள்ள கட்டமைப்பை முழு மசூதியாக நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால், அங்கு தொழுகை நடத்துவதை தடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
